Published:Updated:

திருநள்ளாறு: நீண்ட இடைவெளிக்குப்பின் சனிபகவானை தரிசனம் செய்யக் குவிந்த பக்தர்கள்!

இன்று சனிக்கிழமையையொட்டி எதிர்பார்ப்பைவிட பக்தர்கள் அதிகமாக வந்துள்ளனர். தீபாவளி விடுமுறையால் வெள்ளிக்கிழமை காலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.

தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் சனிக்கிழமையான இன்று (06.11.2021) திருநள்ளாறில் சனிபகவானை தரிசனம் செய்தனர்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் பிரசித்திபெற்ற ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சனிபகவான் அனுகிரஹ மூர்த்தியாக தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

திருநள்ளாறு
திருநள்ளாறு

எப்போதும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொற்று ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் காரணமாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இன்று சனிக்கிழமையையொட்டி எதிர்பார்ப்பைவிட பக்தர்கள் அதிகமாக வந்துள்ளனர். தீபாவளி விடுமுறையால் வெள்ளிக்கிழமை காலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கிவிட்டனர். சனிக்கிழமை அதிகாலை முதல் திருநள்ளாறு வடக்கு வீதி, தெற்கு வீதிகளில் நீண்ட வரிசையாகக் காத்திருந்து கோயிலுக்குச் செல்கின்றனர்.

எளிதில் தரிசனம் செய்து திரும்பும் வகையில் போலீஸார், கோயில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு விதிகளின்படி அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதைக் கண்காணித்த பின்பே கோயிலுக்குள் அனுமதிக்கின்றனர்.

திருநள்ளாறு
திருநள்ளாறு

மூலவர் தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்யும் வகையில் வரிசை தடுப்பு அமைப்பு செய்யப்பட்டுள்ளது.

நளன் தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்குத் தண்ணீர் விடாததால், பக்தர்கள் பலரும் குளக்கரைக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் தனியார் கட்டடத்தில் ரூ.50, ரூ.100 கட்டணம் செலுத்தி நீராட வேண்டிய சூழல் உள்ளது.

வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் "சில மணி நேரம் வரிசையில் நின்றாலும் திருப்தியாக சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது" என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு