Published:Updated:

ஜவ்வாது மலை: புலியுடன் போரிடும் வீரன்... 1000 ஆண்டுகள் பழைமையான நடுகல்! சொல்லும் வரலாறு என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புலியுடன் போரிட்ட வீரனின் நடுகல்
புலியுடன் போரிட்ட வீரனின் நடுகல்

ஊர் மக்கள் இந்நடுகல்லை 'மோர்புட்டான்' கல் என்ற பெயரில் வழிபடுகின்றனர். நேர்த்திக்கடன் உள்ளவர்கள் சுடுமண் குதிரைகளை வைத்தும், வைகாசி மாதம் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முற்காலத்திய நம் தமிழர்களின் வரலாறு பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கியது. ஆங்காங்கே கண்டறியப்படும் பழைமையான சின்னங்கள் ஒவ்வொன்றும் புதுப்புது தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை சூழலை இதுபோன்று கண்டறியப்படும் சின்னங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. அந்த வரிசையில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள காப்புக்காட்டில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வீரன் ஒருவனின் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடுகல், புலியுடன் போரிட்டு உயிர்நீத்த வீரன் ஒருவனின் நடுகல் எனக் கூறப்படுகிறது. இதனை திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். "ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள மேல்பட்டை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரின் தகவலைத் தொடர்ந்து அந்த நடுகல்லைத் தேடிப் பயணித்தோம். செங்கத்திலிருந்து பரமனந்தல் வழியாகப் பயணித்தால் மேல்பட்டு கிராமம்தான் ஜவ்வாது மலையின் கடைசி கிராமம். பரமனந்தல் - மேல்பட்டு இடையே உள்ள தென்மலை காப்புக்காட்டுக்குள் செல்ல நண்பர்களுடன் தயாரானோம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான நுழைவுவாயில் அங்கு காணப்பட்டது.

வனத்தின் நுழைவு வாயில்
வனத்தின் நுழைவு வாயில்
 கொல்லிமலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

இடப்புறத்தில் ஓர் ஒற்றையடிப்பாதை செல்கிறது. அதன் வழியே பயணித்தால் இரண்டு மலைகளை ஏறி இறங்க வேண்டியிருக்கும். பயணம் சாதாரணமாகத்தான் இருக்கும், மிகவும் கடினம் என்பதுபோல் கிடையாது. ஆனால் சுமார் 3 கி.மீ தூரம் நடக்க வேண்டியிருக்கும். அந்தத் தூரத்தை கடந்ததும் ஒரு மரத்தின் கீழ் நடுகல் ஒன்று இருப்பதைக் கண்டோம். அந்த நடுகல்லை சுற்றி வரிசையாக சுடுமண்ணால் ஆன குதிரைகள் இருப்பதை பார்க்கமுடிந்தது. அந்த நடுகல்லை ஆய்வு செய்தோம்.

சுமார் 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட ஒரு பலகைக் கல்லில் இடது கையில் வில்லையும், அம்பையும் ஏந்திக்கொண்டு; வலது கையில் குறுவாளை உருவி உயர்த்தியவாறு வீரன் ஒருவன் நின்று சண்டையிடுவது போல் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது.

கழுத்தில் அணிகலனாக சவடி, இரு கைகளிலும் தோள் வளையும் அணிந்து காணப்படும் அந்த வீரன், இடது காலை முன்வைத்து போரிடச் செல்வதைப்போல அந்தச் சிற்பத்தில் கட்டப்பட்டுள்ளது. அந்த வீரனுக்கு எதிர் திசையில் புலி ஒன்று ஆக்ரோஷமாக இருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் மீது அம்பு தைத்தது போல காட்டப்படவில்லை. எனவே, இப்புலியை எதிர்த்துப் போரிட்டபோது இந்த வீரன் மரணமடைந்து இருக்கக்கூடும் என கருதமுடிகிறது. தான் வாழும் ஊரில் உள்ள ஆநிரைகளையோ (ஆடு, மாடு போன்றவை), மக்களையோ தாக்கும் புலியை எதிர்த்து சண்டையிட்டு உயிரை விடும் வீரரை நடுகல் எடுத்து வழிபடும் பழக்கம் பல்லவர் காலம் தொட்டே வழக்கிலுள்ளது.

இவ்வகையான நடுகற்களை 'புலிகுத்திபட்டான்' கல் என்று அழைப்பார்கள்.
படையெடுப்புகளால் சிதைந்தாலும் பேரழகு குறையாத செஞ்சி வெங்கடரமணர் திருக்கோயில்! #Video

இந்தப் பகுதியிலும் புலியிடமிருந்து ஊர் மக்களையும், ஆநிரைகளையும் காக்கும் பொருட்டு சண்டையிட்ட போது உயிர்நீத்த இந்த வீரனுக்கு இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் நடுகல் எடுத்து வழிபாடு செய்துள்ளதை நம்மால் அறியமுடிகிறது. இந்தச் சிற்பத்தில் உள்ள தோற்றம் மற்றும் சிற்பத்தின் தன்மையை வைத்து பார்க்கும்போது, இது கி.பி.10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து நடுகல் எனக் கருதலாம்.

புலிகுத்திபட்டான் நடுகல் காணப்பட்ட இடம்
புலிகுத்திபட்டான் நடுகல் காணப்பட்ட இடம்
ஊர் மக்கள் இந்நடுகல்லை 'மோர்புட்டான்' கல் என்ற பெயரில் வழிபடுகின்றனர். நேர்த்திக்கடன் உள்ளவர்கள் சுடுமண் குதிரைகளை வைத்தும், வைகாசி மாதம் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர்.

மலையில் வாழும் மக்களில் 'மோர்பட்டான்' என்ற ஒரு தனி குலம் இருப்பதாகவும், அக்குலம், முற்காலத்தில் காவல் காக்கும் பொறுப்புகளில் ஈடுபட்டதாகவும், உடன் வந்த கமலக்கண்ணன் தெரிவித்தார்.

ஜவ்வாது மலைத் தொடரில் புலிகள் இருந்ததற்கான அடையாளமாக கோவிலூர் நடுகல்லைத் தாண்டி நமக்குக் கிடைத்துள்ள மேலும் ஒரு சான்று இந்த நடுகல். இந்த வரலாற்று நடுகல் முறையாக காக்கப்பட வேண்டியது அவசியமானது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு