Published:Updated:

நடராஜருக்குத் தனிக் கோயில், பழைமையான சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு! இதன் வரலாறு சொல்வது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்ரீதேவி - பூதேவி உடன் பெருமாள்
ஸ்ரீதேவி - பூதேவி உடன் பெருமாள்

"1000 வருடங்களுக்கு முன்பாக இந்த ஊரில் சைவம் மற்றும் வைணவக் கோயில்கள் இருந்திருக்கக்கூடும் என்பதை கிடைக்கப்பெறும் பழைமையான சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. 110 ஆண்டுகளுக்கு முன் நடராஜருக்கெனத் தனிக் கோயிலும் இங்கு கட்டப்பட்டுள்ளது"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் 1000 வருடங்களுக்கு முற்பட்ட பிற்கால பல்லவர்களின் பல்வேறு சிலைகளும் கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் நடராஜருக்கென அமைக்கப்பட்ட 110 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கோயிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். "இந்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோயிலில், இந்தியத் தொல்லியல் துறையால் 8 கல்வெட்டுகள் பார்வையிடப்பட்டுப் பதிவாகியுள்ளன. அங்கு மேலும் ஏதேனும் கல்வெட்டுகள் எச்சமாக இருக்கின்றனவா என்று பார்ப்பதற்காக நண்பருடன் சென்றிருந்தோம்.

நடராஜர் கோயில்
நடராஜர் கோயில்

அந்த இடத்தைப் பார்வையிட்டுவிட்டு வேறு ஏதேனும் இந்த ஊரில் தொன்மைவாய்ந்த தடயங்கள் தென்படுகின்றனவா என்று விசாரித்தபோது அந்த ஊரில் நடராஜருக்குத் தனிக் கோயில் இருப்பதாக வெங்கடேசன் என்பவர் கூறினார். அந்தத் தகவல் எங்களுக்கு ஆச்சரியம் ஊட்டியது. ஏனெனில், சிதம்பரம் உட்பட எங்குமே நடராஜரை மூலவராகக் கொண்ட தனிக்கோயில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தொன்மை காலத்தில் ஸ்ரீபுருஷமங்கலம் என்று அழைக்கப்பட்ட இந்த மேல்சீசமங்கலம் கிராமத்தில், தம்பதிகள் பிள்ளை வரம் வேண்டி 1909ஆம் ஆண்டு நடராஜருக்கெனத் தனிக் கோயில் ஒன்று அமைத்துள்ளனர். சிறிய வீடு போன்ற அமைப்புடைய அக்கோயிலில் நடராஜர் செப்புத்திருமேனியில் காட்சி தருகிறார்.

5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை; முன்னோர்கள் ஆயுதம் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு! வரலாறு சொல்வது என்ன?
இந்தக் கோயிலின் தாழ்வாரத்தில் இடப்பக்கமாக சுமார் 6 அடி உயரம் கொண்ட பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி தாயார்களுடன் காட்சி தருகிறார். எவ்விதப் பாகுபாடுமின்றி நடராஜரின் சன்னதியில் பெருமாள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருவதும் இங்கு சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

அந்தப் பெருமாள் சிலையில் ஆய்வு மேற்கொண்டபோது 9ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பல்லவர் காலத்திய சிலை என்பதைக் கண்டறிந்தோம். இந்தச் சிலை, நடராஜர் கோயில் அமைந்துள்ள இடத்திற்குப் பின்புறமாக 30 வருடங்களுக்கு முன்பு வெட்டவெளியில் இருந்ததாகவும், சிலையைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டு வருவதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறிய இடத்தில் ஆய்வு செய்தபோது அங்கு பழைமையான செங்கல் கோயில் ஒன்று இருந்து அழிந்திருக்கும் என்பதைக் கண்டறிந்தோம். ஏனெனில், அங்கு மண்ணில் புதையுண்ட நிலையில் இரண்டு அடி வீதம் இரண்டு பட்டை துண்டுக் கல் இருப்பதைக் கண்டு அதைத் தோண்டி எடுத்தபோது அதில் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டோம்.

அவை கோயில் கட்டுமானத்தில் அதிட்டானத்தில் வரும் முப்பட்டை, குமுதப்பட்டை என்பதாகும். துண்டுக் கல்வெட்டு என்பதால் முழுச் செய்தி கிடைக்கவில்லை. ஆனால், அதில் உள்ள எழுத்து அமைதியை வைத்துப் பார்த்தபோது அது 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பதை அறிந்தோம். இதன் மூலம் அங்கு 1000 வருடங்களுக்கு முன்பு பழைமையான கோயில் ஒன்று இருந்து அழிந்திருக்கக்கூடும் என்பதை அறிய முடிந்தது. அதன் சாட்சியாகத்தான் 6 அடி உயரமுடைய பெருமாளும், துண்டுக் கல்வெட்டுகளும் நமக்குக் கிடைத்துள்ளன.

உடன் வந்த வெங்கடேசன் என்பவர், "தற்போது அருகில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் அருகே நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது கோயில் போன்ற ஒரு அமைப்பு இருந்தது. அவை காலப்போக்கில் சிதைந்த நிலையில், அவ்விடத்தில் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். அதன்படி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு படிக்கல்லானது எழுத்துப் பொறிப்புடன் மண்ணில் புதையுண்டு இருப்பதைக் கண்டறிந்து தோண்டிப் பார்த்தோம். அதில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடன் நான்கு வரையிலான துண்டுக் கல்வெட்டு இருந்ததைக் கண்டோம்.

செஞ்சி: அழியும் தறுவாயில் இருக்கும் பல்லவர் காலத்துப் பொக்கிஷம் காக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தக் கல்வெட்டு முழுமையாக இல்லை என்றாலும் அவ்விடத்தில் இருந்த கோயிலுக்கு 300 குழி நிலம் தானமாகப் பெறப்பட்ட செய்தியைத் தாங்கி நிற்கிறது. எனவே இந்த இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்து காலப்போக்கில் அழிந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் விசாரித்தோம். அப்போது, ஊரின் வடக்கு திசையில் சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் காண்பித்தனர். அந்தச் சிவலிங்கத் திருமேனியின் காலமும், பள்ளியின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டின் காலமும் ஒத்துப்போவதால்... இந்த ஊரில் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கும் இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்திருக்கக்கூடும் என்ற அனுமானம் வலுவாகியது.

மேலும், இந்தச் சிவலிங்கத்தின் பின்புறம் வெட்டவெளியில் சப்த கன்னியர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவையாவும் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பல்லவர்கள் கலை பாணியில் அமைந்துள்ளது.
சிவலிங்கம்
சிவலிங்கம்

அதே ஊரில் புதிதாகத் திருப்பணி செய்யப்பட்ட சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலும் தொன்மை வாய்ந்ததாக ஊர் மக்கள் தகவல் கூறினர். அங்கு திருப்பணி செய்தபோது அடித்தலம் தென்பட்டதாகவும், அச்சமயம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் அதன்மீது புதிய கோயிலைக் கட்டிவிட்டதாகவும் ஊர் மக்கள் கூறினர். மேலும் இதே ஊரில் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இதன் அருகே வயல்வெளியில் பாதி புதையுண்ட நிலையில் ஒரு சிலை காணப்பட்டது. அதனை சுத்தம் செய்து ஆய்வு செய்தபோது, 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பல்லவர் காலத்தைய விஷ்ணு துர்க்கை சிற்பம் என்பதைக் கண்டறிந்தோம். அதேபோல அங்குள்ள மாரியம்மன் கோயிலிலும் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் உடைந்த நிலையில் காணப்படுகிறது.

இவை மட்டுமன்றி, விஜயநகர மற்றும் நாயக்கர் காலத்திய நடுகல் மூன்று இந்த ஊரில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சிறிய ஊரில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சைவம் மற்றும் வைணவச் சமயங்கள் தழைத்தோங்கி இருந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. குறிப்பாக சைவ, வைணவச் சமயங்களைச் சார்ந்த தலா இரண்டு கோயில்களைக் கொண்டிருந்த இந்த ஊரில், இன்று மணிகண்டேஸ்வரர் கோயில் மற்றும் புதிதாகக் கட்டிய அகத்தீஸ்வரர் கோயில்களைத் தவிர, ஏனைய கோயில்கள் முற்றிலும் அழிந்த நிலையில் இறைத் திருமேனிகள் மட்டுமே ஆங்காங்கே காணப்படுகின்றன. இவையாவும் காலக் கண்ணாடியாய் நமக்கு ஊரின் தொன்மையைப் பற்றிப் பறைசாற்றிவருகின்றன. இதுபோன்ற பழைமையான சிலைகளும், கல்வெட்டுகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானதே" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு