Election bannerElection banner
Published:Updated:

"வீட்டிலேயே பொங்கல்!" - ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா ரத்து!

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா ( File Photo )

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் திருவிழாவின்போது நடக்கும் குத்தியோட்டம், தாலப்பொலி உள்ளிட்டவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பொங்காலை வழிபாடு உலகப் பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுக்கால் பகவதி அம்மனை வழிபடும்போது திருவனந்தபுரமே புகை மண்டலமாகக் காட்சியளிக்கும்.

1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 17 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2004-ம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது பழைய கின்னஸ் சாதனையை முறியடித்தது. கடந்த 2018-ம் ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டு பொங்காலை வழிபாடு நடந்த சமயம் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கியது. இதனால் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்ற கட்டுப்பாட்டுடன் பொங்காலை விழா நடத்தப்பட்டது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா

இந்த ஆண்டு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வரும் 19-ம் தேதி காப்புக்கட்டி தேவியை குடியிருத்தும் நிகழ்வுடன் திருவிழா தொடங்குகிறது. பிப்ரவரி 27-ம் தேதி பொங்காலை விழா நடைபெற உள்ளது. அடுத்த நாள், அதாவது 28-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பொங்காலை வழிபாடு நடத்துவது குறித்து கேரள அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

அதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்யும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை மட்டும் கோயில் வளாகத்தில் பொங்கலிட வைக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பெரிய அளவில் பொங்காலை வழிபாடு நடத்துவதை இந்த முறை ரத்து செய்வது என ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் கமிட்டி தீர்மானித்துள்ளது. ஆன்லைனில் புக் செய்பவர்களுக்கான ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் உள்ளதாகவும், எனவே பொங்காலை அன்று பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட வேண்டும் என்றும் கோயில் கமிட்டி அறிவித்துள்ளது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் திருவிழாவின்போது நடக்கும் குத்தியோட்டம், தாலப்பொலி உள்ளிட்டவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பண்டார ஓட்டம் நடத்துவது என்றும், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றி திருவிழா சமயத்தில் பக்தர்களைத் தரிசனத்துக்கு அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு