Published:Updated:

திருவண்ணாமலை: அக்னி லிங்க சன்னதியில் பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு - சொல்லும் செய்தி என்ன?

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் ஒன்றான அக்னி லிங்க சன்னதியில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையவளாகிய பார்வதிதேவிக்கு உடலில் சமபங்கு இடமளித்து அம்மையாரப்பனாய் காட்சித்தரும் தலமாகவும் திகழும் தலம் இது. எம்பெருமான் ஈசனே மலையாய்க் காட்சி தரும் தலம் என்றும், 'நினைத்தாலே முக்தி தரும் மலை' என்றும் பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்கது இந்தத் தலம். 14 கி.மீ அளவில் சுற்றுப்பாதையை கொண்ட இத்திருக்கோயிலில், பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் வந்து எம்பெருமானாகிய சிவனின் ஆசிகளை பெறுவர்.

திருவண்ணாமலை கோவில்
திருவண்ணாமலை கோவில்

இந்த கிரிவலப்பாதையில் சித்தர்களின் மடங்கள் மற்றும் ஆசிரமங்கள் பல காணப்படுகின்றன. அதோடு, கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோயில்களாக 8 கோயில்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. அதில் இரண்டாவதாக இருக்கும் அக்னி லிங்க கோயிலில்தான் இந்தப் பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு கிடைத்துள்ளது. பல வருடங்களுக்கு முன் திருவண்ணாமலை கோயிலில், கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுள்ளன. அச்சமயத்தில் கண்டெடுக்கப்படாத கல்வெட்டாக இந்தக் கல்வெட்டு தகவல்கள் இருப்பதாகக் கூறுகின்றனர், இந்த கல்வெட்டை படியெடுத்த, திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் குழுவினர்.

இது குறித்து இந்த அமைப்பின் தலைவரும், ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். "கிரிவளப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோயில்களில் இரண்டாவது கோயில் இது. அக்னி லிங்க கோயில் என சொல்வதுண்டு. அஷ்ட லிங்க கோயில்கள் அனைத்தும் கிரிவலப்பாதையின் இடப்புறத்தில் இருக்கும். இந்த கோயில் மட்டும் வளப்புறமாக காணப்படுகிறது. இது ஒரு புதிராகவே இருந்து வருகிறது. கோபுரம் இல்லாத சிறிய கோயில் இது. தெற்கு முகம் நோக்கிய இந்த கோயிலின் நுழைவு வாயிலின் இடப்பக்க சுவற்றில், 17 வரிகளில் கல்வெட்டு ஒன்று இருந்தது. இதுவரை அது ஆவணம் செய்யப்படாமல் இருப்பதை அறிந்தோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, படியெடுத்து பார்த்தோம். தமிழ் கல்வெட்டாக இருந்தது. ஒரு சில வார்த்தைகள் மட்டும் கிரந்தத்தில் இருந்தது. 'ஸ்வஸ்தஶீ திரிபுவன சக்ரவர்த்திகள்' என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இந்தக் கல்வெட்டில் சுந்தரபாண்டியன் என்று சொல்லப்பட்டிருந்தாலும், பிற்கால பாண்டியர்களில் எந்த சுந்தரபாண்டியன் என்று அறிந்திட மெய்க்கீர்த்தியில் தெளிவான விவரங்கள் சொல்லப்படவில்லை.

கல்வெட்டு
கல்வெட்டு
திருவண்ணாமலை: சேதமடைந்த நடுகற்களை மீட்டு QR Code மூலம் வரலாற்றைத் தெரியப்படுத்தும் ஆய்வுக் குழு!

'வீரராமநல்லூர் எனும் ஊரில் குடியேறும் தறிக்குடிகள், காசாக்குடி மக்கள், செட்டிகள் மற்றும் வாணியர்கள் மாதம் ஒன்றுக்கு ஒரு மாகாணி பணத்தை இக்கோயிலுக்கும்; ஒரு மாகாணி பணத்தை சபைக்கும் வரியாக செலுத்த வேண்டும்' என்றும் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'இதை மாற்றம் செய்வோர்கள், சிவதுரோகம் மற்றும் ராஜதுரோகம் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள்' என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டில், ஸ்வாதசி திதி, அவிட்டத்து நாள் மற்றும் திங்கள்கிழமையும் குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்தக் கல்வெட்டானது 'இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1276 - 1292) காலத்துக் கல்வெட்டு' என்று அறியமுடிகிறது. அவனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டு என்பதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி.1288 ஆக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோழர்களின் 400 வருட கால ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், குமரி முதல் நெல்லூர் வரை பாண்டியர்கள் ஆட்சி கோலோச்சியது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலமே பாண்டியர்களின் பொற்கால ஆட்சியாக கருதப்படுகிறது. கொல்லத்தையும் வென்று, மிகப்பெரிய நிலப்பரப்பை கட்டமைத்தவன். இந்த மிகப்பெரிய நிலப்பரப்பினை, தன் தம்பிகள் மற்றும் புதல்வர்கள் என 5 பேரும் ஒரே சமயத்தில் ஒவ்வொரு பகுதியிலும் இணையாட்சி புரிந்துள்ளனர். அந்த ஐந்து பேரில் ஒருவரான 'இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்' தான் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் மன்னன் ஆவான். இணையாட்சியின் போது கரூரை தலைமையிடமாக கொண்டு கொங்கு பகுதியை ஆட்சி புரிந்துள்ளான். அவனிவேந்த நல்லூர் என்ற ஊரை, பழனி கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளான்.

திருவண்ணாமலை: அதிகாலை ஏற்றப்பட்ட பரணி தீபம் - உள்ளூர் பக்தர்களுக்கும் கெடுபிடி!
கல்வெட்டு
கல்வெட்டு

ஆகவே, இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வீரராமநல்லூர் ஆனது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கராமநல்லூர் பகுதியாக இருந்திருக்க கூடும் எனக் கருதப்படுகிறது. திருவண்ணாமலை அஷ்ட லிங்க கோயில்களில் கல்வெட்டு கிடைக்கப் பெற்ற ஒரே கோவில் இதுவாகும். இதுவரை சரியான தகவல் கிடைக்காமல், அஷ்டலிங்க கோவில்கள் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் என அனுமானத்தை இந்தக் கல்வெட்டு உடைக்கிறது. கிரிவலப்பாதையில் உள்ள இதர கோயில்களையும் ஆய்வு செய்தால் மேலும் தகவல்கள் கிடைக்கக்கூடும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு