Election bannerElection banner
Published:Updated:

நெல்லை: பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் பூத்துக் குலுங்கும் கொன்றை! - பக்தர்கள் பரவசம்

பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்கள்
பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்கள்

புத்தாண்டின் தொடக்கத்தில் சரக்கொன்றை மலரைப் பார்ப்பதால், வாழ்வில் வளம் கூடும் என்ற நம்பிக்கை உள்ள நிலையில், பழவூர் நாறும்பூநாதர் கோயிலின் கொன்றை மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

அதிசய ஐம்பொன் சிலைகள்!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூரில் ஆவுடையம்மாள் சமேத நாறும்பூநாதர் கோயில் உள்ளது. 16-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான இந்தக் கோயில் 15,000 சதுர அடியில், முழுவதும் வரிக்கற்கலால் பழங்காலக் கட்டுமானக் கலையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

நாறும்பூநாதர் கோயில்
நாறும்பூநாதர் கோயில்

இந்தக் கோயிலில் உள்ள இருந்த 13 ஐம்பொன் சிலைகள் கடந்த 2005-ம் ஆண்டு திருட்டுப் போனது. இது தொடர்பாக சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாள் உள்ளிட்ட 18 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் வழக்குத் தொடர்ந்து சிலரைக் கைது செய்தனர்.

பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் இருந்து கடத்தப்பட்ட ஆடல் நடராஜர், சிவகாமி அம்பாள், கிருஷ்ணர், அஸ்திரதேவர், மாணிக்கவாசகர், வெயில்காத்த அம்மன், காரைக்கால் அம்மையார், கோமதி அம்மன், சுப்பிரமணியர் என 9 சிலைகள் மீட்கப்பட்டன. போலீஸாரால் மீட்கப்பட்ட ஆடல் நடராஜர் மட்டும் 15 கோடி மதிப்பிலானது.

Vikatan

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் தல விருட்சமாக சரக் கொன்றை மரம் உள்ளது. கோயில் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்பே இந்த மரம் அங்கு இருந்ததாகத் தொல்பொருள் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மரத்தின் அடிப்பகுதி கோயிலின் உள்ளேயும் அதன் மேல்பகுதி மண்டபத்துக்கு வெளியேயும் வளர்ந்து நிற்கிறது.

கொன்றை மலரின் முக்கியத்துவம்!

சரக் கொன்றை மரத்தில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். அதைக் கொண்டு சித்திரை மாதப் பிறப்பின்போது சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

நாறும்பூநாதர் சுவாமி கோயில்
நாறும்பூநாதர் சுவாமி கோயில்

சித்திரை மாதத் தொடக்கத்தில் கொன்றை மலர்களால் சிவனை வழிபடுவது சிறப்புக்குரியது. அதன் காரணமாகவே குமரி மாவட்டத்தில் கனி காணுதல் நிகழ்வுக்கும், அருகில் இருக்கும் கேரள மாநிலத்தில் சித்திரை விசு நிகழ்வுகளிலும் சரக் கொன்றை மலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சரக் கொன்றை மலருக்கு சித்திரைப் பூ, சுவர்ண புஷ்பம் என்ற பெயர்களும் உண்டு. இந்த மலர்களை சிவபெருமான் தன் தலையில் சூடிக் கொண்டதாக சமய இலக்கியங்கள் மூலம் தெரியவருகின்றன. பொன்னிறமான கொன்றை மலர்கள் சரம் சரமாகப் பூத்துக் குலுங்குவதைக் காண்பதே பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.

Vikatan

சிவ பெருமானுக்கு உகந்த மரமான கொன்றை, பல்வேறு இடங்களில் உள்ள சிவாலயங்கள் தல விருட்சமாக உள்ளன. மரத்தின் பூ, இலை மற்றும் மரத்தின் பட்டை ஆகியவை மருத்துவக்குணம் மிகுந்தவை. இவை அனைத்துமே சர்க்கரை நோய், வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பக்தர்கள் பரவசம்!

சித்திரை மாதத்தில் சிவ பெருமானுக்கு நடக்கும் சிறப்புப் பூஜைக்கு சரக் கொன்றை மலர்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும் நிலையில், அதற்கு உகந்த வகையில் இப்போதே கொன்றை மலர்கள் பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் மரம் முழுவதும் பூத்துக் குலுங்குகிறது. புத்தாண்டில் சரக்கொன்றை மலரைப் பார்ப்பதால், வாழ்வில் வளம் கூடும் என்பது நம்பிக்கை.

பூத்துக் குலுங்கும் தல விருட்சம்
பூத்துக் குலுங்கும் தல விருட்சம்

பழவூர் நாறும்பூநாதர் கோயிலின் வெளியில் இருந்து பார்க்கும்போதே தெரியும் வகையில் மலர்கள் பொன்னிறமாக மினுங்குகின்றன. அதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாசலிலேயே பக்திப் பரவசத்துடன் கொன்றை மலர்களை அதிசயத்துடன் பார்த்து சிவநாமத்தை உச்சரிக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு