Election bannerElection banner
Published:Updated:

மேல்மலையனூர்: அங்காள பரமேஸ்வரியாகக் காட்சியளித்த அம்மன்... களைகட்டிய தேர்த் திருவிழா!

தேர் திருவிழா
தேர் திருவிழா

கபாலத்தை மயானத்தில் அழித்து கோபக்கனலில் அமர்ந்திருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக தேவர்களும், முனிவர்களும் தேராக மாறி அம்மனைத் தேரில் அமரவைத்து சாந்தப்படுத்திய நிகழ்வாக இன்றளவும் இந்தத் தேர் திருவிழா மேல்மலையனூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று 'மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்'. இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் மகாசிவராத்திரியிலிருந்து 13 நாள்கள் மாசிப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், இந்த வருடமும் திருவிழா சிறப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது மாசித் திருவிழா. முக்கிய நிகழ்வான மயானகொள்ளை விழா மாசி 29 - ம் தேதியும், தீமிதி திருவிழா உற்சவம் பங்குனி 3-ம் தேதியும் சிறப்பாக நடைபெற்றது.

மயானக்கொள்ளை திருவிழா
மயானக்கொள்ளை திருவிழா

பிரம்மஹத்தி தோஷத்தினால் அவதிப்பட்டு வந்த சிவபெருமானுடைய கரங்களில் இருந்த பிரம்மனுடைய கபாலத்தை அழித்து, பிரம்மனின் மனைவியான சரஸ்வதி தேவியின் சாபத்திலிருந்து பார்வதி தேவியாரும், சிவபெருமானும் சாபவிமோசனம் பெற்ற இடமாகக் கூறப்படுகிறது இந்த மேல்மலையனூர். மாசி 29-ம் தேதி, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் மயானகொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்றைய தினத்தில் அம்மனை வழிபட்ட பக்தர்கள், தானியங்கள், காசு, சுண்டல், கொழுக்கட்டை போன்ற பொருட்களைக் கொள்ளை விட்டு தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

அன்றைய தினம் பிரம்ம கபாலத்தை மயானத்தில் அழித்த அம்மனை தேரில் அமரவைத்து சாந்தப்படுத்தும் 7-ம் நாள் நிகழ்வாக நேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் உற்சவம் நடைபெற்றது. கோபக்கனலில் இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக தேவர்களும், முனிவர்களும் தேராக மாரி அம்மனை அமரவைத்து சாந்தப்படுத்தும் நிகழ்வாக இன்றளவும் இந்தத் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. புதியதாக உருவாக்கப்பட்டு, அழகாய் அலங்கரிக்கப்பட்ட தேரினில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். நேற்று (18.03.2021) மேல்மலையனூரில் திருத்தேர் நிகழ்ச்சி என்பதினால் அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தார் மாவட்ட ஆட்சியர்.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்
சாபங்கள் தீர்க்கும் மேல்மலையனூர் மயானக்கொள்ளை மாசித் திருவிழா... எப்போது நடக்கிறது?

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மேல்மலையனூருக்கு சிறப்பு பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாத போதிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தத் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, தானிய வகைகள் போன்றவற்றை சூறை விட்டு தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி மகிழ்ந்தனர் பக்தர்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு