Published:Updated:

கோயில் உள்ளே தனி நபர் யாகங்கள் செய்ய தடை; உயர் நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

திருச்செந்தூர் கோயில்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கியிருந்து கந்த சஷ்டி விரதம் இருக்கக் கோயில் நிர்வாகம் பக்தர்களை அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது.

கோயில் உள்ளே தனி நபர் யாகங்கள் செய்ய தடை; உயர் நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கியிருந்து கந்த சஷ்டி விரதம் இருக்கக் கோயில் நிர்வாகம் பக்தர்களை அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது.

Published:Updated:
திருச்செந்தூர் கோயில்

தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள் பிராகாரத்தில் தனி நபர்கள் சிறப்பு யாகங்கள் செய்யத் தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில் கோயில் விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கியிருந்து கந்த சஷ்டி விரதம் இருக்கக் கோயில் நிர்வாகம் பக்தர்களை அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது.

திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க நிர்வாகி சித்ரங்கநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில " திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா 2022 அக்டோபர் 25 முதல் 30-ம் தேதிவரை நடைபெறுகிறது. அக்டோபர் 30-ம் தேதி சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயில் உள் பிராகாரத்தில் தங்கி விரதம் இருப்பது வழக்கம். ஆனால், இந்த வருடம் உள் பிராகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. காலம் காலமாக நடைபெறும் வழிமுறைகளை மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, கோயில் உள் பிராகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு, "கோயில் விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது. திருப்பதி கோயிலில் இதே போன்று உள்ளே சென்று விரதம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் மட்டும் சத்திரமா? இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

மதுரை உயர் நீதிமன்றக்கிளை
மதுரை உயர் நீதிமன்றக்கிளை

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணம் கொடுத்தால் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியும். கோயில் முழுவதும் தனியார் கையில் உள்ளது. இங்கு உள்ளது போல் ஊழல் எங்கும் இல்லை. கோயில் பணக்காரர்களுக்கானது கிடையாது. கடவுள் அனைவருக்கும் சமமானவர். உலகில் உள்ள முருகன் கோயில்களில் திருச்செந்தூர் முருகன் கோயில் மிகப் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே சென்று அமர்ந்தால் அனைத்தும் சரியாகி விடாது. உண்மையான பக்தியுடன் இருக்க வேண்டும்.

தேவையில்லாத நடைமுறைகளை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோயில்களைக் காப்பாற்றப் புதிய வழிமுறைகள் கொண்டு வர வேண்டும்.

திருச்செந்தூர், பழநி, மதுரை, ராமேஸ்வரம் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் திருப்பதியில் உள்ளது போன்ற கட்டுபாட்டு நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டும். தமிழகத்திலுள்ள கோயில்களின் வளாகத்திற்குள் தனி நபர்கள் யாகம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது. யாகங்கள் கோயிலின் வெளியே நடைபெற வேண்டும். இதனை இந்து அறநிலையத்துறை ஆணையர் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் ஒரே மாதிரியான நடைமுறைகளை, கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறைகள் கட்டுப்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.