Published:Updated:

300 ஆண்டுகளாக மொகரம் பண்டிகைக் கொண்டாடும் இந்துக்கள் - சமூக நல்லிணக்கம் காட்டும் தஞ்சாவூர் கிராமம்!

மொகரம் பண்டிகை
மொகரம் பண்டிகை

"இந்துக்களாகிய நாங்கள் பத்து தினங்களும் விரதம் இருப்போம். அத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்ற வலியுறுத்தி நேர்த்திகடனாகத் தீமிதித்து மொகரம் பண்டிகைக் கொண்டாடுவோம்" எனக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்துக்கள் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையைப் பத்துநாள்கள் விரதம் இருந்து, உறவினர்களை அழைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தி கொண்டாடிவருவது சமூக நல்லிணக்கத்துக்கு மிக சிறந்த எடுத்துகாட்டாக அமைந்துள்ளது.
மொகரம் பண்டிகையைக் கொண்டாடும் கிராம மக்கள்
மொகரம் பண்டிகையைக் கொண்டாடும் கிராம மக்கள்

தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் கிராமம். காவிரியின் கிளையான ஆறான கல்லணை கால்வாய் கடந்து செல்வதால் வயல்வெளிகள் சூழ பசுமை பூமியாகக் காட்சியளிக்க கூடிய பகுதி. விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ள இந்த ஊர் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை விமர்சையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதேபோல் மொகரம் பண்டிகையான நேற்று, ஊரே கூடி தீ மிதித்து விழா எடுத்துள்ளனர். கிட்டதட்ட ஐந்து தலைமுறைகளாக இதனை கொண்டாடி வருவதாகவும், இது சமூக நல்லிணக்கத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துகாட்டாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து கிராம மக்கள் தரப்பில் பேசினோம். "எங்க ஊரில் செங்கரை என்ற குளக்கரையில் அமைந்துள்ள இடத்தில் அல்லா சாமிக்கான கட்டடம் உள்ளது.

இந்துக்கள் கொண்டாடடும் மொகரம் பண்டிகை
இந்துக்கள் கொண்டாடடும் மொகரம் பண்டிகை

அதில் கை உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். மொகரம் பண்டிகை நெருங்குவதற்கு பத்து நாள்களுக்கு முன்பே பந்தல் அமைத்து கை உருவங்களை வெளியில் எடுத்து அலங்காரம் செய்து பந்தலில் வைப்போம். எங்க ஊரில் நான்கு இஸ்லாமியக் குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் அந்தக் கை உருவங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து பூஜைகள் செய்து தினமும் பாத்தியா ஓதுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்துக்களாகிய நாங்கள் பத்து தினங்களும் விரதம் இருப்போம். அத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்ற வலியுறுத்தி நேர்த்திகடனாகத் தீ மிதிப்பதாக வேண்டிக் கொள்வோம். இதையடுத்து மொகரம் தினத்தன்று அந்தக் கை உருவங்களை பட்டுத் துணியால் அலங்கரித்து, பூ மாலையிட்டு நாங்கள் கிராமம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வருவோம். அதன்படி நேற்று இரவு தொடங்கிய இந்த நிகழ்வு காலைவரை தொடர்ந்தது.

பண்டிகை
பண்டிகை

கை உருவங்களைத் தூக்கிச் செல்லும் நபர்களுக்கு ஒவ்வொரு வீட்டிலும் கால்களில் தண்ணீரை ஊற்றி வரவேற்றனர். மண் கலையங்களில் வெல்லம், ஏலக்காய், எலுமிச்சை கலந்து செய்யப்பட்ட பானகம் நீரை கரைத்து வைத்திருப்பர். அதேபோல் அவல், தேங்காய், பழம் ஆகியவற்றுடன் அல்லா சாமியை வரவேற்பார்கள். ஊர்வலமாக வரும் அனைவருக்கும் பானகம், அவல் கொடுத்து உபசரிப்பார்கள்.

கன்னியாகுமரி: உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை... கலர்புல் படங்கள்!

இப்படியே ஊர் முழுவதும் சென்றுவிட்டுப் பின்னர் செங்கரைக்கு வந்து சேரும். இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நெருப்பில் அல்லா சாமியைத் தூக்கிச் சென்றவர்கள் இறங்கினர். இதனைத் தொடர்ந்து நேர்த்தி கடன் செலுத்தி கொண்டவர்கள் தீ மித்தனர். இதே போன்று எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். 300 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த விதமான மதப்பாகுபாடுமின்றி இதனை நாங்கள் நடத்தி வருகிறோம்.

இஸ்லாமியக் குடும்பங்கள் இருந்தாலும் இதற்கான ஏற்பாடுகளை நாங்கள்தான் செய்றோம். ஒரே குடும்பமாக ஒண்ணு மண்ணா நாங்கள் இருப்பதால் எங்களுக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள். இதனைக் கேள்விப்பட்ட பலரும் 'மதங்களை கடந்து சமூக நல்லிணக்கத்தோடு இதனை நடத்துறீங்க' என எங்கள் கிராமத்தைப் பாராட்டி வருகின்றனர்" என்கிறார்கள் பெருமிதத்தோடு!

அடுத்த கட்டுரைக்கு