மதுரை மாவட்டம் அழகர்கோயில் மலைமீது அமைந்துள்ள நூபுரகங்கை அருள்மிகு ராக்காயி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

அழகர்மலை உச்சியில் நூபுரகங்கை தீர்த்தம் உற்பத்தியாகும் மாதவி மண்டபத்தில் அதிதேவதையாக அருள்பாலித்து வருகிறாள் ராக்காயி அம்மன். இக்கோயிலுக்கு கடந்த ஜூன் மாதம் பாலாலயம் செய்யப்பட்டுத் திருப்பணிகள் நடந்து கடந்த 9-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நேற்று குடமுழுக்கு நடந்தது.
நேற்று காலை சிவாச்சார்யர்கள் வேத மந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டுக் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பத்திரப்பதிவு - வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

"உபயதாரர் மற்றும் திருக்கோயில் நிதியுடன் அருள்மிகு ராக்காயி அம்மன் திருக்கோயிலில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் ராக்காயி அம்மன் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று குடமுழுக்கு சிறப்பாக நடந்துள்ளது.
இதுபோல் சோலைமலை முருகன் கோயிலில் உபயதாரர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் நிதியில் வெள்ளிக்கதவுகள் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

இவ்விழாவில் ஆன்மிகப் பெரியோர்களும் பக்தர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.