Published:Updated:

‘எங்கும் அன்பு ஒளி பரவட்டும்!’

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பிரீமியம் ஸ்டோரி
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

ஆன்மிகம்

‘எங்கும் அன்பு ஒளி பரவட்டும்!’

ஆன்மிகம்

Published:Updated:
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பிரீமியம் ஸ்டோரி
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

இருள் விலகட்டும்.

கொரோனா என்ற கொடுந்தொற்றாகிய

காரிருள் விலகட்டும்.

நோயற்ற வாழ்வும், மகிழ்ச்சியும், அன்பும்

பூத்துக் குலுங்கட்டும்!

தீப ஒளி பரவட்டும். எங்கும்

மகிழ்ச்சியின் மத்தாப்புகள் ஒளி வீசட்டும்.

புற இருள் விலகி, அன்பின் ஒளி வீசட்டும்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளின் அணிவகுப்பு... இல்லந்தோறும் இனிப்புப் பலகாரங்கள்... புதுமணம் கண்ட இளையரின் தலை தீபாவளிக் கொண்டாட்டங்கள்... அப்பழுக்கற்ற அன்பு உள்ளம்கொண்ட குழந்தைகளின் மகிழ்ச்சியோ ஆனந்த தீபாவளி!

`பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற’ என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

எது அறிவறிந்த மக்கட்பேறு? அப்பூதி அடிகள் என்ற அடியவரின் வீட்டுக்கு திருநாவுக்கரசர் பெருமான் உணவருந்த வருகிறார். `அவருக்கு உணவு படைக்க வாழை இலை அரிந்து வருவாயாக...’ என்று அப்பூதி அடிகளும், அவருடைய துணைவியாரும் தங்கள் மகன் மூத்த திருநாவுக்கரசுவுக்கு ஆணையிடுகிறார்கள்.

`மூத்த திருநாவுக்கரசு’ என்ற அந்தக் குழந்தை `நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன்...’ என்று மகிழ்ந்து துள்ளிக் குதித்து ஓடுகிறது. வாழை இலை அரிந்துவரத் தோட்டத்துக்குச் சென்ற இடத்தில் அந்த பாலகனை விஷப்பாம்பு தீண்டிவிடுகிறது. உயிருக்குப் போராடும் நிலையிலும், வீட்டுக்கு வந்த திருநாவுக்கரசர் பெருமான் உணவு உண்பதில் காலதாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைத்து, வாழை இலையைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டு மயங்கி விழுகிறான் மூத்த திருநாவுக்கரசு.

வயதில் சிறியவனாக இருந்தாலும் ஞானத்தில், அனுபவத்தில் முதிர்ந்தவன் அந்த பாலகன். `அறிவறிந்த மக்கட்பேறு’ என்று திருவள்ளுவர் அழைக்கிற அன்பின் தொடர்ச்சி... தியாகத்தின் அடையாளம். மூத்த திருநாவுக்கரசைப்போல எத்தனை குழந்தைகள்... நினைக்க நினைக்க இந்த தீபாவளித் திருநாள் மேலும் நம் மனதுக்கு நிறைவைத் தருகிறது. 2014-ம் ஆண்டு வெளியான ஐ.நா-வின் ஒரு புள்ளிவிவரப்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் இருக்கும் நாடு இந்தியா. நம் இளைய தலைமுறையினர் நமக்குப் பெரும் நம்பிக்கை தருபவர்களாக இருக்கிறார்கள். அதை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பாக ஒரு சம்பவம்...

ஆசிரியர்களுக்கான தனியறை. அந்த மாணவன் ஓர் ஆசிரியரின் முன்பு நின்றுகொண்டிருந்தான்.

``நன்றாகப் படிக்கிறாய். ஆனால், கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்குள் திணறிப்போகிறாய். ஏன்?’’

அந்த மாணவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. விழியின் ஓரத்திலிருந்து கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன. ``அ...து... அ...து...’’ குரல் தடுமாறியது.

``புரிகிறது. உனக்குத் திக்குவாய்... அதனால் பிறர் முன் பேசுவதற்கு உனக்கு அச்சம், தயக்கம். அதுதானே... பரவாயில்லை. இந்தக் குறைபாட்டைப் போக்குவதற்கு ஏதாவது பயிற்சி செய்கிறாயா?’’

`இல்லை’ என்பதுபோல் தலையசைத்தான் மாணவன்.

`டெமாஸ்தனிஸ் யார் என்று தெரியுமா உனக்கு?’’

இப்போது, `தெரியாது’ என்பதுபோலத் தலையசைத்தான்.

‘எங்கும் அன்பு ஒளி பரவட்டும்!’

``கிரேக்கப் பேரறிஞர். சிறந்த சொற்பொழிவாளர். அவருக்கும் உன்னைப்போலவே இளம் வயதில் திக்குவாய். அதற்காக அவர் மனம் தளர்ந்துவிடவில்லை. தினமும் ஆற்றங்கரைக்குப் போவார். சில கூழாங்கற்களை எடுத்து வாயில் போட்டுக்கொள்வார். சத்தம் போட்டுத் தனக்குத் தானே பேசுவார். அப்படிப் பயிற்சி எடுத்தே சரளமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். நீ முயன்றால் உன்னாலும் உன் திக்குவாய் குறைபாட்டைப் போக்க முடியும். அதற்காக உன்னை ஆற்றங்கரைக்குப் போகச் சொல்லவில்லை. வீட்டில் கண்ணாடி முன்னால் நின்று உனக்கு நீயே பேசிப் பார். முதலில் உன்னால் தங்கு தடையின்றிப் பேச முடியும் என்று நீ நம்ப வேண்டும். நம்பிக்கை உன் குறைபாட்டைப் போக்கிவிடும்.’’ அந்த மாணவனின் துவண்டுபோயிருந்த மனதுக்கு வார்த்தைகளால் தெம்பூட்டினார் ஆசிரியர்.

அவர் சொன்னதுபோலவே கண்ணாடி முன் நின்று பயிற்சியெடுத்தான் மாணவன். தொடர் பயிற்சி, அவன் பேச்சைச் சீராக்கியது; தயக்கமில்லாமல் பேச ஆரம்பித்தான். பின்னாளில் அந்த மாணவர் மிகப்பெரிய சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளரானார். அவர்,

எம்.ஆர்.காப்மேயர் (M.R.Kopmeyer). இன்றைக்கு எண்ணற்ற மொழிகளில் அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, எத்தனையோ பேரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன. அப்படி, காப்மேயரைப்போலவே வியக்கத்தக்க பல சாதனைகளை நம்மை நெகிழச்செய்யும்விதத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது நம் இளைய தலைமுறை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப்போட்டிருக்கிறது. ஆனால், மனிதகுலம் எல்லாப் பேரிடர்க் காலங்களிலும் நிகழ்ந்ததுபோலவே இதிலிருந்தும் மெள்ள மெள்ள மீண்டெழுந்திருக்கிறது; மனிதநேயம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதை இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பல சம்பவங்கள் நமக்கு உணர்த்தின; சாமானியர்கள் புறக்கணிக்கப்பட்டபோதெல்லாம், அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோதெல்லாம் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்ததையும் நாம் பார்த்தோம். கொரோனாவின் கொடுங்கரங்களின் தாக்கத்துக்கு மத்தியிலும் தங்களுடைய அயராத கடும் உழைப்பால், முயற்சியால் தடம் பதித்திருக்கிறது நம் இளைய தலைமுறை.

சக்கிமங்கலம்... மதுரை மாவட்டத்திலுள்ள சிறு ஊர். இந்த ஊரில் பிறந்தவர் ரேவதி. தன் சிறு வயதிலேயே தந்தை வீரமணியையும் தாய் ராணியையும் பறிகொடுத்தார். தாய்வழிப் பாட்டியான ஆரம்மாளின் அரவணைப்பில்தான் ரேவதியும், அவர் தங்கை ரேகாவும் வளர்ந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘எங்கும் அன்பு ஒளி பரவட்டும்!’

பெற்றோர் இல்லை... அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் நிலை. சிறு வயதிலேயே விடுதியில் தங்கிப் படிக்கவேண்டிய வாழ்க்கைச் சூழல். ஆனால், அந்தச் சிறு பெண்ணுக்கு மனதில் ஊக்கம் இருந்தது. எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வேட்கை இருந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ஓர் ஓட்டப் பந்தயப்போட்டி. அதில் கலந்துகொண்ட ரேவதிக்கு முதல் பரிசு. அன்றைக்கு அவர் ஓட்டத்தை அத்தனை பேரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். காரணம், அந்தப் போட்டியில் ஷூக்கள்கூட அணியாமல், வெறும் காலோடு ஓடி வெற்றியைத் தட்டிப் பறித்திருந்தார் ரேவதி.

அதைப் பார்த்த தடகளப் பயிற்சியாளர் கண்ணன் என்பவர், முதல் வேலையாக அவருக்கு ஷூக்கள் வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து பயிற்சி கொடுத்து, பல போட்டிகளில் பங்கேற்கவைத்தார். ரேவதி மாநில அளவிலும், தேசிய அளவிலும் தங்கப் பதக்கங்களை வென்றார்.

உச்சபட்சமாக ஒரு வாய்ப்பு. அத்தனை விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு கனவு இருக்கும். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது என்கிற பெருங்கனவு. அந்த வாய்ப்பு எளிய குடும்பப் பின்னணியுள்ள ரேவதிக்குக் கிடைத்தது. மதுரைக்கருகே இருக்கும் சக்கிமங்கலத்தில் பிறந்த அவர், டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கால் பதித்திருக்கிறார். அந்தப் போட்டியில் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லையென்றாலும், வருங்காலத்தில் நிறைய சாதிப்பார் என்கிற எதிர்பார்ப்பை அனைவரிடமும் ஏற்படுத்தியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் மொத்தம் ஏழு பதக்கங்களை வென்று எல்லோர் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியிருக்கிறது இந்தியா. வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் புகழ் சேர்த்தார். இதுவரை கண்டுகொள்ளவே படாமலிருந்த இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறி எல்லோரையும் ஆச்சர்யப்படவைத்தது.

இந்தச் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. `பெருந்தொற்றுக் காலத்தில்கூட நம் இளைய தலைமுறை நமக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறதே!’ என்று பெருமிதம்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாராலிம்பிக்கிலும் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறது நம் இளைஞர் பட்டாளம்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருளுரைக் கதைகளில் ஒன்று இப்படி விரியும்... ஒருவன் கிணறு தோண்டப் புறப்படுவான். ஓரிடத்தில் 20 அடிவரை தோண்டுவான். நீர் வராது. இன்னோர் இடத்தில் தோண்டுவான். அது ஒரு 40 அடி இருக்கும். நீர் வருவதற்கான சுவடுகூடத் தெரியாது. மறுபடியும் மற்றோர் இடத்தில் 40 அடி தோண்டுவான். அங்கேயும் நீர் தட்டுப்படாது. சோர்ந்து போய்த் திரும்பிப் போவான். அவன் மட்டும் பொறுமையாக, மூன்று இடங்களிலும் சேர்த்துத் தோண்டிய 100 அடி ஆழத்தை முதல் இடத்திலேயே தோண்டியிருந்தால் கிணற்றின் ஊற்றுக்கண் திறந்து, நீர் பெருக்கெடுத்திருக்கும். 'சரியான இலக்கு, திட்டமிடல், பொறுமை இல்லாத வேலை பயன் தராது' என்பதற்கு இந்தக் குட்டிக்கதை ஓர் உதாரணம்.

நம் இளைய சமுதாயத்தினர் தெளிவாக இருக்கிறார்கள். பொறுமையாக, துல்லியமான திட்டமிடலோடு தங்கள் இலக்கை நிர்ணயித்துக்கொள்கிறார்கள். வெற்றிபெறுகிறார்கள். அதற்கான சிறு நம்பிக்கை ஒளிக்கீற்றாகத்தான் இந்தச் சாதனைகளை நாம் பார்க்கிறோம். பேரிடர் காலத்தில் கட்டுப்பாடுகளோடு கொண்டாடும் இந்த தீப ஒளித் திருநாளில் இல்லந்தோறும் ஒளிர்கிற தீப ஒளி, நம் இளைய தலைமுறை ஏற்றிவைத்த நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கு வலு சேர்க்கட்டும்.

பிள்ளையார், குழந்தைகளின் கடவுள். பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அவையெல்லாம் அவருக்கும் பிடிக்கும். அப்பம், மோதகம், வடை, சுண்டல் எனக் குழந்தைகளுக்குப் பிடித்த சிற்றுண்டி வகைகளே பிள்ளையாருக்கும் நிவேதனமாக வழங்கப்படுகின்றன. பிள்ளையார், குழந்தைச்சாமி மட்டுமல்ல. குழந்தைகளின் சாமி. பிள்ளை `ஆர்’ என்று விகுதி பெற்று `பிள்ளையார்’ என்று அன்பொழுக அழைக்கப்படுகிறார்.

‘எங்கும் அன்பு ஒளி பரவட்டும்!’

பிள்ளையாருக்குச் சிதறுகாய் (விடலைக் காய்) உடைத்தால் பிள்ளைகள் ஆனந்தமாக ஓடி வருவார்கள். குழந்தைகளின் ஆனந்தம்தான் பிள்ளையாரின் ஆனந்தம். பிள்ளையார் வழிபாட்டின் தனிச்சிறப்பு அது,

சிவபெருமான் ஒருமுறை உமையம்மை மீது கோபம்கொண்டு பூவுலகில் பிறக்கச் சாபமிட்டார். தம் வாயிற்காவலர் நந்தியம் பெருமானை உப்புக் கடலில் சுறாமீனாகப் பிறக்கச் சாபமிட்டார். முருகப்பெருமானைப் பூவுலகில் பேசாப்பிள்ளையாகப் பிறக்கச் சாபமிட்டார். ஆனால், பிள்ளையாருக்கு மட்டும் சாபம் தரவில்லை. ஏனென்றால், பிள்ளையாரை யார் சபித்தாலும் அந்த சாபம், யார் சபித்தார்களோ அவர்களையே சென்று சேரும். அதனால் அவர் பிள்ளையாரைச் சபிக்கவில்லை. அதைத்தான் பரஞ்சோதி முனிவர்,

`வெருவரு செலவின் வேழ முகத்தனை விதித்த சாபப்

பெருவலி தன்னைச் சாரும் பெற்றியால் சாபம் கூறான்...’

என்று குறிப்பிடுகிறார். பாரதி, விநாயகரிடம் வைக்கும் பிரார்த்தனை மகத்தானது!

`பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்...’ என்கிற பாடலில் `பல்லுயிரெலாம் இன்புற்று வாழ...’ வரம் கேட்பார் பாரதி. பாரதியின் இந்தப் பிரார்த்தனை நிறைவேறினால், எல்லா நாளும் இனிய தீப ஒளித் திருநாளாக மகிழ்ச்சி பொங்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைத் திருநாள்களில் சாணத்தில், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கப்பெற்று பூசை வழிபாட்டில் எழுந்தருளுகிறார். அத்தகைய சிறப்பு பிள்ளையாருக்கு உண்டு. தீபாவளி அன்று வீடுதோறும் மஞ்சளில், சாணத்தில், மண்ணில், பொன்னில் என எத்தகைய வடிவத்திலும் எழுந்தருளுவது பிள்ளையாரின் தனிச்சிறப்பு.

தமிழ்நாட்டில் முருகன் ஆலயங்களில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து சஷ்டி விரதம் தொடங்கும். முருக பக்தர்கள் அனைவரும் ஆறு நாள்களும் சஷ்டி விரதம் இருப்பார்கள். முருகன், சூரனை சம்ஹாரம் செய்யும் போர் நிகழ்ச்சி நடக்கும். ராம, ராவண யுத்தத்தில் ராமன், ராவணனை அழிக்கிறான். குருஷேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்கள், துரியோதனனை அழிப்பார்கள். ஆனால், முருகப்பெருமான் சூரபன்மனை அழிக்காமல் சேவற்கொடியாகவும் மயில்வாகனமாகவும் மாற்றித் தன் அருகிலேயே வைத்துக்கொள்கிறார்.

தீயவர்களை அழிப்பதல்ல அறம். தீயவர்களின் தீய குணங்களை மாற்றுவதே அறம். தீமையை நன்மையாக மாற்றுவதே அறம். அழித்தல் அறமன்று; திருத்தப்படுதலும் வாழ்விக்கப்படுதலுமே அறம்! விலங்குணர்வை ஒடுக்கி மனிதநேய உணர்வை, அன்புநெறியை நாளும் நாளும் வளர்ப்பதுதான் உண்மையான பக்தி நெறி!

`ஆழ்க தீயது எல்லாம்' என்பதுதான் தமிழ் மரபு! இந்தக் கந்தபுராண மரபு பின்பற்றப்படுமேயானால் போர் ஒடுங்கும்; புவி வளரும்!

தீப ஒளி புற இருளை விரட்டுகிறது. அன்பு ஒளி அக இருளை விரட்டுகிறது. எங்கும் அன்பு ஒளியைப் பரவச் செய்வோம். அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!