சேலம், சூரமங்கலம் சுப்ரமணிய நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோதனம் உள்ளது. இதில், கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீ ஞான அகஸ்தியருக்கென சந்நிதி அமைக்கப்பட்டு வருடாவருடம் குருபூஜை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை ஆகியன நடைபெற்றன. இந்தப் பூஜையில் 1,008 வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி ஞான அகஸ்தியருக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் 1,008 சங்குகளை வைத்து பூஜை செய்து பக்தர்கள் தங்கள் கைகளால் சங்காபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட இடம்புரி சங்குகள் 900 பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதேபோல் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கோட்டையூர் பகவதி சாமிகள், பண்ணவாடி சாமிகள், சன்னியாசிகள், அகோரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக கோயிலின் ஸ்தாபகர் சித்தரசு பேசியபோது, “அகத்தியர் என்பவர் சித்தர்களுக்கெல்லாம் தலைவராக இருந்தவர். அவருடைய நினைவாகவே அகத்தியர் தினத்தை உலக சித்தர் மருத்துவ தினமாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அந்த நாளில் ஆயுள் நட்சத்திர நாள் என்பதால் அகத்தியருக்கு அபிக்ஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வழிபட்டோம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆயுள் நடசத்திரத்தன்று 1,008 இடம்புரி சங்குகளை அகத்தியரிடம் வைத்துப் பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினோம்.

இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவத்துக்கு அகத்தியர் முதன்மையானவர் என்பதால் வரக்கூடிய பக்தர்களுக்கு, பொதுமக்களுக்கு சித்த வைத்தியத்தின் பயன்கள் குறித்து விவரிக்கும் விதமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா காலக்கட்டத்தில் மிகப்பெரிய மருந்தாகக் கருதப்பட்டது கபசுர குடிநீர். அதனை சித்தர்கள்தான் உலகத்துக்கு அளித்தனர்.
எனவே இந்த நாளில் சித்த மருத்துவத்தின் சிறப்பினை விளக்கும்விதமாக மக்களுக்கு இலவசமாக சித்த மருத்துவப் பரிசோதனைக்கும் ஏற்படுத்தியிருந்தோம். இதில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்” என்றார்.