Published:Updated:

மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 11: நரசிங்கம்பட்டி சித்திரச்சாவடியும் ஈமக்காடும் ஏமக்கோயிலும்!

மதுரை ஈமக்காடு
News
மதுரை ஈமக்காடு

சுமார் 6000 ஆண்டுகளாக ஒரு நகரம் தன் கலாசாரம், வரலாறு, மொழி எனப் பலகூறுகளை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வருவது பிரமிக்கத்தக்க விஷயமல்லவா! அந்த பிரமிப்பை நம்முள் கிளர்த்தும் நகரம், வாழும் மூதூரான மதுரை மாநகரே!

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேலூர் செல்லும் வழியில், மதுரையிலிருந்து 15 கி.மீ தொலைவில், அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் கிராமங்களுக்கு இடையே அழகுற அமைந்திருக்கும் கிராமம் நரசிங்கம்பட்டி. வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியான பெருமாள்மலையின் அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாங்கான கிராமமிது. பழையூர் என்பது இக்கிராமத்தின் பழைய பெயர் என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள்.
ஈமக் காடு
ஈமக் காடு

மதுரையின் ஒவ்வொரு தெருவின் உள்ளேயும் ஒரு பழங்கதை காலங்காலமாய் நீண்டு, இன்றுவரை வந்துகொண்டே இருக்கும். கூட்டியோ குறைத்தோ அந்தக் கதையின் நீட்சி காலச்சங்கிலியின் கண்ணியை அறுக்காமல் வந்துகொண்டே இருக்கும். அதனால்தான் மதுரையை 'வாழும் மூதூர்' என்று அழைப்பார்கள். பழம்பெரும் பாரம்பர்யம் மிக்க நகரங்களான ரோம், ஏதென்ஸ் போன்றவை காலத்தின் வேகத்தில் பூமிக்குள் புதையுண்டு, அடுத்த அடுக்கில் புத்துயிர் பெற்று எழுந்து நிற்கும். தொல்லியல் ஆய்வாளர்கள் அந்நகரங்களைத் தோண்டும்போது, அடுக்கடுக்காக நாகரிகங்களின் மிச்ச சொச்சங்களை எடுப்பார்கள். ஆனால், சுமார் 6,000 ஆண்டுகளாக ஒரு நகரம் தன் கலாசாரம், வரலாறு, மொழி எனப் பலகூறுகளை இன்றுவரை தொடர்ச்சியாக எடுத்து வருவது பிரமிக்கத்தக்க விஷயமல்லவா! அந்த பிரமிப்பை நம்முள் கிளர்த்தும் நகரம், வாழும் மூதூரான மதுரை மாநகரே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பழையூர் நரசிங்கம்பட்டியானதும் ஒரு கதைதான்!

16-17ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் தொடக்கப்பகுதியில் சோழருக்கும் பாண்டியருக்குமான போர்கள் விட்டுவிட்டு நடந்து கொண்டிருந்தன. பொய்க்காத வையை பாய்ந்தோடி, செழுமையாக நின்ற பகுதிகளில் ஒன்று பழையூர் கிராமத்தைச் சுற்றிய பகுதி. சோழருக்கும் பாண்டியருக்குமான ஒரு போரில், பாண்டியர்கள் தோற்றுவிட, நரசிங்கத்தேவர் என்ற சோழத் தளபதிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது பழையூர் கிராமம். பின்னாள்களில் அவரது பெயரில் நரசிங்கம்பட்டி என்றானது என்று ஊரின் பெயர் வரலாற்றுக் கதையைச் சொன்னார் அவ்வூர் வழக்கறிஞர் ஒருவர். போரின் வரலாறு பற்றி வரலாற்று ஆய்வாளர்கள் தேடிச் சொல்லட்டும்.

ஈமக் காடு
ஈமக் காடு

சித்திரச்சாவடி:

நரசிங்கம்பட்டியில் ஊர் பொதுச் சாவடி ஒன்றும், சித்திரச்சாவடிப் பெருமாள் கோயிலும் உள்ளது. இந்தப் பொதுச் சாவடி ஊர் மக்களின் பஞ்சாயத்துகளைத் தீர்க்கவும், ஆண்கள் அமர்ந்து ஊர்ப்பொது விஷயங்களைப் பேசவுமாய் அமைந்த இடம். எல்லா ஊர்களிலும் இப்படி ஒரு சாவடியோ, ஆலமரமோ பார்த்திருப்போம்தானே! ஆனால், நான்கு கற்தூண்களும் கொஞ்சம் உயரமான திண்ணையும் மட்டும் வைத்துக் கட்டப்பட்ட சாதாரண சாவடிகளைப் போலல்லாது, இச்சாவடிக்குள் 17ம் நூற்றாண்டில் வரையப்பட்ட அழகிய இயற்கைக் காட்சிகள், ராமாயணக் காட்சிகள் மூலிகை வண்ண ஓவியங்களாக உள்ளன. காலமகள் தன் கைவண்ணத்தை இப்போது இந்த ஓவியங்களின் மேல் காட்டிக் கொண்டிருக்கிறாள். சாவடியின் மேற்கூரை பராமரிப்பின்றி சிதிலமடைந்து, உள்ளே உள்ள ஓவியங்களையும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிதைத்து வருகிறது. கலையழகு மிக்க ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் ஒன்று காலவெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் அடித்துச் செல்லப்படுகிறது என்று அவ்வூர் இளைஞர்கள் சிலர் வருத்தப்பட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல லட்சங்களைச் செலவு செய்து, பராமரிக்க வேண்டிய இடமாய் இன்று இந்தப் பெரிய சாவடி என்கிற சித்திரச்சாவடி இருக்கிறது. பல பத்தாண்டுகளுக்குப் பின் பங்காளிகளுக்குள் ஏற்பட்ட முரண்களின், சின்னச் சாவடி ஒன்றும் ஊருக்குள் கட்டப்பட்டிருக்கிறது. அழகர்கோயில் தேரோட்டத்தில், முக்கியத்துவம் பெறுகிற நாடுகளில், வல்லாளப்பட்டி, தெற்குத்தெரு, பாளையப்பட்டு 'நாடுகளோடு' நரசிங்கம்பட்டியும் ஒன்று. இங்கு பெருமாள் கோயிலும், சித்திரச்சாவடியும், ராமயணக்காட்சிகளும் இருப்பதில் ஆச்சர்யமென்ன...

இந்தச் சித்திரச்சாவடி, வழக்கமான ஊர்ப் பொதுச் சாவடிகளைப் போல், பெண்கள் நுழையக்கூடாத இடமாகவே இன்றும் இருக்கிறது, பெண்களின் தீட்டு என்கிற பார்வையில். சிறு பெண்குழந்தைகள் மட்டுமே இச்சாவடிக்குள் நுழைய அனுமதி உண்டு. வயது வந்த பெண்கள் இதற்குள் நுழையவோ, சித்திரங்களைப் பார்க்கவோ அனுமதியில்லை. நானும் புகைப்படங்கள் மூலமே இம்மூலிகை வண்ண ஓவியங்களைப் பார்த்துக்கொண்டேன்.

சித்திரச் சாவடி
சித்திரச் சாவடி

ஈமக்காடும் ஏமக்கோவிலும்:

இறந்தவர்களை எரிக்கும் இடத்தைச் சுடுகாடு என்போம். புதைக்கும் இடத்தை இடுகாடு என்போம். இடுகாட்டை ஈமக்காடு என்றழைக்கும் முறையும் உள்ளது. இறந்தோரை முறையாக அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட ஈமக்காடு நரசிங்கம்பட்டி கிராமத்தினருகில், பெருமாள் மலை அடிவாரத்தில் அடர்ந்த புதர்க்காட்டுக்குள் இன்றும் காணக்கிடைக்கிறது. இந்த ஈமக்காடு சுமார் 5,000 ஆண்டுகள் பழைமையானது என்றும், முதுமக்கள் தாழியைப் பயன்படுத்துவதற்கும் முந்தைய நாகரிகம் என்றும் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். சப்பட்டையான நீளவடிவிலான நடுகற்கள் பலவற்றை இப்போதும் இங்கு பார்க்கலாம். அத்துடன், இறந்தவர்களைப் புதைத்த அடையாளமாக, கற்களை அடுக்கி வைத்திருப்பதையும் அங்கங்கே காணலாம்.

இக்கல்லறைகள் கி.மு 10,000 ஆண்டுக்கும் கி.மு 300-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனத் தொல்லியலாளர்கள் சொல்கின்றனர். இன்று வனத்துறை இங்கு காடுகளை வளர்க்கும் பணியில், பல நடுகற்களை, முதுமக்கள் தாழிகளை பொக்லைன் வைத்து, சேர்த்துக் குவித்தபடி, நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் வரலாறும், தொல்லியலும் தெரிந்தும் புரிந்தும் கொண்ட மக்கள் குழு இவ்விடத்தைப் பசுமையாக்குவதோடு, வரலாற்றையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்த, வனத்துறையோடு கரம் சேர்த்தால் நல்லது என்பதே அவ்வூர் இளைஞர்களின் வேண்டுகோளாய் இருந்தது.

இவற்றையெல்லாம்விட, இன்னும் ஆச்சர்யமான நிகழ்வு என்னவெனில், இங்குள்ள ஏமக்கோவில் வழிபாடு. இங்கு பெரிய இச்சி மரத்தைச் சுற்றிப் பெரும் கற்குவியல்கள் குவிந்து கிடக்கின்றன. அந்த இடத்தை ஏமக்கோவில் என்று அழைக்கிறார்கள். இங்கு சாமி சிலை ஏதுமில்லை.

"இது நாம கும்பிடுற சாமி இல்லம்மா. ஊர்சனங்க அஞ்சி, வணங்குற சாமி” என்றார் அங்குள்ள பெரியவர். சிவராத்திரி அன்று மலையைச் சுற்றி வந்து, மலையில் இருந்து மூன்று கற்களை எடுத்துவந்து ஏமக்கோவிலில் வைப்பது அந்தக் கோயிலின் வழிபாட்டு முறை. பரம்பரை, பரம்பரையாக இந்த வழிபாடு நடைபெறுவதாகவும், முன்னோர்களை வணங்குவதற்காக இங்கு வருவதாகவும், அங்கு வணங்கும் மக்கள் சொல்கிறார்கள். இது மூத்தோர் வழிபாடு என்பதும், நம் முன்னோர்கள் புதைக்கப்பட்ட இடம் என்பதும் இந்த ஏமக்கோவில் வழிபாடும் நமக்குப் பல நூறாண்டுகளாகச் சொன்னபடி இருக்கின்றன.

சித்திரச் சாவடி
சித்திரச் சாவடி
நரசிங்கம்பட்டி என்கிற சிறிய கிராமம், தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் மூதூர் மதுரை வரலாறு எனும் பெரிய ஆரத்தில் ஒரு சிறு கண்ணியே இது. இன்னும் இன்னும் ஏராளம் இச்சிற்றூரின் ஈமக்காட்டுக்குள் புதையுண்டு இருக்கக்கூடும். தோண்ட விருப்பமுள்ளவர்கள் அவசியம் ஒரு முறை நரசிங்கம்பட்டி ஈமக்காட்டையும் சித்திரச்சாவடியையும் எட்டிப்பார்த்துவிட்டுப் போங்கள்!