Election bannerElection banner
Published:Updated:

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் பணி நியமனம் - திமுக வாக்குறுதிக்கு வரவேற்பு!

 திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கை

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் பணி நியமனம் என்ற திமுக தேர்தல் அறிக்கையால் 203 மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர் பயிற்சி முடித்து, பணி வழங்கப்படாத மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சமூக நீதிக்காக போராடி வருபவர்களும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களும் பாராட்டி வருகின்றனர்.

 திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கை

பணி நியமனம் வழங்க வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வரும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வ.ரங்கநாதன் திமுக-வின் இந்த வாக்குறுதியை வரவேற்றுப் பேசினார். ``கோயில் கருவறைக்குள் குறிப்பிட்ட சாதியினர் அல்லாதோரை நுழைய விடாமல் தடுக்கும் கருவறைத் தீண்டாமை நெஞ்சில் தைத்த முள்ளாக இருப்பதாக கூறியவர் பெரியார். கருவறை நுழைவுப் போராட்டங்களை நடத்தவும் செய்தார். அந்த முள்ளினை அகற்றுவதாக கூறி கலைஞர், 1971-ல் அர்ச்சகர் பணி நியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்ட விதிகளை கொண்டு வந்தார்.

ரங்கநாதன்
ரங்கநாதன்

இதனை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் சட்டத் திருத்தம் சரியென்று சொன்னது உச்சநீதிமன்றம். 2002-ல் ஆதித்தன் வழக்கில் அர்ச்சகர் நியமனத்தில் சாதி பார்ப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் மீண்டும் 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டு, பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டு பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்த எங்களுக்கு, சைவ மற்றும் வைணவ ஆகம அடிப்படையில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு 203 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து ஆதி சிவாச்சாரியார்கள் என்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், 2015-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், `குறிப்பிட்ட கோயில்களின் ஆகமங்களுக்கு ஏற்ப அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும். அர்ச்சகர் நியமனத்தில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக சாதிய அடிப்படையில் நியமனங்கள் இருக்கக் கூடாது’ என மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது
பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது

அதன் தொடர்ச்சியாக எங்களோடு பயிற்சி முடித்த மாரிச்சாமி, 2018-ல் மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோயில் அர்ச்சகராகவும் 2020-ல் தியாகராஜன் என்பவர் நாகமலை புதுக்கோட்டை விநாயகர் கோயில் அர்ச்சகராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

தமிழக அரசால் 2020-ல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு இந்து சமய நிறுவனங்களின் பணியாட்கள் பணிவரைமுறை விதிகளின்படி, முறையான பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகராவதற்கு தகுதியுடையவர் என சட்டவிதி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் தமிழக அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட நாங்கள் அனைவரும் அர்ச்சகர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்த சூழலில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எங்களை அர்ச்சகர்களாக நியமிப்பதாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு விதிகளில் அர்ச்சகராவதற்கு 35 வயது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக எங்களுக்கு பணிநியமனம் வழங்கப்படாததை கணக்கில் கொண்டு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும் என , திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதும் பெருமகிழ்சியாக உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு
திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு

பயிற்சி பெற்ற 203 மாணவர்களுக்கு அர்ச்சகர் பணிநியமனங்கள் வழங்கப்படும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம். வரும் காலங்களில் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் எனும் திமுக-வின் தேர்தல் வாக்குறுதி நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் சமூக நீதி முழுமை பெறும் " என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு