Published:Updated:

காவல் நிலையத்தில் காவடி வழிபாடு - குற்றங்கள் குறைய மன்னர் காலத்தில் இருந்து தொடரும் பாரம்பர்யம்!

தக்கலை காவல்நிலையத்தில் காவடி கட்டு வழிபாடு
News
தக்கலை காவல்நிலையத்தில் காவடி கட்டு வழிபாடு

விவசாயம் செழிக்கp பொதுப்பணித்துறை சார்பிலும், குற்றங்கள் குறைய காவல்துறை சார்பிலும் வேளிமலைk குமாரசுவாமி கோயிலுக்குக் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுக்கும் வழக்கம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்று வரும் பாரம்பர்ய நிகழ்வாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று வேளிமலை குமாரசுவாமி கோயில். குமாரகோயில் முருகன் கோயில் என அழைக்கப்படும் இந்தத் திருத்தலத்துக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்துக் குமாரகோயில் முருகன் கோயிலுக்கு பவனியாகச் செல்வது வழக்கம். அதுபோன்று தக்கலை காவல் நிலையம் மற்றும் தக்கலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்களில் காவடிகட்டி குமாரகோயிலுக்கு பவனியாக எடுத்துச் செல்வது வழக்கம். இதற்காகக் காவலர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து காவடிகட்டுவார்கள். இன்று கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் தக்கலை காவல் நிலையத்தில் இருந்து புஷ்பக்காவடி பவனியாக வேளிமலைக் குமாரசுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

காவல்நிலையத்தில் காவடிகட்டு
காவல்நிலையத்தில் காவடிகட்டு

வழக்கமாகக் காவலர்களின் வாக்கிடாக்கி ஒலிக்கும் தக்கலை காவல் நிலையத்தில் நாதஸ்வர மங்கள இசை ஒலித்தது. காவல் நிலையத்துக்குள் பூஜை நடந்ததால் யாரும் காலணிகள் அணிந்து ஸ்டேஷனுக்குள் அனுமதிக்கப்படவில்லை. காவலர்கள் காவி வேட்டிகட்டி, உடல் முழுவதும் சந்தனம் பூசி காவடிக்கட்டு பூஜையில் கலந்துகொண்டனர். காவலர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என கோஷம் முழங்க காவடி பவனியாகச் சென்றனர். இதில் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீனதயாளன், தக்கலை டி.எஸ்.பி கணேசன், தக்கலை காவல்நிலைய ஆய்வாளர் சுதேசன் உள்பட பல அதிகாரிகளும், காவலர்களும், இந்துகோவில் கூட்டமைப்பு மாவட்ட துணைத்தலைவர் வேல்தாஸ் உட்பட பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தக் காவடிக்கட்டு விழா திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இதுகுறித்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டம் சுதந்திரத்துக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. தக்கலை காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் 1891-ம் ஆண்டு கட்டப்பட்டவை. விவசாயம் செழிக்க பொதுப்பணித்துறை சார்பிலும், குற்றங்கள் குறைய காவல்துறை சார்பிலும் வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்குக் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுக்கும் வழக்கம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்று வரும் பாரம்பர்ய நிகழ்வாகும்.

தக்கலை காவல்நிலையத்தில் காவடிகட்டு
தக்கலை காவல்நிலையத்தில் காவடிகட்டு

அந்தப் பாரம்பர்யம் சுதந்திரத்துக்குப் பின்னும் ஆண்டுதோறும் தவறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை ஊழியர்களும், காவலர்களும் காவடி சுமந்து வேளிமலைக் குமாரசுவாமி கோியிலுக்கு பவனியாகச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்" என்றார். போலீஸ் காவடி குமாரகோயிலுக்குச் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்தபிறகுதான் கோயில் திருநடை சார்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக யானை மீது பால்க்குடம் பவனியும் நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக யானை வரவழைப்பது இல்லை. காவடிக்கட்டு விழாவை முன்னிட்டு தக்கலை காவல்நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது.