Published:Updated:

மயிலாடுதுறை: பூமியில் புதைந்த கயிலாசநாதர் - வெளிக்கொணர்ந்து குடமுழுக்கு நடத்திய கிராமம்!

கைலாசநாதர்
கைலாசநாதர்

இந்தக் கோயிலில் லிங்க வடிவத்திலிருந்த கயிலாசநாதர் பூமியில் புதைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள கூத்தியம்பேட்டை கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ கயிலாசநாதர் கோயில் உள்ளது. ஒருகாலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற தலமாக இருந்துள்ளது. இங்கு வந்து வழிபட்டால் பித்ரு தோஷம், திருமணத்தடை, கடன் பிரச்னை போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக  இருந்திருக்கிறது. காலப்போக்கில் மக்கள் மறந்ததாலும், இயற்கை சீற்றங்களாலும் இக்கோயில் முற்றிலுமாகச் சிதிலமடைந்து போனது.

இந்தக் கோயிலில் லிங்க வடிவத்திலிருந்த கயிலாசநாதர் பூமியில் புதைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். ஒரு நாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய கயிலாசநாதர் தன்னை வெளிக்கொண்டு வந்து வழிபட வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றித் தருவதோடு இக்கிராமத்தைக் காப்பேன் என்றும் கூறி அருளினாராம்.

கைலாசநாதர்     குடமுழுக்கு
கைலாசநாதர் குடமுழுக்கு

கனவில் தோன்றி ஈசன் அருளியதை அந்தப் பக்தர் கிராம மக்களிடத்தில் எடுத்துக் கூறியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் ஒன்று கூடி கயிலாசநாதரை வெளியே எடுத்து தற்போது சிறிய அளவிலான தகரக் கொட்டகை அமைத்துள்ளனர். அதில் கயிலாசநாதரை பிரதிஷ்டை செய்து சிவாசாரியர்களைக் கொண்டு தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்துள்ளனர்.

குடமுழுக்கு முடிந்ததைத் தொடர்ந்து கயிலாசநாதர், நந்திபெருமான், விநாயகர் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பழம்பெருமை வாய்ந்த கோயிலில் கொலுவீற்றிருந்த ஈசன், பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மக்கள் வழிபாட்டுக்கு வந்துள்ள செய்தி அறிந்த சுற்றுவட்டார கிராமத்தினர் கூட்டம் கூட்டமாக வந்து கயிலாசநாதரை அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு