Published:Updated:

குடுமியான்மலையைக் காவல் காக்கும் 12 பேர் - பல தலைமுறைகளாக இதைச் செய்யும் 2 கிராமங்கள்! பின்னணி என்ன?

கோயில் கருவறைக்குச் செல்வதற்கு முன்பு கையில் மைய மண்டபத்தை ஒட்டிக் கையில் மூங்கில் கம்புடன் அமர்ந்திருக்கின்றனர் இருவர். அவர்கள் யார் என்று விசாரித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது.

புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ தொலைவில் இருக்கிறது வரலாற்றுச் சிறப்புமிக்க குடுமியான்மலை சிகாநாதசாமி கோயில். மலைக் குன்றில் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் ஒன்று, அதன் அருகில் ஒன்று, குன்றின் மேல் ஒன்று என இங்கு மொத்தம் நான்கு கோயில்கள் உள்ளன. குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் சிகாநாதசுவாமி கோயில் உள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடனே, அங்கிருக்கும் தத்ரூபமான, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய சிற்பங்கள் நமக்கு ஆச்சர்யம் அளிக்கின்றன. அருகிலேயே ஆயிரங்கால் மண்டபம் அற்புதமாகக் காட்சியளிக்கிறது.

குடுமியான்மலை
குடுமியான்மலை

குடைவரைக்கோயிலுடன், அதன் அருகேயே கர்னாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்ந்த இசைக் கல்வெட்டு இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் இருக்கிறது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

கோயில் கருவறைக்குச் செல்வதற்கு முன்பு கையில் மைய மண்டபத்தை ஒட்டிக் கையில் மூங்கில் கம்புடன் அமர்ந்திருக்கின்றனர் இருவர். அவர்கள் யார் என்று விசாரித்தால், "நாங்கள்தான் கோயில் காவல்காரர்கள், இங்கு இன்று நேற்றல்ல எங்கள் பாட்டன், பூட்டன் காலம் தொட்டு தலைமுறை, தலைமுறையாக இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 12 பேர் மாறி, மாறிக் கோயிலில் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என்று கூறி நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றனர்.

திருச்சி உலா - குடுமியான்மலை: நூற்றாண்டுகளாகியும் பொலிவுடன் காணப்படும் இசைக் கல்வெட்டுகள்! எப்படி?

திரும்பிய பக்கமெல்லாம் வரலாறு புதைந்து கிடைக்கும் இந்தக் கோயிலுக்குக் காவல்காரர்கள் நியமிப்பது அவசியம்தானே! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோயிலின் பாதுகாப்பு கருதி பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சிலர் கோயில் காவல்காரர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, கோயில் பாதுகாப்புப் பணிக்காக, இரண்டு கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் பணியில் அமர்த்தப்பட, இன்றும் தலைமுறைகளைக் கடந்து தற்போதும் 12 பேர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் நடை திறப்பதிலிருந்து, கோயில் சிலைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கின்றனர். அதோடு, கோயிலைப் பற்றிய வரலாற்றை கை நுனியில் வைத்திருக்கும் இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்குக் கோயிலின் சிறப்புகளைக் கூறி நெகிழ வைக்கின்றனர்.

பெரியசாமி
பெரியசாமி

மாலை நேரத்தில் கோயில் நடை திறந்து கொண்டிருந்த பெரியசாமியைச் சந்தித்துப் பேச்சுக்கொடுத்தோம், "எத்தனை ஆயிரம் வருஷங்களாகப் பாதுகாப்புப் பணியைப் பார்க்கிறோம்னு தெரியலை. ஆனா, எனக்கு வெவரம் தெரியும்போது தாத்தா பார்த்துக்கிட்டு இருந்தாரு. அதுக்கப்புறம் அப்பா, இப்போ நான். எனக்கு வெவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே இந்தக் கோயில்லதான் இருக்கேன். எனக்கும் இப்போ 60 வயசாகிப்போச்சு. உருவம்பட்டி, காட்டுப்பட்டின்னு ரெண்டு ஊரு. ரெண்டும் குடுமியான்மலைக்கு பக்கத்து ஊரு. கோயிலைப் பொறுத்தவரைக் காவல் பணியில் 2 பேர் கண்டிப்பா 24 மணி நேரமும் இருக்கணும். மத்தபடி 10 பேர் இரவு காவல் பணிக்கு மட்டும் வந்திட்டு, காலையில கிளம்பி போயிடுவாங்க. உருவம்பட்டியில 6 பேர், காட்டுப்பட்டியில 6 பேர்னு மொத்தம் நாங்க 12 பேரு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு வருஷமும் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில ஈடுபடுறவங்களை மாத்திடுவோம். இந்த வருஷத்துக்கு நானும், சின்னத்தம்பிங்கிறவரும் சேர்ந்து ரெண்டு பேரா பாதுகாப்புப் பணியில இருக்கோம். கோயில் சாவி எங்க கையிலதான் இருக்கும். காலையில் நடை திறக்கிறதுல இருந்து, நடை சாத்துறது வரைக்கும் எல்லாம் நாங்கதான். இங்க இருக்க சிற்பங்கள், மண்டபம், தூண்கள் எல்லாத்தையும் பாதுகாக்கிறதுதான் எங்களோட முழு நேர வேலை. இங்க சில சிலைகள் லேசாக உடைஞ்சிருக்கும். அது எங்க முன்னோர்கள் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இப்போ அதுமாதிரியான சம்பவங்கள் எல்லாம் நடக்கவில்லை. நடக்கவும் விடமாட்டோம். இப்ப வர்ற பலருக்கும் இங்க உள்ள சிற்பங்கள், இசைக் கல்வெட்டு, வரலாற்றுச் சின்னங்கள் குறித்த புரிதல் இருக்கிறதாலேயே எங்க வேலையும் கொஞ்சம் எளிதாகிருச்சு" என்கிறார்.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

சின்னத்தம்பியிடம் பேசினோம். "தலைமுறை, தலைமுறையாக குடுமியான்மலைக் கோயில்ல காவல்காரங்களாக இருக்கோம். 24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபடுறவங்களுக்கு மாத ஊதியம் ரூ.500, இரவு மட்டும் வந்து தங்குறவங்களுக்கு மாதம் ரூ.100 கொடுக்கிறாங்க. ஆனாலும், பெட்ரோல் செலவுக்குக் கூட இந்தப் பணம் பத்தாது. தலைமுறை, தலைமுறையாக செஞ்சிக்கிட்டு வர்ற நடைமுறையை நாம மாத்திவிடக் கூடாது. அதோட சுவாமிக்கு செய்யிற இந்தத் தொண்டினை எங்களோட வாழ்நாள் பாக்கியமாகக் கருதி, ஆத்மார்த்தமாக செஞ்சிக்கிட்டு இருக்கோம். வெளியில எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், குடுமியான்மலை கோயிலுக்குள்ள வந்துட்டாலே மனசு அமைதியாகிடும். இப்ப உள்ள தலைமுறை எல்லாம் படிச்சி முடிச்சிட்டு வேலைக்கு, வெளிநாட்டுக்கு எல்லாம் போயிக்கிட்டு இருக்காங்க. எங்களுக்கு அப்புறம் அவங்களும் விடாம இந்தப் பணியில் ஈடுபடணும். கண்டிப்பாக அவங்களும் நிறுத்திடாம இந்தப் பணியை செய்வாங்கன்னு நம்பிக்கை இருக்கு" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு