கொரோனா கட்டுப்பாட்டால் கடந்த இரண்டு ஆண்டுகள் மக்கள் பங்களிப்பில்லாமல் சித்திரைத் திருவிழா நடந்த நிலையில் இந்தாண்டு பெரும் உற்சாகத்தோடு விழாவைக் கொண்டாட மதுரை மக்கள் தயாராகி வருகிறார்கள்.
இதற்காக மதுரை மாவட்ட நிர்வாகம், மீனாட்சியம்மன் கோயில், கள்ளழகர் கோயில் நிர்வாகம், மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை என அனைவரும் இணைந்து பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

மீனாட்சியம்மன் கோயிலில் தினந்தோறும் கொண்டாட்டமாக சித்திரைத்திருவிழா நடந்து வருகிறது. மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து கள்ளழகர் விழா தொடங்கிவிடும்.
அழகர் கோயிலிருந்து தொடங்கி மதுரை வரை உள்ள 456 மண்டகப்படியில் அருள்பாலித்து கள்ளழகர் மதுரைக்கு வருவார்.
இந்த விழாவில் கள்ளழகர் இருக்கும் இடத்தை மக்கள் சிரமமில்லாமல் தெரிந்துகொள்ள 'டிராக் அழகர்' என்ற செயலியை மதுரை மாவட்ட காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர். இது மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்து மதுரை மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை மாவட்ட மக்களின் பாதுகாப்பு வசதிக்காக மாவட்ட காவல்துறையால் 'மதுரை காவலன்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
சித்திரை திருவிழாவுக்காக இச்செயலியின் உள்ளே 'டிராக் அழகர்' (Track Alagar) என்ற வசதி கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 14-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காகக் அழகர் மலையிலிருந்து புறப்படும் கள்ளழகர் மீண்டும் அழகர் கோயிலுக்குத் திரும்பிச் செல்லும்வரை அவர் எந்த வழித்தடத்தின் வழியாகச் செல்கிறார், எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதனால், எந்தவிதமான இடையூறும் இல்லாமல் குறித்த நேரத்தில் கள்ளழகரை மக்கள் தரிசிக்க முடியும். மேலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, கள்ளழகரை தரிசிக்க இந்த வசதி பயன்படும். கள்ளழகர் இருக்கும் இடம் பத்து நொடிகளுக்கு ஒருமுறை செயலியில் அப்டேட் செய்யப்படும்.
இன்டர்நெட் வேகம் குறையும் பட்சத்தில் 'மதுரை காவலன்' செயலியில் எழுத்து வடிவில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கள்ளழகர் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது" என்றார்.