Published:Updated:

திண்டுக்கல்: ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஒரே காவடி; நூறு ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்! 

ஒரெயொரு காவடி

கிராமத்தின் சார்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழிவழியாக இந்தக் காவடியை எடுக்கின்றனர். தற்போது மூன்றாவது தலைமுறையாக பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி என்பவர் காவடி எடுத்து வருகிறார்.

திண்டுக்கல்: ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஒரே காவடி; நூறு ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்! 

கிராமத்தின் சார்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழிவழியாக இந்தக் காவடியை எடுக்கின்றனர். தற்போது மூன்றாவது தலைமுறையாக பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி என்பவர் காவடி எடுத்து வருகிறார்.

Published:Updated:
ஒரெயொரு காவடி
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள தாதயன்கோட்டை கிராமத்தை சேர்ந்த மக்கள், தங்கள் ஊர் சார்பாக 'ஒரே ஒரு காவடி'யைப் பழநிக்குக் கொண்டு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்தப் பாரம்பர்ய வழக்கம், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் தாதயன்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியிருந்த கிராம மக்களுக்கும் இது ஒன்றே காவடியாக இருந்தது. காலப்போக்கில் அந்த வழக்கம் மறைந்து, மற்ற கிராமத்தினரும் தங்களின் வசதிக்கு ஏற்பத் தாங்களாகவே காவடி எடுக்கும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், தாதயன்கோட்டை கிராம மக்கள், ஒட்டுமொத்த கிராம மக்கள் சார்பாக காவடி எடுக்கும் வழக்கத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

அருள் தரும் பழநி முருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடக்கக் காலங்களில் கூட்டுச் சமூகமாக வாழ்ந்த மக்கள் தொடங்கி வைத்த வழக்கம் இது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலருக்கும் பழநியில் அருளும் ஸ்ரீ தண்டாயுதபாணிதான்  ஆத்மார்த்த இஷ்ட தெய்வம். எனவே, அவருக்குப் பிரியமான 'ஆறுமுக தீர்த்தக் காவடி' எடுத்துச் சென்று, அதில் அவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாகச் செய்து வந்தனர். இவ்வாறு செய்வதால் 'தங்களின் வாழ்க்கை குறைவின்றி இருக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும். நல்லது நடக்கும்' என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. எனவேதான், ஆண்டு தவறாமல் இந்த வழக்கத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கடைப்பிடித்து வந்தனர். அதன் நீட்சியே இன்றும் தொடர்கிறது.

ஒரெயொரு காவடி
ஒரெயொரு காவடி

100 ஆண்டுகளுக்கும் மேலாக...

கிராமத்தின் சார்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழிவழியாக இந்தக் காவடியை எடுக்கின்றனர். தற்போது மூன்றாவது தலைமுறையாக பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி என்பவர் காவடி எடுத்து வருகிறார். 70 வயதான இவர், கடந்த 40 ஆண்டுகளாகக் காவடி எடுத்து வருவதாகச் சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

'ஸ்ரீ ஆறுமுக தீர்த்தக் காவடி' எனப்படும் இந்தக் காவடியை எடுப்பதற்கு சில சம்பிரதாயங்கள் உள்ளன. முதல் நாளன்று தாதயன்கோட்டையில் இருந்து காவடி எடுத்துக் கிளம்பும் பக்தரின் வாயில் அலகு குத்தப்படும். அவரோடு சேர்ந்து கிராம மக்களும் தீர்த்தம் எடுக்கக் கொடுமுடி செல்வர். அங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமகுடேஸ்வரரை வழிபட்டு, ஆற்றில் தீர்த்தம் எடுத்துக் காவடியில் வைத்துக் கொள்வர். பின், அங்கிருந்து தாதயன்கோட்டை திரும்புவர். அப்போது, வழியில் உள்ள கோயில்களிலும் வழிபாடுகள் நடக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தங்கள் கிராமத்துக்குக் கொடுமுடி தீர்த்தத்தோடு வந்த காவடிக்கு, தேங்காய், பழம் படைத்து கிராம மக்கள் அனைவரும் பூஜித்து வழிபடுவர். பின் அங்கிருந்து ரெட்டியார்சத்திரம் வழியாக பழநிக்குப் பாத யாத்திரையாகச் சென்று காவடியை செலுத்துகின்றனர்.

ஆறுமுக தீர்த்தக் காவடி
ஆறுமுக தீர்த்தக் காவடி

5 நாள்கள் விழா

விழா தொடங்கிய நாளிலிருந்து 5 நாள்கள் இந்த வைபவம் நடக்கும். கடந்த வியாழன் அன்று கிளம்பிய பக்தர்கள், இன்று பழநி வந்தடைந்தனர். ஊரில் கிளம்பியதிலிருந்து பழநி வரும் வரையிலும் கிராம மக்கள் வீட்டில் சமைத்து சாப்பிடுவது கிடையாது. பழநி முருகனுக்கு வேண்டிக்கொண்ட பக்தர்கள் தினந்தோறும் உணவு வழங்கி விடுகின்றனர். இவர்களுக்காகவே பிரத்யேகமாக வழி நெடுகிலும் அன்னதானங்களும் உண்டு.

காவடி எடுக்கும் முதல் நாளில் வாயில் அலகு குத்திக் கொள்ளும் பக்தர், மீண்டும் காவடியைப் பழநியில் செலுத்தும்வரை 5 நாள்களும் வாயில் அலகு குத்திய நிலையிலேயே இருப்பார். இந்த நாள்களில் அவருக்கு அன்னம், ஆகாரம் எதுவும் கிடையாது. நீராகாரம் மட்டும் அவ்வப்போது வழங்கப்படும். இவ்வாறு கடுமையான விரதம் இருந்து பழநி முருகனுக்கு இந்த ஆறுமுக தீர்த்தக் காவடியைச் செலுத்துகின்றனர். ஒட்டுமொத்த கிராம மக்களின் சார்பாக காவடி எடுத்து வரும் பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார். எனவே கிராம மக்கள் அவருடன் சேர்ந்து பய பக்தியுடன் பழநி வருகிறார்கள்.

இவ்வாறு தலைவன் கோட்டை கிராம மக்கள் காவடியில் கொண்டு வந்த தீர்த்தத்தை, பழநி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்து, இன்று பாதயாத்திரையை நிறைவு செய்தனர். 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இந்த விழா 15 நாள்கள் வரை நடந்திருக்கிறது. இந்த 15 நாள்களும் தாதயன்கோட்டை கிராமத்தில் தொடங்கி, கொடுமுடி சென்று அங்கிருந்து பழநிவரை பாதயாத்திரையாகவே வந்துள்ளனர். காலப்போக்கில், இப்போது 5 நாள்களாக இவ்வைபவம் சுருங்கி உள்ளது. ஆனாலும் தங்களது முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பர்யத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர் இந்தக் கிராம மக்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism