Published:Updated:

திருவண்ணாமலை: 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பல்லவர் சிற்பங்கள், கல்வெட்டுகள்... சொல்லும் சேதி என்ன?

சிவன் கோவில்
சிவன் கோவில்

திருவண்ணாமலை அருகே கிராமத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த 2 சிற்பங்களும், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் கண்டறியப்பட்டுள்ளன.

நமக்கு கிடைக்கப்பெறும் ஒவ்வொரு புராதன சின்னங்களும், பண்டைய காலத்தில் நடைபெற்ற ஆட்சி முறை, வாழ்க்கைச் சூழல், கல்வி, வீரம், கலாசாரம், பண்பாடு, இலக்கியம், வரலாறு என பல தகவல்களை நமக்கு எடுத்துரைத்து வருகின்றன. இதில் அகழாய்வு மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருந்தாலும் குடைவரைகள், கோயில்கள், கோட்டைகள் போன்றவை சிறப்புமிக்க பல மன்னர்களின் தகவல்களைத் தாங்கி நிற்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
Vikatan

திருவண்ணாமலை மாவட்டம், சொரக்கொளத்தூர் கிராமத்தில் உள்ள பழைமையான சிவன் கோயில் (ஸ்ரீ அபீதகுஜாம்பாள் சமேத அம்பளவானர் திருக்கோயில்) ஒன்றில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 2 சிற்பங்களும், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த காடவராயர் காலத்து கல்வெட்டுக்களும் கண்டறியப்பட்டுள்ளன. 'திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் குழுவினர்' இவற்றை ஆவணப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீவட்சம் சிற்பம்
ஸ்ரீவட்சம் சிற்பம்

இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். "திருவண்ணாமலை அடுத்துள்ள சொரக்கொளத்தூரில், ஏற்கெனவே ஆவணம் செய்யப்பட்டிருந்த 3ம் நந்திவர்மன் காலத்து நடுகல்லை பார்ப்பதற்காக குழு நண்பர்கள் இருவருடன் சென்றிருந்தோம். அப்போதுதான் அருகில் இருந்த இந்த ஆலயத்திற்கு சென்றோம். ஆலயம், கிழக்கு நோக்கியபடி அமைந்திருந்தது. பழைமையான இந்தக் கோயில் சிதைந்துபோகும் சூழ்நிலையில் இருந்தபோது, பழைமையை பாதுகாப்பதற்காக சுமார் 10 வருடங்களுக்கு முன் புனரமைக்கும் பணி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. பணி முடிவுறும் நிலையை எட்டியபோது பல்வேறு காரணங்களால் அந்தப் பணி அப்படியே நின்றுவிட்டதாக கிராமத்தினர் கூறினர். இந்தக் கோயில் வளாகத்தில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டபோது, பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த ஸ்ரீவட்சம் மற்றும் சண்டேஸ்வரர் சிற்பத்தினை கண்டறிந்தோம்.

இந்தச் சிற்பங்களின் காலமானது, 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவர்களின் காலமாகும். சுமார் 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகை கல் ஒன்றில் ஸ்ரீவட்சம் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அரிதான சிற்பமாகிய இது, சங்ககாலம் தொட்டு பல்லவர்கள் காலம் வரை திருமகளை சிற்பங்களில் சின்னமாகக் குறிக்கும் வழக்கம் உண்டு. இங்குள்ள ஸ்ரீவட்சம் சிற்பத்தில், வளமையின் தெய்வமாகக் குறிப்பிடப்படும் திருமகளுக்கு உண்டான தாமரை மலர்களானது இரண்டு பக்கங்களிலும் காணப்படுகின்றன. திருமகளை திருமால் தனது மார்பில் தாங்கியிருப்பதைக் குறிக்கும் வகையில், திருமாலின் மார்பில் ஸ்ரீவட்சம் சின்னம் சிறிய அளவில் பொறிக்கப்படும் வழக்கம் இன்றும் சிற்பக்கலையில் உள்ளது.

சண்டேஸ்வரர் சிற்பம்
சண்டேஸ்வரர் சிற்பம்

அதன் அருகே காணப்பட்ட சம அளவு உயரம் கொண்ட மற்றொரு பலகைக் கல்லில், சண்டேஸ்வர நாயனார் சிற்பம் வடிக்கப்பட்டிருந்தது. வலது கையில் மலர் ஏந்தியும், இடது கையை தன் தொடைமீது ஊன்றியும், ஒரு காலை மடித்து இருக்கையில் அமர்த்தி, மறு காலை கீழிறக்கிய நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறார். காதுகளில் பனையோலை போல குண்டலமும், கழுத்தில் சரப்பளியும், தலையில் கரண்ட மகுடமும் அணிந்தபடி காணப்படும் சண்டேஸ்வரரின் சிற்பத்தில் முகம் மட்டும் சற்று தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த இரு பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்களைத் தவிர்த்து, இந்த ஆலயத்தில் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த லிங்கம், அம்மன், சண்முகர் மற்றும் பைரவர் சிலைகளும் காணக்கிடைக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கோயிலின் வடக்கு புறத்தில் காணப்பட்ட கல்வெட்டானது, 'ஸ்வஸ்தஸ்ரீ சகல புவன சக்கரவர்த்திகள்' என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. அதன்படி பார்த்தால், இந்தக் கல்வெட்டானது பிற்கால பல்லவ மன்னனாகிய, காடவ மன்னன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனுடைய கல்வெட்டு என அறிய முடிகிறது. இதில், அம்மன்னனின் 3ம் ஆட்சியாண்டு என குறிப்பிடப்பட்டுள்ளதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி.1219ம் ஆண்டாகும். சிற்றரசன் ராஜராஜ அதியமானின் மகனான விடுகாதழகிய பெருமாள் என்ற மன்னன் இந்தக் கோயிலை கற்றளியாக மாற்றிய செய்தியையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஆடி அம்மன் தரிசனம் - சிக்கல்களைத் தீர்ப்பாள் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்!

இந்த ஆலயத்தில் மூலவராக உள்ள சிவபெருமானின் பெயரானது, 'அம்பல கூத்த நாயனார்' என்று இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டிருப்பதையும் அறியமுடிகிறது. இவற்றை தவிர்த்து, இந்த ஊரின் ஏரி பகுதியில் 3 அடி உயரமுள்ள பலகைகள் ஒன்றில் விஷ்ணு துர்க்கையின் சிற்பம் உள்ளது. இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, எருமை மீது நின்றபடி கிராமிய கலை பாணியில் அந்த சிற்பம் அமைந்துள்ளது. அதன் அருகே 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இந்தத் துர்க்கையை ஊர்மக்கள், பாலாத்தம்மன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். ஏற்கெனவே ஆவணம் செய்யப்பட்டுள்ள நடுகல் ஒன்றில் இந்த ஊரின் பெயர் 'சுறைகுளத்து' என்று உள்ளது. புதிதாகக் கண்டறியப்பட்ட 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் 'சுறைகுளத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரே நாளடைவில் மருவி, சொரக்கொளத்தூர் என்று வழக்கில் உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு