Published:Updated:

1,300 ஆண்டுகள் பழைமையான கொற்றவை, பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு - கோயிலைப் புனரமைக்கக் கோரிக்கை!

பராமரிப்பு இன்றி காணப்படும் சிவன் கோயில்
News
பராமரிப்பு இன்றி காணப்படும் சிவன் கோயில்

"இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஊரில், சிவன் கோயில் ஒன்று வழிபாடு இன்றி சிதைவின் பாதையில் உள்ளது. ஊர்மக்கள் ஒன்றுகூடி கோயிலை முறையாகப் புனரமைத்து, வழிபாடுகளை நடத்திட முன்வர வேண்டும்."

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட வீரணாமுர் கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொற்றவை மற்றும் பிள்ளையார் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றைத் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம்.

"நானும் எனது நண்பர்களும் திருவண்ணாமலை மாவட்ட எல்லைப் பகுதியில் களஆய்வு மேற்கொண்டிருந்தோம். அப்போது பள்ளி மாணவர்கள் சிலர், வீரணாமுர் கிராமத்தில் சிற்பம் ஒன்று இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்டு இருக்கும் அந்த ஊருக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம். அந்த கிராமத்தில், பொன்னியம்மன் கோயிலின் பின்புறமாக இருந்தது அந்தக் கற்பலகையிலான சிற்பம்.

கொற்றவை சிற்பம்
கொற்றவை சிற்பம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுமார் 5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார் கொற்றவை. தலையை கரண்டமகுடம் அலங்கரிக்க, வட்ட வடிவிலான முகத்தில் கண்கள் கூர்மையாகச் செதுக்கப்பட்டிருந்தன. இரு காதுகளில் பத்ர குண்டலங்கள், கழுத்தில் ஆரம் போன்ற அணிகலன்கள், அனைத்துக் கைகளிலும் கைவளைகள் அணிந்தும் கம்பீரமாக எருமையின் தலையின் மீது நின்றவாறு காட்சி தருகிறார். தன் கரங்களில் பிரயோகச் சக்கரம், வாள், சங்கு, வில், கேடயம் ஏந்தியபடியும்; வலது கரத்தில் அபய முத்திரையையும், இடது கீழ் கரத்தில் கடி முத்திரையும் காண்பித்தவாறு அருள்பாலிக்கிறார்.

கொற்றவையின் வாகனங்களான சிம்மமும், கலைமானும் அவருடைய தலையின் அருகே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அவரின் காலின் அருகில் இருபுறங்களிலும் வீரர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

மேலும், அதே ஊரில் உள்ள பாழடைந்த செங்கல் கோயில் ஒன்றில் இதே போன்றதான கல்சிற்பம் ஒன்று இருப்பதாகவும் அம்மாணவர்கள் தெரிவித்தனர். சிதிலமடைந்து காணப்படும் அக்கோயில், 'அகத்தீஸ்வரர் கோயில்' என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
விநாயகர் சிற்பம்
விநாயகர் சிற்பம்

அந்தக் கோயிலின் வாசலில் இடப்புறமாக 5 அடி உயர பலகைகளில் புடைப்புச் சிற்பமாக காணப்படுகிறார் பிள்ளையார். நான்கு கரங்களுடன் பத்மாசனக் கோலத்தில் அமர்ந்தவாறு காட்சி தருகிறார். உள்ளூர் கலைபாணியில் அமைந்துள்ள இச்சிற்பம், காலமாற்றத்தால் மிகவும் தேய்ந்துள்ளதால் பிள்ளையாரின் கையில் உள்ள ஆயுதங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சிற்ப அமைதியை வைத்துப் பார்க்கையில் இதன் காலம் கி.பி.7-ம் நூற்றாண்டாக இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கோயிலில் 6 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவையாவும் மத்திய தொல்லியல் துறையினரால் பார்வையிடப்பட்டு 1937-ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், ராஜாதிராஜனின் 5-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், இவ்வூரை 'பண்டிதசோழநல்லூரான வீரணாமுர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழனின் 11-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில், இறைவன் பெயர் 'திருவகதீஸ்வரமுடையார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குலோத்துங்க சோழனின் இரண்டு கல்வெட்டும்... இக்கோயிலில் சந்தி விளக்கெரிக்க தானம் தந்துள்ள செய்தியைத் தருகிறது.

இங்குள்ள கல்வெட்டுக்களின் படி பார்க்கையில், இந்தச் செங்கல் ஆலயம் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானதாக இருக்கக்கூடும்.

விஷ்ணு சிற்பம்
விஷ்ணு சிற்பம்

இதுமட்டுமின்றி, ஒரு வீட்டின் பின்புறம் பெண் தெய்வ சிற்பம் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், அச்சிற்பம் விஷ்ணுவின் சிற்பம் ஆகும். அப்பகுதி மக்கள் விஷ்ணுவின் சிற்பத்தைப் பெண் தெய்வமாக நினைத்து வணங்கி வருகின்றனர். நான்கு கரங்களில்... மேலிரு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும்; கீழ் வலது கரத்தில் அபய முத்திரையும், கீழ் இடது கரத்தை இடை மீது வைத்து கடக முத்திரையிலும் காட்சி தருகிறார். இச்சிற்பம் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஊரில், சிவன் கோயில் ஒன்று வழிபாடு இன்றி சிதைவின் பாதையில் உள்ளது. ஊரில் உள்ள சில இளைஞர்கள் அவ்வப்பொழுது இதனை சுத்தம் செய்து வருகின்றனர். ஊர்மக்கள் ஒன்றுகூடிக் கோயிலை முறையாகப் புனரமைத்து, வழிபாடுகளை நடத்திட வேண்டும். மேலும் வெயிலுக்கும், மழைக்கும் நனைந்து கொண்டிருக்கும் கொற்றவை சிற்பத்தையும் கொட்டகை அமைத்து முறையாகப் பராமரித்து வழிபாடு செய்திட வேண்டும். இவை அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டியது அவசியமானதே" என்றார்.