Published:Updated:

`யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி’ - திருமூலரின் வாக்கும் மகாபெரியவா செயலும்!

மகாபெரியவா
மகாபெரியவா

அவரிடம் ஆணவத்தோடு வந்தவர்கள் அங்குசம் தீண்டிய யானையைப் போல அடங்கிப் போயினர். தேவையோடு வந்தவர்கள் அவை தீர்ந்துபோய்ப் போயினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சுவாமிநாதன், சுவாமிமலையில் அருளும் சுப்பிரமண்யனின் திருநாமம். சுவாமிமலையின் சிறப்பு என்னவென்றால் அங்கே சுவாமிநாதன் குருவாக அருள்புரிகிறான். அதுவும் தகப்பன்சாமியாக. இந்த லோககுருவாக தட்சிணாமூர்த்தியாக அவதாரம் செய்தவர் சிவபெருமான். அவருக்கே குருவாக சுவாமிநாதன் அமர்ந்திருக்கும் தலம். சுவாமிநாதன் என்ற பெயர் மட்டுமே எல்லோரையும் அந்நிலைக்கு உயர்த்திவிடாது. ஆனால், பகவான் அனுக்கிரக மூர்த்தியாக அவதரிக்கும்போது சுவாமிநாதனாகவே அவதரிப்பார் என்று பக்தர்கள் நம்பும்படித் தோன்றி இந்த தேசத்தை, பக்தர்களை வழிநடத்திய மகான் மகாபெரியவா.

மகாபெரியவா
மகாபெரியவா

87 ஆண்டுகள் துறவு வாழ்வு வாழ்ந்த அந்த மகான் எளிமை பூண்டு துறவுக்கு அழகு சேர்த்தவர். லட்சக்கணக்கானவர்களின் வாழ்வை மாற்றியவர். இவருடனான பக்தர்களின் அனுபவங்கள் சிலிர்ப்பூட்டுபவை. அவற்றை அவர்கள் சொல்லும் நேரத்தில் கண்களில் நீரின்றி அதைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் அவர்கள் திண்டாடுவதைக் கண்டிருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் அவர் மடாதிபதியாக வழிநடத்தியவர் என்பதால் அல்ல மகேஸ்வரனாக அருள்புரிந்து மக்களை வாழ வைத்தவர் என்பதால்தான்.

அவரிடம் ஆணவத்தோடு வந்தவர்கள் அங்குசம் தீண்டிய யானையைப் போல அடங்கிப் போயினர். தேவையோடு வந்தவர்கள் அவை தீர்ந்துபோய்ப் போயினர். நோய் அவர் தரும் தீர்த்தத்தில் கரைந்து ஓடும். பாக்கியங்கள் அவர் பார்வை பட்டதுமே பக்தர்களைப் பற்றும். இப்படிக் குறையொன்றுமில்லாத கோவிந்தனாக வாழ்ந்தவர் மகாபெரியவா.

மகா பெரியவா தன்னை தரிசிக்க வருபவர்களுக்கு ஆசி மட்டும் வழங்கிப் பசியோடு அனுப்புபவர் அல்ல. பஞ்ச காலத்தில் நிரந்தரமாக அன்னதானக் கொடியேற்றி மடத்தில் எப்போதும் உணவு வழங்க ஏற்பாடு செய்தார். மடத்துக்கு வந்தவர்கள் ஒருபோதும் பசியோடு போவதில்லை.

மகா பெரியவா -
மகா பெரியவா -

கொளுத்தும் வெயிலில் வளையல் விற்றுவந்தார் ஒரு வியாபாரி. வெயிலுக்குப் பயந்து எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வளையல் விற்காமலே தெருத்தெருவாய் வளையவந்தார். பகலவன் சூடு மட்டுமல்ல பசியும் சுட ஆரம்பித்துவிட்டது. எம்பெருமானே, என்ன சோதனை என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டே மடம் இருக்கும் தெருவுக்குள் நுழைந்தார். சந்நிதிக்குள் வந்த ஜீவனை தெய்வம் பார்க்காமலா விட்டுவிடும்... `வளையல் வளையல்’ என்னும் குரல் கேட்டு நிமிர்ந்தார் மகாபெரியவா. அந்த வியாபாரியை அழைத்துவருமாறு உத்தரவிட்டார். அவன் தலைபாரத்தை இறக்கிவைக்கச் சொன்னார். பகவான் பாதத்தில் பாரத்தை இறக்கிவைத்துவிட்டால் அப்புறம் கவலை என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவனிடம் விசாரிப்பவர்போல சில நிமிடம் ஏதேதோ பேசினார். பின்பு அங்கு வந்திருந்த கொஞ்சம் வசதியான பக்தரை அழைத்தார்.

``இன்னைக்கு இந்த வளையல் வியாபாரியின் பாரத்தை நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னைக்கு வெள்ளிக்கிழமை. மடத்துக்கு வர சுமங்கலிகள், குழந்தைகளுக்கு இந்த வளையலைக் கொடுத்தா புண்ணியம்” என்று சொல்ல அந்த பக்தர் பணம் கொடுத்து வளையல்களை வாங்கிக்கொண்டார். ஆனால், வெறும் பணத்தோடு அனுப்பிவிடவில்லை, அவருக்கு வயிறார உணவிட்டு சாப்பிட வைத்து அனுப்பினார்.

மகா பெரியவா
மகா பெரியவா

வெளிநாட்டிலிருந்து பெரியவாவின் பரம பக்தர் ஒருவர் இந்தியாவுக்கு வரப் புறப்பட்டார். இந்தியாவில் முதல் வேலையாக பெரியவா தரிசனம் என மனதில் நினைத்துக் கொண்டார். அந்த நினைப்பு மாறிவிடாதிருப்பதற்காக விமானம் புறப்பட்ட கணத்திலிருந்து உபவாசம் மேற்கொள்ள ஆரம்பித்தார். ஒன்றரைநாள் பயணம். சென்னை வந்திறங்கியதும் காஞ்சிபுரத்துக்கு கார் பிடித்துப் புறப்பட்டார்.

அந்த நேரம் பெரியவா மடத்து சமையல்காரரை அழைத்து சில உணவுகளின் பெயர்களைச் சொல்லி உடனே சமைக்கச் சொன்னார். நிச்சயம் அவை பெரியவா உண்ணும் உணவல்ல. ஆனாலும் மறுபேச்சு பேசமுடியுமா... அவர் சமைத்துமுடிக்கவும் அந்த பக்தர் மடத்தில் நுழையவும் சரியாக இருந்தது. பெரியவாளை தரிசனம் செய்ய அவர் ஓடிவந்தார்.

``எதுவும் இப்போ பேச வேண்டாம். முதல்ல போய் சாப்பிடு” என்று சொல்லி அங்கிருந்த ஊழியரை வழிகாட்டச் சொன்னார். பக்தர் கண்களில் கண்ணீர். உபவாசம் என்று உள்ளூர நினைத்தது இங்கு உயர்ந்த சந்நிதியில் கேட்டிருக்கிறதே என்று மெய்சிலிர்த்தபடி வீழ்ந்து வணங்கி உண்ணச் சென்றார்.

பெரியவாளை பக்தர்கள் நினைத்துக்கொள்ளும் கணத்தில் அவர் நம்மை நினைத்துக்கொள்கிறார் என்பதை இதுபோன்று பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார்.

மகா பெரியவா
மகா பெரியவா

அப்போது பெரியவா, புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார். அதை அந்தப் புலவர் தெரிந்துகொண்டு அவரை சந்திக்கத் தன் காரில் சென்றார். அவருக்கு பெரியவா மேல் பக்தி எல்லாம் இல்லை. மரியாதைதான். பயணம் நீண்டு ஊர்போய்ச் சேர இரவாகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை. பசியோடு ஊரின் எல்லைவரை வந்தவர், அங்கே தங்கியிருந்து காலையில் பெரியவாளைப் பார்க்கலாம் என்று தீர்மானித்தார். அப்போது அவரை ஒருவர் வந்து அழைத்து, ``நீங்க பெரியவாளைப் பார்க்கத்தானே வந்திருக்கீங்க, உங்களை உடனே வரச்சொன்னார்” என்றார். நடுநிசி. இப்போதுகூட நம்மை வரவேற்கிறாரே அந்த மாமனிதர் என்று எண்ணிக்கொண்டு முகாமுக்குப் போனார்.

``முதல்ல போய் சாப்டுட்டுவா” என்று அனுப்பினார். அந்த இரவில் சமையல்காரரை அழைத்து அரிசி உப்புமாவும் பிட்லையும் செய்யச் சொல்லும்போதே அவருக்குப் புரிந்துபோனது யாரோ விருந்தினர் வருகிறார் என்று. சுடச்சுட உணவுப் பசிக்கு தேவாமிர்தம்போல் இருந்தது. தன் பசியை உணர்ந்து உணவிட்டது தாயுக்குப் பின் பெரியவாதான் என்று அவர் எண்ணிக்கொண்டபோது அவர் மரியாதை பக்தியாக மாறியது.

உயிர்களைப் பிடித்திருக்கும் பிணி பசி. பசிப்பிணி தீர்க்கவே மணிமேகலை அட்சயபாத்திரம் பெற்றாள். பசி தீர்க்கவே வள்ளலார் அணையா அடுப்பை ஏற்றினார். மானுடத்தை உயர்த்திப் பிடித்த மகான்கள் எல்லோரும் பசி போக்குவதையே முதல் தர்மமாகக் கொண்டனர். மகாபெரியவா இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று கருதினார். அப்போது அவருக்கு திருமூலரின் வாக்கு நினைவுக்கு வந்தது.

`யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை 

யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை 

யாவர்க்குமாம் உண்ணும்போது ஓர் கைப்பிடி 

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே’

திருமூலர்
திருமூலர்

யாவர்க்குமாம் உண்ணும்போது ஓர் கைப்பிடி என்னும்வரி அவர் மனதைக் கவர்ந்தது. பிடி அரிசித் திட்டத்தைத் தொடங்கினார். வீட்டில் சமைக்க உலை வைக்கும்போது ஒருபிடி அரிசியையும் நயா பைசாவையும் தானத்துக்கு என்று எடுத்துவைத்துவிட வேண்டும். ஒரு உலை போடும்போது ஒருபிடி என்பது சிறுதுளிதான். ஆனால், சிறுதுளிகள் சேர்ந்துதானே பெருவெள்ளம் உண்டாகிறது. மாதம் முழுவதும் சேர்த்த அரிசியை மொத்தமாகச் சேர்த்து சமூக சேவகர்கள் அன்னமாக்கி அதை அந்த ஊர் இறைவனுக்கு நிவேதனம் செய்து அதை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இதுவே பெரியவாளின் கட்டளை. இந்தத் திட்டம் பெரியவா இருக்கும்வரை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு பசிப்பிணி போக்கியது. 

இப்படி சாதி மத பேதமின்றி மனிதத்துவத்தைத் தன் வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்த மகான் மகாபெரியவா. இவர்களின் 127-வது திருநட்சத்திர தினம் இன்று. இந்த நாளில் மகாபெரியவரின் திருவடிகளை தியானம் செய்து போற்றி வழிபட குருவருளுடன் திருவருளும் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு