Published:Updated:

தான்தோன்றிமலை பெருமாளுக்குப் பிரமாண்ட காலணி காணிக்கை - காலம் காலமாகத் தொடரும் ஐதிகம்!

பெருமாளுக்கு காலணி காணிக்கை ( நா.ராஜமுருகன் )

இப்படி பெருமாள் விரும்பும் காலணியைச் செய்து தாங்கள் அவருக்குச் செலுத்தும்போது, பெருமாள் தங்களுக்கு வேண்டிய அனைத்து வளங்களைக் கொடுத்து, உய்விக்கச் செய்வதாக, காலணியைக் காணிக்கையாகச் செலுத்தும் பக்தர்கள் மனமுருகிப்போய் தெரிவித்தனர்.

தான்தோன்றிமலை பெருமாளுக்குப் பிரமாண்ட காலணி காணிக்கை - காலம் காலமாகத் தொடரும் ஐதிகம்!

இப்படி பெருமாள் விரும்பும் காலணியைச் செய்து தாங்கள் அவருக்குச் செலுத்தும்போது, பெருமாள் தங்களுக்கு வேண்டிய அனைத்து வளங்களைக் கொடுத்து, உய்விக்கச் செய்வதாக, காலணியைக் காணிக்கையாகச் செலுத்தும் பக்தர்கள் மனமுருகிப்போய் தெரிவித்தனர்.

Published:Updated:
பெருமாளுக்கு காலணி காணிக்கை ( நா.ராஜமுருகன் )

கரூர் மாநகரத்தை ஒட்டியுள்ள தான்தோன்றிமலையில் அமைந்துள்ளது கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில். தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலில் அமர்ந்து ஆட்சிபுரியும் பெருமாள், மலையோடு மலையாக சுயம்புவாக தோன்றிய பெருமாள். மேலும், இந்தக் கோயில் குடைவரை அமைப்பில் அமைந்து, காண்பதற்குப் பேரழகுடன் திகழும். அதனால்தான் இந்த ஊருக்கே தான்தோன்றிமலை என்று பெயர் வந்திருக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கல்யாண வெங்கட்ரமண பெருமாளுக்கு புரட்டாசி மாதத்தில் பெரும் திருவிழா நடப்பது வாடிக்கை. அந்த வகையில் இந்த வருடமும் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவையொட்டி, கடந்த மாதம் 27-ம் தேதி, கொடியேற்ற நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, கல்யாண வெங்கட்ரமண உற்சவர் தினமும் ஒரு வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.

 கல்யாண வெங்கட்ரமண திருக்கோயில்
கல்யாண வெங்கட்ரமண திருக்கோயில்
நா.ராஜமுருகன்

அதேபோல், ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. தொடர்ந்து, வரும் 5-ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற இருக்கிறது. அதற்கான விழா ஏற்பாட்டைக் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்துவருகின்றனர். இதற்கிடையில், இந்தப் புரட்டாசித் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பெருமாளுக்குப் பல்வேறு காணிக்கை பொருள்களைச் சாத்துவது வழக்கம்.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், வெள்ளப்பாறை அருகில் உள்ள சின்னத்தம்பட்டியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் பெருமாளுக்குப் பெரிய அளவிலான காலணியைச் செய்து, அதைத் தலைச்சுமையாகத் தூக்கிவந்து, பெருமாளுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். காலம்காலமாக இந்த நடைமுறை வேண்டுதல், ஐதிகம் என்று வழக்கில் உள்ளது.

முன்னொரு காலத்தில் அவர்களின் முன்னோர்களிடம் பெருமாள் கனவில் வந்து, "எனக்கு இந்த அளவில் காலணி வேண்டும். செய்து தாருங்கள்" என்று சொன்னாராம். அதனையொட்டி, அவர்கள் பிரமாண்ட காலணியைச் செய்து காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். அந்த நடைமுறை ஒவ்வொரு வருடம் புரட்டாசி மாதம் நடக்கும் திருவிழாவின்போதும் நடக்கிறது. அதேபோல், இந்த வருடம் 3 அடி நீளம், 2 அடி உயரம் கொண்ட காலணியைச் செய்து தரவேண்டும் என்று பக்தர் ஒருவர் கனவில் வந்து பெருமாள் சொன்னதாகவும் உடனே அவரும் அவரைச்சேர்ந்தவர்களும் பயபக்தியோடு பெருமாள் குறிப்பிட்ட அளவில் காலணியைச் செய்து சமர்ப்பித்துள்ளனர். அதைக் கோயிலில் வைத்து, இருதினங்கள் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டுள்ளனர்.

பெருமாளுக்கு காலணி காணிக்கை
பெருமாளுக்கு காலணி காணிக்கை
நா.ராஜமுருகன்

தொடர்ந்து, அங்குள்ள வீடுகளிலிருந்து வீட்டுக்கு ஒருவர் என மேளதாளங்கள் முழங்க, அந்தக் காலணியை மாறி மாறி தூக்கிக்கொண்டு, ஊர் ஊராகக் கடந்த வந்து, கல்யாண வெங்கட்ரமண பெருமாளுக்குக் காணிக்கையைச் செலுத்தவுள்ளனர். இப்படி, பெருமாள் விரும்பும் காலணியைச் செய்து தாங்கள் அவருக்குச் செலுத்தும்போது, பெருமாள் தங்களுக்கு வேண்டிய அனைத்து வளங்களைக் கொடுத்து, உய்விக்கச் செய்வதாக, காலணியைக் காணிக்கையாகச் செலுத்தும் பக்தர்கள் மனமுருகிப்போய் தெரிவித்தனர்.