கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த இரண்டு திருவிழாக்களில் தமிழகத்தைத் தாண்டியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனித் திருமஞ்சன திருவிழாவிற்கான கொடியேற்றம் ஜூலை 6-ம் தேதியும், தேரோட்டம் ஜூலை 14-ம் தேதியும், ஆனித் திருமஞ்சன திருவிழா 15-ம் தேதியும் நடைபெறும் என்று கோயில் தீட்சிதர்கள் அழைப்பிதழை அச்சடித்திருந்தனர். இந்நிலையில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தலைமையில் நடைப்பெற்றது.
அந்தக் கூட்டத்தில் கோயில் சார்பில் கலந்துகொண்ட மூன்று தீட்சிதர்கள் சார் ஆட்சியர் மதுபாலனிடம் சில நிமிடங்கள் ஆலோசனை செய்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு பேசிய சார் ஆட்சியர் மதுபாலன், “தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் குடமுழக்குகள் உள்ளிட்டவைக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் திருவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லை. 12-ம் தேதிக்குப் பிறகு கோயில்களில் திருவிழாக்களை நடத்த அரசு அனுமதி அளித்தால் 14-ம் தேதி தேரோட்டமும், 15-ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையும் நடத்த அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.