Published:Updated:

"தேவ பிரசன்னம் முடிந்த பின் விசாரணை அறிக்கை..."- மண்டைக்காடு தீ விபத்து குறித்து அமைச்சர் சேகர்பாபு!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடந்த தேவ பிரசன்னம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடந்த தேவ பிரசன்னம்

"திருப்பணி மற்றும் தேவ பிரசன்னம் பணிகள் முடிந்த பின்தான் முழுமையான விசாரணை அறிக்கை வரும். அதில் கோயில் பணியாளர்களின் தவறுகள் தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலத்தில் கோயில்களில் தீயணைப்பு கருவிகள் அமைக்கப்படும்"- அமைச்சர் சேகர்பாபு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கோயிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் திருப்பணிகள் குறித்து அறிந்துகொள்ளும் விதமாக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. நாளை வரை இந்த நிகழ்வு நடக்கிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிடர்கள் பிரசன்னம் பார்க்கும் நிகழ்வை செய்துவருகின்றனர். தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் அம்மனுக்கு கோபம் எதுவும் இல்லை, அம்மனைச் சுற்றியுள்ளவர்களால் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும் அம்மன் புற்று வடிவில் சுயம்புவாக தோன்றியுள்ளார். அந்த விக்ரஹத்திலும் சிறிது சேதம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் ஆய்வு
அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் ஆய்வு

அப்போது பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசினார். தேவபிரசன்னம் பார்க்க இரண்டு நாள் ஆகும் என ஜோதிடர்கள் தெரிவித்தனர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு இரண்டு நாள் ஆனாலும் பரவாயில்லை, அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம். கோயிலில் செய்ய வேண்டிய பரிகாரங்களை முழுமையாக செய்ய முதலமைச்சர் கூறியுள்ளார் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மேற்கூரை பணிக்கு ரூ.50 லட்சமும், தீயணைப்பு மற்றும் மராமத்து பணிகளுக்கு ரூ.35 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் பக்தர்களின் மனம் புண் படாதபடி வழிபாட்டிற்கு விரைந்து முடிக்கப்படும். கோயில் திருப்பணிகள் முடியும் வரைநானும் அமைச்சர் மனோதங்கராஜூம் நேரில் வந்து ஆய்வு செய்வோம். தீ விபத்திற்கான காரணம் கண்டறிய கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட குழு 8 பேரிடம் முதற்கட்ட விசாரணையை முடித்து உள்ளது.

இது யாராலும் ஏற்படுத்தப்பட்ட தீ விபத்து அல்ல. அஜாக்கிரதையால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பணி மற்றும் தேவ பிரசன்னம் பணிகள் முடிந்த பின்தான் முழுமையான விசாரணை அறிக்கை வரும். அதில் கோயில் பணியாளர்களின் தவறுகள் தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலத்தில் கோயில்களில் தீயணைப்பு கருவிகள் அமைக்கப்படும்.

தேவபிரசன்னம்
தேவபிரசன்னம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கொள்கைப்படி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளிக்க இந்து அறநிலையத்துறை தயாராக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அரண்மனை சீரமைப்பது தொடர்பாக நான் அடுத்த முறை வரும்போது எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் சென்று பார்வையிடுவேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு