Published:Updated:

`21 தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராடல்!' - கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி

மகா மக குளத்தில் மாசி மகத் தீர்த்தவாரி
மகா மக குளத்தில் மாசி மகத் தீர்த்தவாரி

கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர்,காசி விசுவநாதர்,வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர்,கவுத மேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில்,கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

கும்பகோணம் மகாமகக் குளத்தில் இன்று மாசிமக தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற்றது. 6 சிவன் கோயில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி, அம்பாள் வீதியுலா வந்து மகாமகக் குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்கள்.

மகாமகக் குளக்கரையில் எழுந்தருளிய சுவாமிகள்
மகாமகக் குளக்கரையில் எழுந்தருளிய சுவாமிகள்

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரசித்தி பெற்ற மகாமகத் திருவிழா நடைபெறும். இது தென்னகத்து கும்பமேளா என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திரன்று மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு மாசி மகத் திருவிழாவிற்காக மகாமகம் குளத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்துடன் மாசிமகத் திருவிழாவுக்காக கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசி விசுவநாதர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுத மேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில், கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதேபோல், வைணவ தலங்களான சக்கரபாணி சுவாமி கோயில் ,ராஜகோபால சுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில்களிலும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக விழா தொடங்கியது.

கும்பகோணம் மகா மக குளக்கரை
கும்பகோணம் மகா மக குளக்கரை

இந்தநிலையில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக காசி விசுவநாத சுவாமி கோயில், அபிமுகேஸ்வர சுவாமி கோயில், கவுதமேஸ்வரர் கோயில்களின் தேரோட்டமும் மகாமகக் குளக்கரையில் நடைபெற்றது. இதேபோல் வியாழ சோமேஸ்வரர் கோயில் தேரோட்டமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதையடுத்து மாசி மகத் திருவிழாவையொட்டி இன்று காலை 7 மணிக்கு சக்கரபாணி கோயில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரபாணியே என கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தீர்த்தவாரி
தீர்த்தவாரி

அதன் பின்னர் மதியம் 12 மணியளவில் மகாமகக் குளகரையில் மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் 10 நாள் உற்சவம் நடைபெறும் சிவன் கோயில்களான கொட்டையூர் கோடீஸ்வர சுவாமி, பாணபுரீஸ்வரர் கோயில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பேஸ்வரர், நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர் ஆகிய 6 சிவன் கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள் உறவசவர்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா வந்த பின்னர், மகாமக குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதையடுத்து அந்தந்த கோயில்களின் அஸ்திர தேவருக்கு அபிஷேகம், தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது மகாமகக் குளத்தை சுற்றிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி - அம்பாளை வழிபட்டனர். முன்னதாக மாசி மக தீர்த்தவாரியையொட்டி இன்று அதிகாலை முதலே மகமகக் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்து வழிபட்டனர்.

மகா மகக் குளக்கரையில் நடைபெற்ற தீர்த்த வாரி
மகா மகக் குளக்கரையில் நடைபெற்ற தீர்த்த வாரி

மாசி மகத் தீர்த்தவாரிக்காக மகாமக குளத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் நிரப்பட்டிருந்தது. கும்பகோணம் முழுவதும் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மகாமக குளத்திற்குள் ராட்சஸ பலூன் போன்ற படகில் போலீஸ் வட்டமடித்து கொண்டே இருந்தனர். பக்தர்கள் பலர் குடும்பம் சசிதமாக குளத்திற்குள் இறங்கி குளத்திற்குள் அமைந்துள்ள 21 தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர்.

அடுத்த கட்டுரைக்கு