கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த இரண்டு திருவிழாக்களில் தமிழகத்தை தாண்டியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனித் திருமஞ்சன திருவிழாவிற்கான கொடியேற்றம் ஜூலை 6-ம் தேதியும், தேரோட்டம் ஜூலை 14-ம் தேதியும், ஆனித் திருமஞ்சன திருவிழா 15-ம் தேதியும் நடைபெறும் என்று கோயில் தீட்சிதர்கள் அழைப்பிதழை அச்சடித்திருந்தனர். இந்நிலையில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தலைமையில் நடைப்பெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்தக் கூட்டத்தின் முடிவில், “தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் குடமுழக்குகள் உள்ளிட்டவைக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் திருவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லை. 12-ம் தேதிக்குப் பிறகு கோயில்களில் திருவிழாக்களை நடத்த அரசு அனுமதி அளித்தால் 14-ம் தேதி தேரோட்டமும், 15-ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை நடத்த அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட புதிய ஊரடங்கு தளர்வில் வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளித்திருந்தது. அதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை சிதம்பர நடராஜர் கோயில் திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயிலின் வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தம் செய்த பின்னரே கோயிலின் உள்ளே உள்ள செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர்.
அதையடுத்து நேற்று காலை பாரம்பர்ய திருவிழாவான ஆனித் திருமஞ்சன திருவிழாவை கொடியேற்றத்துடன் தீட்சிதர்கள் துவக்கி வைத்தனர். பக்தர்கள், பொதுமக்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த விழாவில் தீட்சிதர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். கொடியேற்றம் முடிந்த பின்னர் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வருகின்ற 14-ம் தேதி தேரோட்டத்திற்கும், அதற்கு மறுநாள் நடைபெறவிருக்கும் ஆனித் திருமஞ்சன திருவிழா தரிசனத்துக்கும் அரசு அனுமதி அளிக்குமா என்று காத்திருக்கின்றனர் பக்தர்கள்.