சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று இரவு முக்கிய நிகழ்வாக மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகத் திருவிழா சிறப்பாக நடந்தது.
நாட்டிலும் வீட்டிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழ் மரபை பறைசாற்றும் வகையில் மதுரை மாநகரை அன்னை மீனாட்சி ஆள்கிறாள் என்பது அனைவரும் அறிந்ததே. அதை முறைப்படி அறிவிக்கும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வே மீனாட்சி பட்டாபிஷேக நிகழ்ச்சியாகும்.

மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் பற்றி மறைந்த பண்பாட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான தொ.பரமசிவன் கூறும்போது,
"மதுரை நகரத்தின் தலைமை தெய்வமான மீனாட்சி, நகரத்தின் அரசி என்பது மக்களின் நம்பிக்கை. இன்றளவும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி திருமணத்துக்கு முன் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு மதுரை நகரத்து வீதிகளில் திக்கு விஜயம் செய்வது வழக்கம். இந்திய வரலாற்றில் எந்தவொரு பெண் தெய்வமும் இப்படியொரு சிறப்பைப் பெற்றதில்லை" என்கிறார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆம், மதுரையைத் தவிர இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, நேற்று இரவு சிறப்பாக நடந்தது.
இரவு 8.20 முதல் 8.44-க்கள் விருச்சிக லக்னத்தில் சிறப்பு பூஜைகளுடன் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனை இருத்தி வைத்து வேப்பம்பூ மாலை, ராயர் கிரீடம் அணிவித்து, ரத்தினக் கற்கள் பதித்த செங்கோல் மீனாட்சியம்மனிடம் வழங்கப்பட்டு மதுரையின் அரசியாகப் பட்டம் சூட்டப்பட்டது.
சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியும் ஆவணி முதல் சித்திரை வரை சுந்தரேசுவரரும் மதுரையை ஆள்வதாக ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து திருவிளையாடல் புராணத்தில்...
"புங்கவர் மந்தார மழை பொழிய அரும் தவர் ஆக்கம்
புகலத் தெய்வப்
பங்கய மென் கொம்பனையாரார் ஆட
முனி பன்னியர் பல்லாண்டு பாட
மங்கல தூரியம் முழங்க
மறை தழங்க மாணிக்க மகுடம் சூட்டி
எம் கருணைப் பெருமாட்டிக்கு அரச அமைச்சர்
பணியும் தன் இறைமை நல்கா
பால் அனைய மதிக்கவிகை மிசை நிழற்ற மதி கிரணம் பரப்பி அன்ன
கோல மணிக் கவரி புடை இரட்ட மலர் மழைதேவர் குழாம் உடூற்றக்
காலை இளம் கதிர் கயிலை உதித்து என
வெண் கடா யானைக் கழுத்தில் வேப்ப
மாலை முடிப் பெண் அரசை மங்கல தூரியம் முழங்க வலம் செய்வித்தான்"
என்று குறிப்பிடுகிறது.