Published:Updated:

`பௌர்ணமி வழிபாட்டுக்கு திடீரென அனுமதி மறுப்பு; வாக்குவாதம்!' - அத்ரி மலையில் கொதித்த பக்தர்கள்

அத்ரி மலையில் வனத்துறை செக்போஸ்ட்
அத்ரி மலையில் வனத்துறை செக்போஸ்ட்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சித்தர்கள் போற்றும் அத்ரி மலை அமைந்துள்ளது. அங்குள்ள அத்ரி தபோவனத்துக்கு பௌர்ணமி தினத்தில் வழிபடச் சென்ற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி - சிவசைலம் அருகே கடனா அணை உள்ளது. அந்த அணையையொட்டிய வனப்பகுதியில் உள்ள மலையானது, அத்ரி மலை என அழைக்கப்படுகிறது. அந்த மலையில் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோயில் மற்றும் கோரக்கர் திருக்கோயில் ஆகியவை அமைந்துள்ளன.

கடனா அணை
கடனா அணை

இந்த மலையில் அத்ரி முனிவர், தன் மனைவி அனுசுயாதேவி மற்றும் கோரக்கர் உள்ளிட்ட சீடர்களுடன் தற்போதும் வாசம் செய்வதாக பக்தர்களிடையே நம்பிக்கை இருக்கிறது. சப்த ரிஷிகளில் முதன்மை பெற்றவரான அத்ரி மகரிஷி வாழ்ந்த இடம் என்பதால், இதை `அத்ரி மலை' எனப் போற்றுகிறார்கள்.

அத்ரி மகரிஷியுடன் இருந்த சீடர்கள் கங்கைக்குச் சென்ற நேரத்தில் கோரக்கர் மட்டும் குருவுக்காக அவருடனே இருந்துள்ளார். அதனால், கோரக்கருக்காக அத்ரி மகரிஷி, கங்கையைக் கொண்டுவந்துள்ளார். அதனால் அத்ரி தபோவனத்தில் கங்கைக்கு நிகரான அத்ரி கங்கை தீர்த்தம் வற்றாத நிலையில் உள்ளது.

Vikatan

இத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தில் வழிபாடு நடத்த பக்தர்கள், தினமும் காலையில் சென்றுவிட்டு மதியம் 3 மணிக்குத் திரும்புவது வழக்கம். பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அங்கு சிறப்பு வழிபாடு நடக்கும். வனத்துறையின் அனுமதியுடன் பக்தர்கள் அங்கு சென்று வழிபட்டுத் திரும்புவார்கள்.

இன்று பௌர்ணமி தினம் என்பதால், வழிபாடு நடத்துவதற்காகத் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தார்கள். ஆனால், அவர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்ததுடன், அணைப்பகுதிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். 

வனத்துறை செக்போஸ்ட்
வனத்துறை செக்போஸ்ட்

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பக்தர்களை வழிபாட்டுக்குச் செல்ல விடாமல் தடுத்ததால் வனத்துறையினருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பக்தர்களின் தர்ணாவைத் தொடர்ந்து பொதுப்பணி மற்றும் வனத்துறை அதிகாரிகள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

அதன் பின்னர், எளிதில் தீப்பற்றும் பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது, வழியில் எங்கும் சூடன் உள்ளிட்டவற்றை எரிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதித்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு