Published:Updated:

"நடராஜன் ஐயா மாதிரி ஆள்கள் இருப்பதால்தான் இன்னமும் மழை பெய்யுது!"- தனக்கென வாழா தனிப்பெருங்கருணை

நடராஜன் ஐயா
நடராஜன் ஐயா

சொத்துகளைப் பிடுங்கிக்கொண்டு பிள்ளைகளே பெற்றோர்களைத் தவிக்கவிடும் தற்காலச் சூழலில், வடலூர் அருகில் ஒரு மனிதர்... இல்லையில்லை... ஒரு புனிதர் 50 முதியோர்கள் மற்றும் மூன்று குழந்தைகளை ஆதரித்துக் காப்பாற்றிவருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தாய் தந்தையே தெய்வமென அவர்களைத் தோளில் சுமந்த சிரவணன், வளர்ப்பு அன்னையின் சொல்லுக்காக அரியணையைத் துறந்த ஸ்ரீராமன், தந்தை யயாதிக்காக இளமையை தானமளித்த புரூவரஸ், தந்தைக்காகத் திருமணமே செய்து கொள்ளாத பீஷ்மர்... இப்படிப் பெற்றோரைக் கொண்டாடியவர்களைக் கொண்ட நம் தேசத்தில் முதியோர் காப்பகங்கள் பெருகிவருவது வருத்ததற்குரியது!

சொத்துகளைப் பிடுங்கிக்கொண்டு பெற்றோர்களைத் தவிக்கவிடும் தற்காலச் சூழலில், வடலூர் அருகில் ஒரு மனிதர்... இல்லையில்லை... ஒரு புனிதர் 50 முதியோர்கள் மற்றும் மூன்று குழந்தைகளை ஆதரித்துக் காப்பாற்றிவருகிறார் என்ற தகவலை அறிந்ததும் அந்த அன்பரைச் சந்திக்கும் ஆவலுடன் வடலூருக்குப் புறப்பட்டோம்.

வள்ளலார்
வள்ளலார்

வடலூர் - மேட்டுக்குப்பம் ஸித்தி வளாகம் பகுதியில், வடலூர் வள்ளல்பெருமான் ஞான ஸித்தி அடைந்த வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ளது வள்ளலார் சென்னை அறக்கட்டளை சத்திரம். தெய்வத்திரு வீர.சண்முகனார் ஆரம்பித்துவைத்த இந்த அறக்கட்டளையை இப்போது நிர்வகிப்பவர் நடராஜன் ஐயா. அவரைச் சந்திக்கவே சென்றோம்.

`சென்னை சத்திரத்துக்குப் போகிறோம்' என்றதும் அங்கிருந்தோர் பேசத் தொடங்கினர்.

“ஐயாவை எனக்கு 15 வருஷங்களா தெரியும். அவரை மாதிரி ஆள்கள் இருப்பதால்தான் இன்னமும் மழை பெய்யுது. எத்தனை அநாதை முதியவர்களை அவர் கவனித்துக் கொள்கிறார் தெரியுமா... அவங்க எல்லோரையும் ஒரு குழந்தை மாதிரி பராமரித்து வருகிறார் நடராஜன் ஐயா. அவர் ஒரு தெய்வம் மாதிரி சார். உதவிக்குக்கூட ஆள் வைத்துக்கொள்ளாமல் சமைப்பது, சுத்தம் செய்வது, முதியவர்களைப் பராமரிப்பது என சகலத்தையும் அவரே செய்து வருகிறார். கழிவறையைக்கூட அவரே சுத்தம் செய்வார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்” என்றதும் நமக்குள் நடராஜன் ஐயா குறித்து பிரமிப்பு எழுந்தது.

ஒரு துண்டை மட்டுமே இடுப்பில் அணிந்து கொண்டு பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார் நடராஜன். மதியவேளை என்பதால் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நடமாட முடியாத முதியவர்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று உணவு கொடுப்பதும், வெளியிலிருந்து வந்திருந்த சிலருக்கு உணவு பரிமாறுவதுமாகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.

புண்ணிய புருஷர்கள் | நடராஜன் ஐயா
புண்ணிய புருஷர்கள் | நடராஜன் ஐயா

நோயாளிகளும் முதியவர்களும் பசியாறி இருக்க, நடராஜன் ஐயா அடுத்த வேலைக்குத் தயாரானார். அங்கு வளர்க்கப்படும் மாடுகளுக்கு வைக்கோல், கஞ்சித் தண்ணீர் வைத்துவிட்டு வந்தார். கன்றுகள் குடித்தது போகத்தான் மீதம் இருந்தால் பால் கறப்பாராம். வள்ளலார் சொல்லிய பாவங்களில் ஒன்று கன்றை தவிக்க விட்டு பால் கறப்பது இல்லையா, என்று சொல்லி சிரிக்கிறார். இத்தனை வேலைகள் செய்தும் ஓர் அலுப்பில்லை; சலிப்பில்லை. இந்த அற்புத மனிதர் குறித்து மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு