Published:Updated:

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி எப்போது?

மாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கொடியேற்றம் நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் நேற்று (07.11.2021) திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடிப் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக ஐதிகம். இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர், வதாரண்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். ஐப்பசி 1-ம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்றுவருகிறது. மேலும், பத்துநாள் உற்சவமாக மயிலாடுதுறையிலுள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் நேற்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காவிரி தீர்த்தவாரி
காவிரி தீர்த்தவாரி

மாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி பஞ்ச மூர்த்திகளுக்கான கொடிகள் ஏற்றப்பட்டன.

குருப்பெயர்ச்சி ஹோமம்: குருபகவான் எந்த இடத்தில் இருந்தாலும் கவலை வேண்டாம்! கலந்துகொள்வது எப்படி?

இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் அம்பலவாணர் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் வதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமியுடன் வீதியுலாவாக எடுத்துவரப்பட்ட கொடி பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தீர்த்தவாரி
தீர்த்தவாரி

கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள பத்துநாள் உற்சவத்தில், வரும் 13-ம் தேதி திருக்கல்யாணமும், 15-ம் தேதி திருத்தேர் வீதியுலாவும் நடைபெற்று 16-ம் தேதி மயிலாடுதுறை நகருக்குப் பெருமை சேர்க்கும் கடைமுக தீர்த்தவாரியும், கார்த்திகை 1-ம் தேதி முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்குத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடி பஞ்சமூர்த்திகளை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் செய்துவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு