Published:Updated:

சபரிமலை மண்டலகால பூஜைக்கான முழு ஏற்பாடுகள் - திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் விளக்கம்!

சபரிமலை

"தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கிறோம். விர்ச்சுவல் கியூ உள்ளதால் இனி பக்தர்களின் எண்ணிக்கையை சரியாகக் கணக்கிட முடியும். ஆன்லைன் புக்கிங் காரணமாக சபரிமலையில் குற்றங்கள் குறைந்துள்ளன."

சபரிமலை மண்டலகால பூஜைக்கான முழு ஏற்பாடுகள் - திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் விளக்கம்!

"தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கிறோம். விர்ச்சுவல் கியூ உள்ளதால் இனி பக்தர்களின் எண்ணிக்கையை சரியாகக் கணக்கிட முடியும். ஆன்லைன் புக்கிங் காரணமாக சபரிமலையில் குற்றங்கள் குறைந்துள்ளன."

Published:Updated:
சபரிமலை
பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைகளை ஒட்டிச் செய்யப்படுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன், உறுப்பினர் தங்கப்பன் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் ஆகியோர் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

இதில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறுகையில், "கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் சபரிமலை மண்டலகால மகரவிளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கடந்த மாத பூஜைக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டபோது தென் மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தார்கள். சபரிமலைக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா பக்தர்கள் அதிக அளவு வருவார்கள்.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் பேட்டி
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் பேட்டி

இந்த ஆண்டு மண்டலகால மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். அன்று மாலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மலையாள மாதமான விருட்சிகம் 1-ம் தேதியான நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மண்டலகால பூஜைக்காக டிசம்பர் 27-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ம் தேதி நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் புக்கிங் அவசியம். கடந்த காலங்களில் ஆன்லைன் முன்பதிவு கேரள போலீஸ் கவனித்து வந்தது. இப்போது, ஆன்லைன் புக்கிங் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் நடந்துவருகிறது. ஆன்லைனில் புக்கிங் செய்யத் தவறியவர்களுக்காக சபரிமலையில் 12 இடங்களில் ஸ்பார்ட் புக்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.

அதில் நிலக்கலில் மட்டும் 10 ஸ்பாட் புக்கிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்பாட் புக்கிங் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெர்ச்சுவல் கியூ காரணமாக எந்தக் காலதாமதமும் ஏற்படாது. ஆன்லைன் புக்கிங் செய்ய ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கையில் வைத்திருந்தால் போதும். சபரிமலையிலும், பம்பையிலும் அன்னதானம் வழங்கும் ஏற்பாடுகளை தேவசம்போர்டும், ஐயப்பா சேவாசங்கமும் ஏற்பாடு செய்துள்ளன. ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக நிலக்கல், பம்பை, சன்னிதானங்களில் மொத்தம் 2445 கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சபரிமலை பதினெட்டாம் படி பூஜை
சபரிமலை பதினெட்டாம் படி பூஜை
பைல் போட்டோ

கோயில் ஆசாரங்கள் அனைத்தும் முறைப்படி நடைபெறும். படிபூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவை முறைப்படி செய்ய ஏற்பாடு செய்யப்படுள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் அப்பம், அரவணை பிரசாதங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரவணை தயாரிப்பு இப்போதே தொடங்கிவிட்டது. தினசரி தயாரிக்கும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படும். சபரிமலை முன்னேற்பாடுகள் சம்பந்தமாக தென்னிந்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டம் இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பேருந்து ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கேரளா மாநிலத்தில் இருந்து மட்டும் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிலக்கல்லில் இருந்து மட்டும் பம்பைக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஒரு நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 300 பேருந்துகளும் கேரளாவின் பிற பகுதிகளில் இருந்து நிலக்கல்லுக்கு இயக்கப்படும். 40-க்கும் குறையாத பக்தர்கள் குழுவாக வந்தால் அவர்களுக்காகச் சிறப்புப் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும். மாற்றுதிறனாளிகளுக்கு எனச் சிறப்புப் பேருந்து இயக்க முடிவு செய்யப்படுள்ளது. மகரவிளக்கு தினத்தில் 1,000 பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளோம்.

சபரிமலை மண்டலகால பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் செய்தியாளர்களிடம் பேசினார்
சபரிமலை மண்டலகால பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் செய்தியாளர்களிடம் பேசினார்

பம்பா நதியில் புனித நீராடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை இருந்தால் மட்டுமே பம்பையில் நீராட தடை விதிக்கப்படும். பம்பையில் ஷவர் குளியலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறு வாகனங்களில் வருபவர்கள் பம்பையில் பக்தர்களை இறக்கி விட்டுவிட்டு திரும்பி வந்து நிலக்கல்லில் கார் பார்க்கிங் செய்யலாம். பெருவழிபாதையான எருமேலியில் இருந்து கரிமலை வழியாக செல்லும் கானகப் பாதையும், புல்மேடு வழி ஆகியவையும் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு வனத்துறை சார்பில் மெடிக்கல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வழியில் பக்தர்கள் விரி வைத்துத் தங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பையில் தற்காலிகப் பந்தல் ஏற்படுத்தப்பட உள்ளது. எருமேலி, நிலக்கல், செங்கனூர், களக்கூட்டம் ஆகிய பகுதிகளில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் வசதிக்காக இடைத்தங்கலுக்கான கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இருமுடிக் கட்டுகளில் பிளாஸ்டிக் இல்லாமல் இருக்கும் வகையில் பக்தர்கள் கவனம் எடுக்க வேண்டும். பம்பை ஆற்றில் ஆடைகளை விடுவதையும் பக்தர்கள் தவிர்க்க வேண்டும். பம்பையில் பலிதர்ப்பணங்கள் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை
சபரிமலை

தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கிறோம். விர்ச்சுவல் கியூ உள்ளதால் இனி பக்தர்களின் எண்ணிக்கையை சரியாகக் கணக்கிட முடியும். ஆன்லைன் புக்கிங் காரணமாக சபரிமலையில் குற்றங்கள் குறைந்துள்ளன. சபரிமலையில் பொருள்களைக் கொண்டுசெல்ல ரோப் வே ஏற்படுத்த 10 ஏக்கர் நிலத்தை வனத்துறை வழங்கியுள்ளது.

அதற்குப் பதிலாக இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கரையில் 10 ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு அரசு வழங்கியுள்ளது. சபரிமலையில் ரயில் பாதையும், எருமேலியில் ஏர்போர்ட்டும் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.