Published:Updated:

நவராத்திரி 2020: அவள் விகடன் வழங்கும் கொலு பொம்மை தயாரிப்புப் பயிற்சி!

நவராத்திரி காலகட்டத்தில் இது போன்று பொம்மை தயாரிப்புக்கான பயிற்சி வகுப்பில் இணைந்து நீங்களும் பொம்மைகள் செய்யக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? கவலையை விடுங்க...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைத் தேடித் தேடிச் செய்யும்போது வெற்றியை ரொம்ப எளிதா வசப்படுத்திக்கொள்ள முடியும். நம்முடைய செயல்கள் தனித்துவமாக இருக்கும்போது வெற்றிக்குப் பிறகும் அதைத் தக்க வைப்பது இன்னும் எளிது" - தன்னம்பிக்கை பொங்கப் பேசுகிறார் ஆண்டாள் ஆள்வான். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 20 வருடங்களாக கிராஃப்ட் வேலைப்பாடுகள் செய்து வருகிறார். சமீப காலமாகப் பொம்மை தயாரிப்பை (Doll Making) பிசினஸாக செய்துவரும் ஆண்டாள் தன்னுடைய வெற்றி குறித்து நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

கொலு பொம்மைகள்
கொலு பொம்மைகள்

``எனக்கு சின்ன வயசில் இருந்தே கிராஃப்ட் மீது ஆர்வம் அதிகம். வெளியிடங்களில் ஏதாவது கைவினைப் பொருளைப் பார்த்தால், அதை எப்படிப் பண்ணியிருக்காங்கனு பார்த்துட்டு வந்து அதே மாதிரி செய்து பார்ப்பேன். தேடினதும் வீடியோ வர்ற மாதிரி யூடியூப்லாம் அந்தக் காலத்தில் கிடையாது. நிறைய தவறுகளுக்குப் பிறகுதான் ஒரு கைவினைப் பொருளைச் செய்து முடிக்க முடியும்.

கோலம் போடுறது எனக்குப் பிடித்த விஷயம். அந்த ஆர்வத்தில் தான் பெயின்டிங் கத்துக்க ஆரம்பிச்சேன். கிளாஸ் பெயின்டிங், தஞ்சாவூர் பெயின்டிங், ஃபேப்ரிக் பெயின்டிங் என நிறைய வகை ஓவியங்களைக் கத்துக்கிட்டு வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன். என் தோழிகள் மூலமாக டால் மேக்கிங் எனக்கு அறிமுகமானது. டால் மேக்கிங்கைப் பொறுத்தவரை, சில மணி நேரத்திலேயே யார் வேண்டுமானாலும் ரொம்ப எளிமையாகக் கத்துக்க முடியும்.

டால் மேக்கிங்னு சொன்ன உடன் நம்முடைய மனசுக்குள்ள முதலில் சாஃப்ட் டாய்ஸ்தான் வந்துபோகும்.

கொலு பொம்மைகள்
கொலு பொம்மைகள்

நாங்கள் செய்வது சாஃப்ட் டாய்ஸ் இல்லை. நம்முடைய பாரம்பர்யமான பொம்மைகளைத் தயார் செய்கிறேன். குழந்தைகள் பயன்படுத்தும் ஃபேன்சி பொம்மையை டிரெடிஷனலான பொம்மை போன்று எப்படி அலங்கரிப்பது, கட்டுக் கம்பியில் பழைய துணிகள் பயன்படுத்தி தெய்வங்களின் உருவங்கள் செய்வது, பழைய துணியில் பொம்மைகள் தயாரிப்பது என மூன்று வகை பொம்மைகள் தயார் செய்கிறேன். ஆரம்பத்தில் என் தோழிகள், உறவினர்கள் மூலமாகதான் விற்பனை செய்யத் தொடங்கினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு நானே புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பிச்சேன். நிறைய பேர்கிட்ட இருந்து பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்ததோடு, ஆர்டர்களும் வர ஆரம்பிச்சுது.

கொலு பொம்மைகள்
கொலு பொம்மைகள்

பொம்மைகளில் இருக்கும் வேலைப்பாடுகளைப் பொறுத்து 300 ரூபாயிலிருந்து 1,500 வரை விலை வெச்சு விக்கிறேன். ஒரு பொம்மை செய்ய 2 மணி நேரம் ஆகும். ஆர்டர்களுக்கு ஏற்ப ஒரு நாளைக்கு ஐந்து பொம்மைகள் வரை செய்வேன். நிறைய பேர் பயிற்சி வகுப்புகளுக்கும் வர்றாங்க. அதுமட்டுமல்ல நிறைய இடங்களிலிருந்து ரிட்டன் கிஃப்ட்டுக்கான ஆர்டர்களும் வருது.

இது நவராத்திரி நேரம் என்பதால் கொலுவிற்காக நிறைய பேர் இப்போ பயிற்சி வகுப்புகளுக்கு வர ஆரம்பிச்சுருக்காங்க. பொம்மைத் தயாரிப்பில் உள்ள அடிப்படை விஷயங்களை மட்டும் கற்றுக்கொண்டால் அதன்பின் நம்முடைய கற்பனைத் திறனுக்கு ஏற்ப நாமே பொம்மைகளை டெக்கரேட் செய்ய முடியும். வீட்டிலிருந்தே மாதம் 30,000 வரை லாபம் சம்பாதிக்கலாம்" என தன்னம்பிக்கை குறையாமல் முடிக்கிறார் ஆண்டாள்.

இலவச பயிற்சி வகுப்பு
இலவச பயிற்சி வகுப்பு

நவராத்திரி காலகட்டத்தில் இது போன்று பொம்மை தயாரிப்புக்கான பயிற்சி வகுப்பில் இணைந்து நீங்களும் பொம்மைகள் செய்யக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? கவலையை விடுங்க...

அவள் விகடன் வழங்கும் ஆன்லைன் நவராத்திரி திருவிழா 2020 - கொலு பொம்மை தயாரிப்பு பயிற்சி அக்டோபர் 12-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் ஆண்டாள் ஆள்வான் பங்கேற்று பொம்மை தயாரிக்கும் பயிற்சி அளிப்பார். இந்தக் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு