Published:Updated:

திருவண்ணாமலை: 1,200 ஆண்டுகள் பழைமையான பல்லவர் காலத்து ஐயனார் சிற்பம் கண்டுபிடிப்பு!

அய்யனார் சிற்பம்

"1,200 வருடங்கள் பழைமையான இந்தச் சிற்பம் வெயிலிலும், மழையிலும் பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தபடியே காணப்படுகிறது. அதனால் இச்சிற்பத்தின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது."

திருவண்ணாமலை: 1,200 ஆண்டுகள் பழைமையான பல்லவர் காலத்து ஐயனார் சிற்பம் கண்டுபிடிப்பு!

"1,200 வருடங்கள் பழைமையான இந்தச் சிற்பம் வெயிலிலும், மழையிலும் பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தபடியே காணப்படுகிறது. அதனால் இச்சிற்பத்தின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது."

Published:Updated:
அய்யனார் சிற்பம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், மிகவும் பழைமையான சின்னங்கள் தொடர்ச்சியாகக் கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தெள்ளார் அருகே உள்ள ஒரு சிறு கிராமம் ஒன்றில் 1,200 வருடங்கள் பழைமையான பல்லவர் காலத்து ஐயனார் சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தை திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட இந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம்,

"நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கும் பாரதிராஜா என்பவர் அளித்த தகவலின் பேரில் நண்பர்களுடன் இணைந்து நல்லூருக்குச் சென்றோம். நல்லூரில் இருந்து பெரியகுப்பம் செல்லும் சாலையில் இடது புறமாக உள்ள விவசாய நிலம் ஒன்றில் மண்ணில் சாய்ந்தபடி ஒரு பலகைச் சிற்பம் காணப்பட்டது. அந்தச் சிற்பத்தை சுத்தம் செய்து ஆய்வு செய்தபோது, அது பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஐயனார் சிற்பம் என்பதைக் கண்டறிந்தோம்.

வயல்வெளி பகுதியில் கிடக்கும் ஐயனார் சிற்பம்
வயல்வெளி பகுதியில் கிடக்கும் ஐயனார் சிற்பம்

சுமார் 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளார் ஐயனார். அழகிய ஜடாபாரம் தலையை அலங்கரிக்க, வட்டமான முகமும், இரு காதுகளில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். உருளையான மணிகள் கோக்கப்பட்ட சரப்பள்ளி போன்ற மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு இருக்கைகளிலும் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து அழகுற காணப்படுகிறார். அதேபோல, உத்குதிகாசன கோலத்தில் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். இடையில் உதிரபந்தமும், இடை ஆடையில் உறையுடன் கூடிய குறுவால் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. வலது கையை வலது காலின் முட்டி மீது வைத்து தாங்கியபடி, கரத்தில் செண்டை பற்றிக்கொண்டுள்ளார். இடது கையைத் தொடை மீது வைத்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐயனாரின் வாகனமாக குதிரை அவரது இடது காலின் அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஐயனாருக்கு இடப்புறமாக, தலைப்பகுதியில் லிங்கம் உள்ளதை போன்ற குத்துவிளக்கு ஒன்று காணப்படுகிறது.

இந்தச் சிற்பத்தின் அமைதியையும், அதில் காட்டப்பட்டுள்ள அணிகலன்களையும் வைத்துப் பார்க்கையில் இச்சிற்பம் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பல்லவர்களின் காலத்தியதாக இருக்கக் கூடும் என்று கருதலாம். சுமார் 1,200 வருடம் பழைமையான சிற்பம் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்பட்டுப் பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தபடியே உள்ளது. இதனால் இந்தச் சிற்பத்தின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இச்சிற்பம் சாய்ந்தபடியே இருப்பதை பார்த்து வந்த இப்பகுதி மக்கள், ஒரு நம்பிக்கையின் காரணமாக இந்த ஐயனார் சிற்பத்தை அப்படியே வைத்து வழிபடுகின்றனர்.

பிற்காலத்திய விஷ்ணு சிலை
பிற்காலத்திய விஷ்ணு சிலை

இந்த ஐயனார் சிற்பத்தின் தொன்மையையும், அது பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அங்கு உள்ளவர்களிடம் விளக்கிக் கூறியபோது விரைவில் இதனைச் சரி செய்து முறையாகப் பாதுகாப்பதாக எங்களிடம் தெரிவித்தனர்.

மேலும், இதே ஊரில் பாதி உடைந்த நிலையில் சங்கு, சக்கரம் ஏந்திய விஷ்ணு சிலை ஒன்று இருப்பதைக் கண்டறிந்தோம். அந்த சிலை பிற்கால விஜயநகர கலை பாணியில் அமைந்திருந்தது" என்றார்.