நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே விஜயநாராயணம் என்ற கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் ஒரு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிமாக வசித்துள்ளனர். அவர்கள் அனைவருமே தொழில் வாய்ப்புகளைத் தேடி வெளியிடங்களுக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள்.

அதனால் விஜயநாராயணம் கிராமத்தில் தற்போது இந்துக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். ஆனாலும், அந்தக் கிராமத்தில் பழைமையான மேத்தப் பிள்ளை அப்பா தர்கா உள்ளது. அங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 16-ம் தேதி கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பொதுவாக, கந்தூரி விழா என்பது இஸ்லாமிய மத வழக்கப்படி அதற்கான நாள் கணக்கிடப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், விஜயநாராயனம் கிராமத்தில் உள்ள தர்காவில், ஆண்டுதோறும் ஆடி மாதம் கந்தூரி விழா கொண்டாடப்படு வருகிறது.

கடந்த 250 வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கப்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி வெளியிடங்களில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இந்தக் கிராமத்துக்கு வருவார்கள். சொந்த வீடுகளைப் பலரும் விற்றுச் சென்றுவிட்டபோதிலும், உள்ளூர் மக்கள் அவர்களுக்காக தங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்துத் தங்க வைப்பார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு நடந்த கந்தூரி விழாவில் வெளியிடங்களில் இருந்து சொற்ப எண்ணிக்கையிலேயே இஸ்லாமிய மக்கள் வந்து பங்கேற்றனர். இருப்பினும் உள்ளூரைச் சேர்ந்த பலரும் இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாற்று மதத்தினர், தங்களின் வீடு முன்பாக கந்தூரி ஊர்வலம் வரும்போது காணிக்கைப் பொருள்களைக் கொடுத்து மகிழ்கிறார்கள்.

இந்த கந்தூரி விழா மூலம் மத நல்லிணக்கம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. கந்தூரி விழாவுக்காக வெளியிடங்களில் இருந்து வந்துள்ள இஸ்லாமிய மக்களை உள்ளூர்க்காரர்கள் அன்போடு உபசரித்து விருந்து வைத்து அனுப்பிவைக்கிறார்கள். இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தர்காவின் நினைவாக ’மேத்தா’ என்ற பெயரை அதிகமாகச் சூட்டுவது குறிப்பிடத்தக்கது.