Published:Updated:

ரூ.28 லட்சம் புதிய நோட்டுகளால் பகவத் விநாயகருக்குக் குபேர அலங்காரம்!

கே.குணசீலன்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.28 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விநாயகருக்குக் குபேர அலங்காரம் செய்யப்பட்டது.

Lord Ganesh
Lord Ganesh

நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழாக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. ஒவ்வொரு விநாயகர் ஆலயத்திலும் விநாயகருக்கு மாறுபட்ட அலங்காரங்கள் செய்து வழிபட்டுவருகிறார்கள்.

New notes for ganesh
New notes for ganesh

கும்பகோணத்தில் இருக்கும் சிறப்புமிக்க விநாயகர் கோயில் ஒன்றில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.28 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விநாயகருக்குக் குபேர அலங்காரம் செய்யப்பட்டது. இதைப் பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்க்கக் கண்டு மகிழ்ந்து வழிப்பட்டுச் சென்றனர்.

கும்பகோணம் மடத்து தெருவில் உள்ளது பகவத் விநாயகர் கோயில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 25-ம் தேதி இந்த வருடத்துக்கான விழா தொடங்கியது.

Ganesh gupera alangaram
Ganesh gupera alangaram

இதை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு வகையான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் பகவத் விநாயகர்.

பகவத் விநாயகருக்குப் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிப்பது முக்கியமான நிகழ்வாகும். அதன்படி விழாவின் தொடக்கநாளில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் 'குபேர விநாயகா', 'வெற்றி விநாயகா' என்று கோஷங்கள் முழங்க வேண்டிக் கொண்டனர்.

இது குறித்துக் கோயில் வட்டாரத்தில் பேசினோம். "பகவர் என்ற முனிவர் தவம் இருந்து பின் காசிக்குச் செல்வதற்குத் தயாரானார். ஆனால், பல தடைகள் ஏற்பட்டு அவரால் காசிக்குச் செல்ல முடியவில்லை. இதனால் முனிவர் மனம் வருந்தியதைக் கண்ட விநாயகர் அவர் முன் தோன்றிக் காட்சியளித்தார். அதோடு காசியையும் முனிவர் கண்முன்னே தோன்ற வைத்தார். இதனாலேயே இந்த விநாயகருக்கு 'பகவத் விநாயகர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. இது, காஞ்சி மகா பெரியவர் இங்கு வந்து வணங்கிப் பேறுபெற்ற தலமும்கூட.

Lord ganesh
Lord ganesh

இங்கு, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 12 நாள்கள்  நடைபெறும். இதில் சிறப்புமிக்க குபேர அலங்காரம் 2000, 200, 100 என 28 லட்சம் ரூபாய்க்குப் புதிய ரூபாய் தாள்களைக் கொண்டு செய்யப்படும். பகவத் விநாயகரிடம் வேண்டிக்கொண்டு சகல வசதிகளுடன் இருக்கும் பக்தர்கள் சிலர், இந்த அலங்காரத்துக்காக ரூபாய் நோட்டுகளைக் கொடுப்பார்கள். அதன் பிறகு, அற்புதமாக அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலிப்பார். ஒரு நாள் முழுவதும் இந்த அலங்காரத்திலேயே காட்சி கொடுப்பார். அதன் பிறகு, பணம் கொடுத்த அன்பர்கள் வந்து தங்களது பணத்தைப் பெற்று செல்வார்கள். விநாயகரைக் குபேர அலங்காரத்தில் வழிபடுவதன் மூலம் செல்வச் செழிப்பும் சகல வளங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை" என்றனர்.