மக்களின் உற்சாகமான கோவிந்தா முழக்கங்களுடன் மதுரையிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் நேற்று அழகர் மலைக்கு வந்தடைந்தார். செல்லும் வழியில் பக்தர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு இன்று உற்சவ சாந்தி நடத்தப்படுவதுடன் சித்திரைத் திருவிழா முடிவுக்கு வந்தது.

கடந்த 5-ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தொடங்கிய சித்திரைத் திருவிழா நாளொரு விழா, சாமி ஊர்வலம், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் எனச் சிறப்பாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, 14-ம் தேதி அழகர்மலையிலிருந்து சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகராக மதுரையை நோக்கிக் கிளம்பியதும் சித்திரைத் திருவிழாவின் அடுத்த பகுதி தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளிய கள்ளழகர், எதிர்சேவையை ஏற்றுக்கொண்டு மதுரை வந்தவர், கடந்த 16-ம் தேதி அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து கிளம்பி வைகையாற்றில் எழுந்தருளி மக்களுக்கு ஆசி வழங்கினார். இந்தாண்டு கள்ளழகர் விழாவைக் காண இதுவரை இல்லாத அளவுக்கு 15 லட்சம் மக்கள் வந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தும் தசவாத கோலங்களில் மக்களுக்கு அருள்பாலித்தார் கள்ளழகர். அதன் பிறகு மண்டகப்படிகளுக்கு சென்றவர், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்து கடந்த 19-ம் தேதி பூப்பல்லாக்கில் எழுந்தருளியவர், தற்போது அழகர்மலையை நோக்கிக் கிளம்பினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வழிநெடுகிலும் மக்கள் பூக்களைத் தூவி கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர். புதூர், மூன்றுமாவடி, சுந்தரராஜன்பட்டி மண்டபப்படிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 3 மணிக்கு அப்பன் திருப்பதியிலிருந்து கிளம்பியவர் கள்ளந்திரியில் மக்களுக்கு அருள் வழங்கிவிட்டு லட்சக்கணக்கான மக்கள் பின் தொடர கிளம்பியவர் மாலை அழகர் மலைக்கு வந்தடைந்தார். பக்தர்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளங்களுடன் 18-ம்படி கருப்பணசுவாமி கோயில் முன் அமர்க்களப்படுத்தி வரவேற்றனர்.
பின்னர் கள்ளழகருக்கும் கருப்பணசுவாமிக்கும் தீபாராதணைகள் நடந்தன. அதன் பின் மேளதளம் முழங்க கோயிலுக்குள் நுழைந்தார் கள்ளழகர்.
27 பூசணிக்காய்களை ஏந்தி வந்த பெண்கள் அழகருக்கு 3 சுற்று சுற்றி திருஷ்டி கழித்தனர். அதன்பின் கோயிலுக்குள் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார் கள்ளழகர்.
இன்று உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. 'கோவிந்தா...கோவிந்தா...' என்ற பக்தர்களின் பரவசக்குரல் அழகர் மலையெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.