Published:Updated:

மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு... விரத முறைகள்... சரடு கட்டிக்கொள்ளும் நேரம்!

காரடையான் நோன்பு #KaradaiyanNonbu
காரடையான் நோன்பு #KaradaiyanNonbu

சாவித்திரி மேற்கொண்ட இந்த விரதத்தை அனைத்துப் பெண்களும் மேற்கொள்ள புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் மிகவும் புண்ணிய பலன்களைச் சேர்க்கும் என்று முன்னோர்கள் வகுத்தனர்.

நம் பாரத தேசத்தில் பலவிதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கேதார கௌரி விரதம், வரலட்சுமி விரதம், காரடையான் நோன்பு என்று பல்வேறு விரதங்கள் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இந்த விரதங்களின் முக்கியப் பலன் ஒன்றாகவும் உபபலன்கள் பலவுமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. காரடையான் நோன்பு அப்படிப் பல்வேறு நன்மைகளை நமக்கு அருளும் ஒரு விரதமாகும்.

புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் செல்வவளம் சேர்க்கும் காரடையான் நோன்பு
புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் செல்வவளம் சேர்க்கும் காரடையான் நோன்பு

நோன்புக் கதை

சத்தியவான் - சாவித்திரி கதை நம் நாட்டுப்புற மரபிலும் புராண மரபிலும் காணப்படும் புகழ்பெற்ற கதை. இறந்த தன் கணவனை மீட்க சாவித்திரி நடத்திய போராட்டமே பின்னாளில் ஒரு நோன்பாக மாறியது. சத்தியவானின் உயிரை யமன் கவர்ந்து சென்றபோது அதை மீட்பதற்காக சாவித்திரி, காமாட்சி தேவியை வழிபட ஆரம்பித்தாள். இதைக் கண்ட யமன் அவளிடம் சென்று, `கவர்ந்து சென்ற உயிரைத் திரும்ப அளிக்க வழியில்லை, ஆதலால் இந்த பூஜை வீண்' என்று சொன்னார். ஆனால், அதைக் கவனிக்காமல் அன்னை காமாட்சியைத் துதித்துத் தன் விரதத்தைத் தொடர்ந்தாள்.

காட்டில் கிடைத்த பொருள்களைக் கொண்டு சாவித்திரி அந்த நோன்பை மேற்கொண்டாள். மண் கொண்டு செய்த அடையையும் செடிகளிலிருந்து எடுத்த பாலை வெண்ணெய்யாகவும் பாவித்து அன்னைக்கு பக்தியோடு நிவேதனம் செய்தாள். சாவித்திரியின் பக்தி வைராக்கியத்தைக் கண்ட யமன் அவளிடம், `உனக்கு ஒரு வரம் தருகிறேன்' என்றான். உடனே சாவித்திரி, `போரில் பின்வாங்காத வீரமுடைய புத்திரர்கள் வேண்டும்' என்று கேட்டாள். அன்னை காமாட்சியின் அருளால் யமனுக்கு மதிமயக்கம் உண்டாக அவன் சிந்திக்காமல், `தந்தேன்' என்றான். அடுத்த கணம் தன் தவற்றை உணர்ந்த யமன் சத்தியவான் உயிரைத் திரும்ப அளித்து அவர்கள் இழந்த சகல செல்வங்களையும் மீண்டும் பெறும்படி ஆசீர்வதித்தான்.

காரடையான் நோன்பு உப்பு அடை
காரடையான் நோன்பு உப்பு அடை

சாவித்திரி மேற்கொண்ட இந்த விரதத்தை அனைத்துப் பெண்களும் மேற்கொள்ள புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் மிகவும் புண்ணிய பலன்களைச் சேர்க்கும் என்று முன்னோர்கள் வகுத்தனர்.

விரத முறைகள்

நோன்பு தினத்தில் காலையிலேயே நீராடி, தூய ஆடைகளை அணிந்து பூஜையறையைச் சுத்தம் செய்து, கோலமிட வேண்டும். பூஜைக்குத் தேவையான தேங்காய், மாவிலைகள் கொண்ட கலசம் வைக்க வேண்டும். கலசத்தை அலங்காரம் செய்து அதன் மேல் நோன்புச் சரடை வைக்க வேண்டும். கலசத்தையே காமாட்சியாக அல்லது சாவித்திரி தேவியாகக் கருதி ஆவாஹனம் செய்து அஷ்டோத்திரங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

பூஜைக்கு உகந்த வெண்ணெயையும் அடையையும் தயாரித்து சமர்ப்பித்து, `உருக்காத வெண்ணெயும் உவப்பான காரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் நீங்காதிருக்க வேண்டும்' என்று சொல்லி நைவேத்தியம் செய்ய வேண்டும். பின்பு நோன்புச் சரடை பெண்கள் கட்டிக்கொள்ள வேண்டும். இந்த விரதம் இருக்கும் திருமணமான பெண்களுக்கு தீர்க்கசுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்கு கூடிய விரைவிலேயே திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேரம் : நாளை (14.3.2020) காலை சரடு மாற்றும் நேரம் : பகல் 11.00 முதல் 11.45 வரை

சரடு கட்டிக்கொள்ளும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச

ஹரித்ரம் தாராம்யஹம்

பர்த்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம்

ஸுப்ரீத பவ ஸர்வதா

அடுத்த கட்டுரைக்கு