Election bannerElection banner
Published:Updated:

`தமிழக பக்தர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்!’ - 79 நாள்களுக்குப் பிறகு காட்சி தந்தார் திருப்பதி ஏழுமலையான்

மலர் அலங்காரம்
மலர் அலங்காரம்

65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.

ஊரடங்கு காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் 79 நாள்களுக்குப் பிறகு ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் தரிசனத்துக்காகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நோய் பரவலைத் தடுப்பதற்காக தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. இன்றும் நாளையும் பரிசோதனை அடிப்படையில் தேவஸ்தான பணியாளர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி கோயில்
திருப்பதி கோயில்

10-ம் தேதி திருமலையைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 11-ம் தேதிக்குப் பிறகே ஆந்திராவின் மற்ற பகுதிகள் உட்பட வெளிமாநில பக்தர்களும் பொது தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழகம் உட்பட பிற மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அந்தந்த மாநில அரசிடமிருந்து இ-பாஸ் பெற்று வருவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அலிபிரி சோதனைச் சாவடியில் பக்தர்களை உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது. ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் என்ற நடைமுறையில் தினமும் 6,000 பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். முதல் 3,000 பக்தர்கள் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 3,000 பேர் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனத்தின்போதும் லட்டு கவுன்டர்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக 6 அடி தூரத்துக்கு ஒருவர் நிற்கும் வகையில் `ரேடியம்’ ஸ்டிக்கர்கள் தரையில் பதிக்கப்பட்டுள்ளன.

ஆய்வு செய்த தேவஸ்தான அதிகாரிகள்
ஆய்வு செய்த தேவஸ்தான அதிகாரிகள்

அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களில் கால் விரல்களால் இயக்கக்கூடிய குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. உண்டியலைத் தொட்டு வணங்குவதற்கு முன்பு கைகளை சுத்தம் செய்துகொள்வதற்காக உண்டியலுக்கு அருகில் கிருமிநாசினி வசதியும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தியிருக்கிறது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள சிவப்பு நிற மண்டலங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சுமார் இரண்டரை டன் மலர்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு