Published:Updated:

சிலிர்ப்பூட்டும் தமிழ் இசை... அருள் மணக்கும் திருவருட்பா! - வடபழநியில் களைகட்டும் இசைவிழா

வடபழநி சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் இந்த இசைவிழாவை வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கமும் எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயமும் இணைந்து நடத்திவருகின்றன.

சீர்காழி சிவ சிதம்பரம்
சீர்காழி சிவ சிதம்பரம்

டிசம்பர் மாதம் என்றாலே இசைவிழாக்கள் நினைவுக்கு வரும். கர்னாடக இசை, தமிழிசை எனக் களைகட்டத் தொடங்கியிருக்கும் இந்த ஆண்டு இசைவிழாவில் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது வள்ளலார் பாடல்களையும் கொள்கைகளையும் மையமிட்ட இசைவிழா.

சென்னை வடபழநி சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகக் கலையரங்கக் கூடத்தில் நடைபெற்றுவரும் இந்த இசைவிழாவை வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கமும் எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயமும் இணைந்து நடத்திவருகின்றன. சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் விழா ஆண்டுதோறும் மார்கழி இசை விழாவாக இங்கே நடத்தப்படும். இந்த ஆண்டின் இசைவிழா டிசம்பர் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இசை விழா
இசை விழா

டிசம்பர் 29-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு அறிஞர்கள், வள்ளல் பெருமான் சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என விருந்தினர்கள் வருகை தந்து உரையாற்றி சிறப்புச் செய்த வண்ணம் இருக்கின்றனர். தினமும் மாலை 3 மணிக்குத் தொடங்கி இரவு 8.30 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. `வள்ளலார் அருட்பா இசை'யை மையமாகக் கொண்டு பண்ணிசைகளை வித்வான்கள் இன்னிசையாக வழங்கி வருகின்றனர்.

சீர்காழி சிவசிதம்பரம், பத்ரி நாராயணன், டி.கே.எஸ் கலைவாணன், திருவாரூர் வெங்கடேஷ், மதுரை தியாகராஜன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் வந்திருந்து இசை வழங்கி மகிழ்வித்தனர். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விஜயராகவன், தமிழ் மாநில முன்னாள் தேர்தல் ஆணையர் வை.பழனிச்சாமி உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இசைக்கடல் விருதினை இந்த ஆண்டு ஹரித்வாரமங்கலம் பத்மஸ்ரீ ஏ.கே.பழனிவேல் பெற்றுக்கொண்டார். விழாவின் முத்தாய்ப்பாக, சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாள்களிலும் காலை 9 மணிமுதல் இரவு 8.30 மணிவரை நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

சனிக்கிழமை காலை முதல் திருப்புகழ் இசை, திருவள்ளூர் பார்த்தசாரதி வயலின் உள்ளிட்ட கச்சேரிகள் நிகழவுள்ளன. சொற்பொழிவுகளும் நடக்கவிருக்கின்றன. அன்று மதியம், கிருபானந்த வாரியார் பேத்திகள் வள்ளி, லோச்சனா ஆகியோரின் தமிழிசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது. மதியம் தொடங்கி மாலை வரையிலும் தமிழிசைக் கச்சேரியும் நாட்டிய அரங்கேற்றமும் நடைபெறவிருக்கின்றன.

இசைவிழா
இசைவிழா

ஞாயிறு காலை முதல் மதியம் வரையிலும் திவ்ய பிரபந்த பாசுரங்கள், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், பாபநாசம் சிவன், அருணாசலக் கவிராயர் உள்ளிட்டோரின் பாடல்கள், திருப்புகழ் ஆகியவை இசை அரங்கேற்றமாக நிகழவுள்ளன. அன்றைய தினத்தின் மாலை நிகழ்வில் தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்.

இந்த ஐந்து நாள் நிகழ்வில் கடந்த மூன்று நாள்களும் எல்லோருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. நிறைவு நாள்களான சனி மற்றும் ஞாயிறன்று கலந்துகொள்கிற எல்லோருக்கும் மதிய உணவும் இரவு உணவும் வழங்கப்பட உள்ளது.