Published:Updated:

மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை நடை திறப்பு... பம்பையில் குளிக்க அனுமதி மறுப்பு!

கேரளத்தில் மழைக் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பசாமி கோவிலில் மண்டல மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி முதல் சன்னிதானத்தில் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தமிழ் கணக்குப்படி கார்த்திகை மாதம் 1-ம் தேதி பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்குவார்கள். கார்த்திகை மாதம் 1-ம் தேதி சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளைதான் கார்த்திகை மாதம் பிறக்கிறது. ஆனால் இந்த ஆண்டு மலையாளத்தின் விருச்சிகம் மாதம் 1-ம் தேதி இன்று தொடங்கியதால் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தினமும் 25000 பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சபரிமலை சன்னிதானத்திற்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கான ஆன்லைன் புக்கிங் கடந்த மாதமே தொடங்கப்பட்டுவிட்டது.

சபரிமலை
சபரிமலை

கொரோனா இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுசெல்லும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பம்பையில் நீராடுவதற்கும் நெய் அபிஷேகம் செய்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படிருந்தது. ஆனால், தீவிர மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பம்பையில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் குறைந்ததும் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட உள்ளது. சன்னிதானத்தில் தேவசம் போர்டு மற்றும் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் நெய்யபிஷேகம் இன்று முதல் தொடங்கியது. பக்தர்கள் இருமுடிக் கட்டில் கொண்டு செல்லும் தேங்காயை தேவசம்போர்டு கவுன்ட்டரில் கொடுக்கவேண்டும். ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்த நெய்யைப் பக்தர்கள் வாங்குவதற்காக தனி கவுண்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் 25000 பக்தர்கள் சாமிதரிசனம் செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இன்று பத்தாயிரத்துக்கும் குறைவான பக்தர்களே ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர். அதே சமயம் சுமார் எட்டாயிரம் பக்தர்களே சபரிமலை வந்திருந்தனர். கேரளத்தில் மழைக் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறப்படுகிறது.

சபரிமலையில் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்
சபரிமலையில் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்

இது ஒருபுறம் இருக்க சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுசீராய்வு செய்யும் மனுக்கள் விசாரணையில் உள்ளன. அந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மகேஷ்வரருவின் மனைவி தேவகி அந்தர்ஜனம் என்பவர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பக்தர்களின் விருப்பத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தேவகி அந்தர்ஜனம் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு