Published:Updated:

`விஷ்ணு சகஸ்ரநாமம்... எம்.எஸ் அம்மா ரெக்கார்டிங் வியப்பனுபவம்!' - ஓர் அரிதான பகிர்வு

எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுடன் கௌரி ராம்நாராயணன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுடன் கௌரி ராம்நாராயணன்

எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவர் திருமதி கௌரி ராம்நாராயணன். பத்திரிக்கையாளர், நாடக ஆசிரியர், பாடகர் என்ற பல்வேறு பரிணாமங்களோடு இயங்கும் கௌரி ராம்நாராயணன் எம்.எஸ் அவர்களின் உறவினர்... அதாவது திரு. சதாசிவம் அவர்களின் தங்கையின் பேத்தி.

குழந்தைப் பருவம் முதலே எம். எஸ் அவர்களின் அன்பில் வளர்ந்தவர். பல சந்தர்ப்பங்களில் எம்.எஸ் அம்மாவோடு இணைந்து பாடியவர். அவரிடம், சக்தி விகடன் வாசகர்களுக்காக எம்.எஸ் அம்மாவுடனான அனுபவங்களை, அர்ப்பணிப்புகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டோம்.

"எம்.எஸ் அம்மா என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது சுப்ரபாதமும் விஷ்ணு சகஸ்ரநாமமுமே. இதில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை அவர் பாட வேண்டும் என்று முடிவானதும் அவர் மேற்கொண்ட பிரயாசை அபரிமிதமானது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுடன் கௌரி ராம்நாராயணன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுடன் கௌரி ராம்நாராயணன்

நான் அப்போதெல்லாம் சின்னப் பெண். 40 நாள்கள் வீட்டில் தினமும் பூஜை நடந்தது. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் அதில் உண்டு. வேத பண்டிதர்கள் வந்து ஒவ்வொரு பதத்தையும் எப்படி உச்சரிப்பது என்று சொல்லிக்கொடுப்பார்கள். பாராயணம் முடிந்ததும் அக்னிகோத்திரி தாத்தாசார்யர் விஷ்ணு சகஸ்ரநாமம் குறித்த பிரவசனம் செய்வார். ஒவ்வொரு வார்த்தை வார்த்தையாக அர்த்தம் சொல்லி விளக்குவார். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கேட்டுக் கேட்டு மனனம் செய்து பாடப் பயின்றார் எம். எஸ். அம்மா. அதற்குப் பின்தான் ரெக்கார்டிங்.

கல்கி அலுவலகத்திலிருந்து விஷ்ணு சகஸ்ரநாம ஸ்லோகங்கள் முழுவதையும் பெரிய பெரிய எழுத்துகளில் அச்சிட்டு அதை அட்டைகளில் ஒட்டிப் பார்த்துப் பாடுவதற்கு வசதியாக அடுக்கி வைத்திருந்தனர். அம்மா ஸ்டூடியோ வந்தார்கள். ஒலிப்பதிவு செய்யத் தொடங் கினார்கள்.

ஆனால் சரியாக அது நடக்கவில்லை. ஏதோ தடங்கல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. அம்மா சோர்ந்துபோய் அமர்ந்து விட்டார்கள். உடனே அவரின் கணவர் சதாசிவம் அவர்களுக்கு போன் செய்து, ஏனோ தெரியவில்லை. ஒலிப்பதிவு தடங்கலாகிக் கொண்டேயிருக்கிறது. நீங்கள் கொஞ்சம் ஸ்டூடியோவரை வரமுடியுமா என்று கேட்டார். அவரும் வந்தார்.

ஸ்டூடியோவைச் சுற்றிப் பார்த்தார். பின்பு , "இரண்டு குத்துவிளக்குகள் கிடைக்குமா..." என்று மேனேஜரிடம் கேட்டார். அவரும் உடனே ஏற்பாடு செய்தார். தரையில் ஒரு பாயை விரிக்கச் சொன்னார். மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு இரு புறமும் குத்துவிளக்கை ஏற்றிவைக்கச் சொன்னார். நடுவே எம்.எஸ்ஸைப் பாயில் அமரச் சொன்னார். அதன்பின் 'இப்போது பாடு' என்று சொன்னார்.

குத்துவிளக்கொளியில் அமர்ந்ததும் அம்மாவுக்குள் என்ன மாயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை, கண்களை மூடிக்கொண்டார். ஒருகணம் மனதில் அந்த மகாவிஷ்ணுவை தியானித்தார். பின்பு மடை திறந்த வெள்ளம் போலப் பாட ஆரம்பித்தார். அச்சடித்து வைத்திருந்த ஸ்லோக அட்டைகளை ஒருமுறை கூடப் பார்க்கவில்லை.

எம்.எஸ்.சுப்புலட்சுமி
எம்.எஸ்.சுப்புலட்சுமி

அதற்கு அவசியமும் ஏற்படவில்லை. விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் அந்தக் குத்துவிளக்கு வெளிச்சத்திலேயே பாடி முடித்தார். பாடி முடித்துக் கண்விழித்தபோது எதிரே இருந்த அட்டைகளைப் பார்த்து, "எதற்கு இதெல்லாம் இங்கே இருக்கிறது?" என்று கேட்டாரே பார்க்கலாம்.

"ம், எங்களுக்காக..." என்று ராதாக்கா நகைச்சுவையாக சொல்ல அனைவரும் சிரித்தோம். அந்த அளவுக்கு ஈடுபாட்டோடு அம்மா பாடுவார்கள்...

என் வாழ்வில் பாக்கியமாகக் கருதும் ஒரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். திருப்பதியில் ஒருமுறை அன்னமாசார்யரின் கீர்த்தனை களை இசைக்க நானும் எம்.எஸ் அம்மாவுடன் போயிருந்தேன். அப்போது..."

- முழுமையான பகிர்வுகளை சக்தி விகடன் இதழில் வாசிக்க > திரை விலகியது; தரிசனம் கிடைத்தது! https://bit.ly/3ibx5FZ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு