Published:Updated:

யுக புருஷர் பசவண்ணர்!

பசவண்ணர்
பிரீமியம் ஸ்டோரி
பசவண்ணர்

- சித்தார்த்தன் சுந்தரம்

யுக புருஷர் பசவண்ணர்!

- சித்தார்த்தன் சுந்தரம்

Published:Updated:
பசவண்ணர்
பிரீமியம் ஸ்டோரி
பசவண்ணர்

-ஆன்மிகம்

வசதி இருப்போர் சிவாலயம் கட்டுவர்

வறியவன் யான் என் செய்வேனய்யனே?

என் காலே தூண், உடலே கோயில்

சிரமே பொற்கலசமய்யா

கூடலசங்கமதேவனே, கேட்டிடுவாய்

நிலையாய் இருப்பதற்கு அழிவுண்டு

ஜங்கமத்துக்கு அழிவில்லை.

- பசவண்ணர்

பன்னிரண்டாம் நூற்றாண்டு. கர்நாடக மாநிலத்தில் சாதியச் சமூகம் அதன் கோரமான செயல்பாட்டில் இருந்த காலம். மதம் ஒரு குறிப்பிட்ட சாதிக்குள்ளாக அடைபட்டு, பெரும்பான்மைச் சமூகத்துக்கு வழிபாட்டு உரிமைகள்கூட மறுக்கப்பட்ட காலம். அப்போது, இருள் நீக்கும் கதிரவன் போல அவதரித்தார், அந்த மகான். அவர் வேறு யாருமல்ல, `மனிதர்களில் சகலரும் சமானமே' என்று குரல் கொடுத்த பசவண்ணர்.

கி.பி.1131-ம் ஆண்டு மாதராசா-மாதலாம்பிகே தம்பதிக்குக் குழந்தையாகப் பிறந்தார் பசவண்ணர். இவருடைய சகோதரி அக்கநாகம்மா. இவருடைய தந்தையார் மாதராசா; அக்ரஹாரத்தின் தலைவர்.

பசவா, வளர்ந்து வரும்போதே சமூகத்தில் தன் கண்முன் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு மனம் வருந்தினார். அவரால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நன்கு அவதானிக்கும் திறனும் இரக்கமுள்ள இதயமும்கொண்டவராகவும், சுயாதீனச் சிந்தனை உள்ளவராகவும், காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் பழக்கவழக்கங் களையும், நம்பிக்கைகளையும் கேள்வி கேட்பவராகவும் வளர்ந்தார். சுருக்கமாகச் சொல்லப்போனால், ஒரு கிளர்ச்சிக் காரருக்கான குணாம்சங்கள் வளரும்போதே அவரிடம் இருந்தன.

பசவாவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, அவருக்கு உபநயனம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார், மாதராசா. இதையறிந்த பசவா, `தனக்கு இந்த மாதிரியான சம்பிரதாயங்களில் விருப்பம் இல்லை, பூணூல் அணிய மாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தார். தாய் மாதலாம்பிகே, கெஞ்சிக் கூத்தாடி பசவாவின் சம்மதத்தைப் பெற, ஒரு வழியாக உபநயனம் நடந்து முடிந்தது.

அதன் பிறகு பசவாவுக்கு முறையான கல்வி ஆரம்பமாயிற்று. சில ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர் இறந்துவிட, அவர் பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்துவந்தார். பதினாறு வயது இருக்கும்போது அவருக்குள் ஞானம் தோன்றியது. தான் அணிந்திருந்த பூணூலை அகற்றினார். இதனால் பலரும் அவரைத் தூற்றினர். அனைத்தையும் எதிர்கொண்டார். இதன் காரணமாக, வேறு வழியின்றி அங்கிருந்து கூடலசங்கமா என்னும் சிறு நகரத்துக்குக் குடிபெயர்ந்தார்.

கூடலசங்கமா... சங்கமேஸ்வரர் என்ற திருநாமத்தோடு ஈசன் கோயில் கொண்டிருக் கும் தலம். பசவாவுக்கு சங்கமேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது. அங்கேயே தங்கிவிட முடிவெடுத்தார். அனைத்தையும் துறந்து ஆண்டவனே கதி எனக் கிடந்தார்.

யுக புருஷர் பசவண்ணர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது அங்கு கோயில் அதிகாரியாக இருந்த ஈசான்ய குரு, பசவா ஆண்டவன்மீது கொண்டிருக்கும் பக்தியைக் கண்டு ஆலயத் திலேயே அவர் தங்க அனுமதித்தார். பசவா, குருவுக்கு உதவியாகக் கோயில் வேலைகளைச் செய்துவந்தார்.

கூடலசங்கமா... பசவாவின் ஆன்மிக வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இறைவன் முன்பாக ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை வலியுறுத்தும் விதமாக, சைவ மதத்தில் புதிய பிரிவான வீர சைவத்தை - லிங்காயத்தை நிறுவ முயன்றார் (இது குறித்து சர்ச்சைகள் இருக்கின்றன. அதாவது, `பசவாவுக்கு முன்பே இந்தப் பிரிவு இருந்தது' என்றும் `இவர் அதற்குப் புத்துயிர் அளித்தார்' என்றும் கூறுவர்).

தொழில் அமைப்பிலிருந்து சாதி அமைப்புக்கு வந்த சமூகம், அதிலிருந்து சமய அமைப்புக்கு மாறியது. அதில், உயர் சாதியி னருக்கு மட்டுமே இறைவனைக் கொண்டா டும் உரிமை கிடைத்தது. மற்றவர்களுக்கு மத தீட்சையோ, மந்திர தீட்சையோ கிடைக்க வில்லை. விளிம்புநிலை மக்களைப்போலவே பெண்களுக்கும் சமூகத்தில் கடைசிநிலையே ஒதுக்கப்பட்டது.

வழிபாட்டு உரிமைகளைப்போலவே கல்வியும் சாதி, குலம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுவந்தன. வர்க்க வேறுபாடுகளும், சாதிய வேறுபாடு களும், பாலின வேறுபாடுகளும் சுரண்டலுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தன. இதையெல்லாம் பசவா வெறுத்தார்.

கூடலசங்கமாவிலிருந்து மங்களவாடாவுக் குச் சென்று, சிலகாலம் அங்கு கருவூல அதிகாரியாகப் பணியாற்றினார் பசவா. தன் அந்தஸ்து, அதிகாரம், செல்வம் என அனைத்தையும் மக்களின் நல்வாழ்வுக்கும் மத வளர்ச்சிக்குமே செலவிட்டார். அவரது வீடு, சாதி பேதமின்றி அனைவருக்கும் எப்போதும் திறந்தே இருந்தது. உயர்பதவியில் இருந்தாலும் பசவா அரசாங்கப் பிரதிநிதி களின் அநியாயங்களை எதிர்த்தார். தன் கருத்துகளை வெளிப்படுத்த `வாச்சனா' (வசனம்) என்னும் பாக்களை எழுத ஆரம்பித்தார்.

`அரண்மனையில் ராணியாக இருப்பதைவிட பக்தரின் வீட்டில் வேலைக்காரியாக இருப்பதே மேல்',

`மன்னனின் பிணமானாலும் ஒரு காசுக்கு வாங்குபவர் இல்லை!'

போன்ற வாச்சனாக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, இவரின் கொள்கைகளையும் தெளிவுபடுத்தின. பசவா, தான் தொடங்கிய வீரசைவ மதத்தில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் என்று அறைகூவல் விடுத்தார்.

பசவா வைத்த கட்டுப்பாடுகள், அந்தக் காலத்தில் மிகவும் புதுமையும் புரட்சியுமாக விளங்கின. `கழுத்தில் இஷ்டலிங்கத்தை அணிய வேண்டும், புலால் உண்ணக் கூடாது. கோயிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்யக் கூடாது, ஒவ்வொருவரும் கண்டிப் பாக உழைக்க வேண்டும் போன்ற நிபந்தனை களை ஏற்றுக்கொள்பவர்கள் வீரசைவர்கள் ஆகலாம்' என்றார்.

பசவண்ணரைப் பொறுத்த அளவில் கோயில் என்பது ஒரு நிறுவனம். அது வசதி படைத்தவர்களுக்கும், உயர் சாதியினருக்கு மானது. ஆகவே, எந்தவொரு வீரசைவரும் கோயில் கட்டவோ, வழிபாட்டுக்காக கோயிலுக்குச் செல்வதோ கூடாது எனக் கண்டிப்புடன் கூறினார்.

``கடவுள் என்பவர் `இஷ்ட லிங்க’ வடிவில் நம் உடம்போடு இருப்பார். அவரே ஒவ்வொருவரின் இதயத்திலும் இருப்பார்'' என்று அறிவுறுத்தினார். `ஜோதிடர்களை அணுகி ஆலோசனைகளைக் கேட்கக் கூடாது, கடவுளை நினைக்கும் தினங்கள் எல்லாமே மங்கலகரமான தினம்தான்' என்று அறிவுறுத்தினார்.

இவையெல்லாம் மக்களை மிகவும் கவர்ந்தன. எண்ணற்ற மக்கள் வீர சைவத்தில் சேர ஆரம்பித்தனர்.

அந்தணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னை ஒரு ஹரிஜன பக்தரின் குழந்தை என வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டார் பசவா. சாதிக்கு எதிரான செயல்பாடாகவே அவரின் பக்தி அமைந்தது.

விளிம்புநிலை மக்களின் வீடுகளுக்குச் செல்வதும், அவர்களோடு சேர்ந்து சாப்பிடு வதும், சிவன்மீது பாடல்கள் பாடி அவர்க ளோடு சேர்ந்து ஆடுவதுமாக இருந்தார். இதனால் உயர்சாதியினரின் கோபத்துக்கும் தூற்றலுக்கும் ஆளானாலும் அதைப் பற்றி அவர் கவலைப்படவேயில்லை.

பசவண்ணாவின் கருத்தியலும் கோட்பாடும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவை. ஆனாலும் பசவா இவற்றை முன்வைத்து வீரசைவத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றார். அனைவரும் சமம் என்பதோடு மட்டுமல்லாமல், சாதாரண மனிதர்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றன என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இவரது வீட்டில் நடக்கும் கூட்டங்களை அனைவருக்குமானதாக மாற்றினார். அதில் சாதிப் பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். அங்கு அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர்.

யுக புருஷர் பசவண்ணர்!

இத்தகைய நடவடிக்கைகளால் கவரப் பட்ட உயர்சாதியைச் சேர்ந்த சிலர்கூட வீரசைவத்தில் சேர்ந்தனர். எந்தச் சாதியின ராக இருந்தாலும் அனைவரும் சமமாக நடத்த வேண்டும் என்பதுதான் அவர்களுக் குள் ஒரு நிபந்தனையாக இருந்தது.

இது பற்றி அவர்,

`தீட்டுண்டோ லிங்கமிருக்குமிடத்தில்

குலமுண்டோ ஜங்கமம் இருப்பிடத்தில்

எச்சிலுண்டோ பிரசாதம் இருக்குமிடத்தில்

தூய்மையின்றிப் பேசுவோன் சூதகன் பாதகன்

களங்கமின்மை, உண்மை, ஐக்கியம்

எனும் மூவகை

மன உறுதியால் கூடலசங்கமதேவனே

உமதடியார்க்கு இல்லாதது யாதுமில்லை.

- என்று விவரிக்கிறார். அனைவருக்கும் புரியும் வண்ணம் பசவண்ணரால் எழுதப் பட்ட `வாச்சனாஸ்’ எனப்படும் `வசனங்கள்’ கன்னட இலக்கியத்தில் வசன இலக்கியம் தோன்றுவதற்கான முன்னோடி என்றால் மிகையில்லை.

அவரைத் தொடர்ந்து வந்த நூற்றுக் கணக்கான ஆண் சரணர்களும் பெண் சரணேயர்களும் பல ஆயிரம் வசனங்கள் எழுதினார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் அக்கமகாதேவி, அல்லமப்பிரபு, உரிலிங்க பெத்தி, சென்ன பசவண்ணா, ஜேடர தாசிமய்யா ஆகியோர்.

இதுவரை கிடைத்திருக்கும் வசனங்களின் மொத்த எண்ணிக்கை இருபத்தோராயிரம் ஆகும். கி.பி 1180-ம் ஆண்டு பசவண்ணர் காலமானர். பசவண்ணரின் கொள்கைகளை ஏற்ற சரணர்கள், அவற்றைத் தீவிரமாக எடுத்துச் சென்றனர்.

பல சிறந்த மெய்ஞ் ஞானிகள், தலைவர்கள், கவிஞர்கள், தத்துவ ஞானிகள், அறிஞர்கள் தோன்றி வீரசைவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றாலும் சமூக - சீர்திருத்தவாதி என அழைக்கும் அளவுக்கு பசவண்ணருக்குப் பிறகு யாரும் தோன்றவில்லை. கி.பி. 1600-ம் ஆண்டு பிறந்த கவிஞர் சர்வக்ஞரை உண்மை யான மதப் புரட்சியாளர் என அழைக்கலாம்.

பசவண்ணரைப் பற்றி அவரது சமகாலத்த வரும், அவரோடு நெருக்கமாகப் பழகியவ ருமான அல்லமப்பிரபு, `யுக்தா உத்சகா’ – `யுகத்தை விழித்தெழச் செய்தவர்’ எனக் குறிப்பிட்டார். பசவண்ணருக்கு இது முற்றிலும் பொருத்தமானதாகும். சுமார் 890 ஆண்டுகளுக்கு முன்பே மரபுகளையும், மூடப் பழக்கவழக்கங்களையும் எதிர்த்து சமூகநீதிக்காகப் போராடிய யுகபுருஷர் அல்லவா பசவண்ணர்.

ஆம், பசவண்ணர் யுகத்தை விழித்தெழச் செய்தவர்தான். இன்றைக்கு கர்நாடகாவில் பசவண்ணரின் வீரசைவத்தை - லிங்காயத் தைப் பின்பற்றும் மக்கள்தொகை சுமார் 21 சதவிகிதம் என்கிறார்கள். முப்பதாண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு, 2018-ம் ஆண்டு `லிங்காயத்' தனி மதமாக அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.