Published:Updated:

கோயில் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் பணி தொடங்கியது!

கோயில்
கோயில்

18.5.21 அன்று நடைபெற்ற கூட்டத்தில் திருக்கோயில் ஆவணங்களை இணையத்தில் வெளியிடுதல் மற்றும் ஆவணங்களை டிஜிட்டல் மயம் செய்து பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்து அறநிலையத்துறை சார்பில் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டம் இன்று இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இதை அந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் 44,121 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு சொந்தமான பல லட்சம் ஏக்கர் நிலங்களும் வீடுகளும் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அகற்ற ஆவணப்படுத்துதல் அவசியமாகிறது. இதற்கான 18.5.21 அன்று நடைபெற்ற கூட்டத்தில் திருக்கோயில் ஆவணங்களை இணையத்தில் வெளியிடுதல் மற்றும் ஆவணங்களை டிஜிட்டல் மயம் செய்து பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

ஆவணங்கள்
ஆவணங்கள்

இதையடுத்து, இன்று அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் விதமாக பழைமையான ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றும் பணியினை அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தொடங்கிவைத்தார். இதன் மூலம் திருக்கோயில்கள் மற்றும் அலுவலகங்களில் இருக்கும் பழைமையான ஆவணங்கள், பதிவேடுகள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.

இந்த நடைமுறை, துறைசார் அலுவலகங்கள் அனைத்திலும் இருக்கும் நீண்டகாலக் கோப்புகள் அனைத்தையும் ஸ்கேன் செய்து பாதுகாக்கப்படும் விதமாக விரிவுபடுத்தப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்வைத் தொடங்கிவைத்த சேகர்பாபு பின் செய்தியாளரை சந்தித்தார். அப்போது, “அழிவிலிருந்து பழைமையான ஆவணங்களைப் பாதுகாக்க இந்த டிஜிட்டல் முறை படியெடுப்பைத் தொடங்கியிருக்கிறோம். இந்தப் பணி ஆறு மாதங்களில் முழுமையாக முடிக்கப்படும். அதன்பின் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் செயலிகளின் மூலம் அவற்றைக் காணலாம்” என்று தெரிவித்தார்.

சேகர் பாபு
சேகர் பாபு

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கூடுதல் ஆணையர் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு