Published:Updated:

திருச்செந்தூர்: ஆவணித் திருவிழா கொடியேற்றம்... 10 நாள் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

ஆவணித்திருவிழா கொடியேற்றம்
ஆவணித்திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை திருவிழா நாள்களில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் டாக்டர். செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். எப்போதும் கடலென பெருங்கூட்டம் முருகனின் தரிசனத்துக்காகத் திரளும் புண்ணிய பூமி திருச்செந்தூர். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது பக்தர்களின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் ’ஆவணி திருவிழா’, ‘ மற்றும் ’மாசித்திருவிழா’ என இரண்டு பிரமோற்சவத் திருவிழாக்கள் மிக முக்கிய திருவிழாக்களாகும்.

கொடிப்பட்ட ஊர்வலம்
கொடிப்பட்ட ஊர்வலம்

முன்காலத்தில் இப்பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களின் தரிசனத்திற்காக நடத்தப்பட்ட மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா. மாசித்திருவிழாவைப்போல ஆவணத்திருவிழாவும் 12 நாள்கள் நடைபெறும். ஆனால், குமரவிடங்கப்பெருமான் பெரியதேரில் வலம்வருதலுக்குப் பதிலாக சிறியதேரில் வலம் வருவார். தெப்ப உற்சவமும் நடைபெறாது. ஆவணித் திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் நடைபெறும்.

இங்குள்ள சண்முகர், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் புரியும் பிரம்மா, விஷ்ணு ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பவர். அவரை அந்த வடிவத்திலேயே வழிபடும் அற்புதத் திருவிழாதான் இந்த ஆவணித் திருவிழா. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா, இன்று (27.08.21) காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, நேற்று (26.08.21) மாலையில் உள்ள தூண்டுகை விநாயகர் கோயிலில் பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டம், யானை மீது வெளிப்பிராகாரம் சுற்றிக் கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

கொடியேற்றம்
கொடியேற்றம்

1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு, கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் விசேஷ ஷோச தீபாராதனை நடைபெற்றது. இன்று தொடங்கி, வரும் செப்டம்பர் 7-ம் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம் நாளான வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி, இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொதிக்கும் அரிசிக் கஞ்சியை தலையில் ஊற்றும் வேட்டைப்பானைத் திருவிழா... இதில் என்னவெல்லாம் நடக்கும்?

7-ம் நாள் திருவிழாவான, செப்டம்பர் 2-ம் தேதி காலை 5.30 மணிக்கு, சுவாமி ஆறுமுகநயினார் உருகுசட்ட சேவையும், 9-மணிக்கு சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி அலங்காரத்திலும் எழுந்தருளி வீதியுலாவருதலும் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவான வரும் 3-ம் தேதிகாலை 5 மணிக்கு, சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளிச்சப்பரத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி அலங்காரத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய கோயில் வளாகம்
பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய கோயில் வளாகம்

இத்திருவிழா நாள்களில், தினமும் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள் பிராகாரத்தில் வீதியுலாவாக வலம் வருதல் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஆவணித் திருவிழாவில் கொடியேற்ற நாளான இன்று முதல் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை திருவிழா நாள்களில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு