Published:Updated:

"தமிழக ஆலயங்களின் சிலைகள் அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்!"- அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

"ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கொள்ளை போய் மீட்கபட்ட நகைகள் நீதிமன்றங்களில் இருந்தால் அவற்றை சட்டப்படி மீட்டுக் கோயிலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!" - அமைச்சர் சேகர்பாபு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இணைந்து இரண்டு நாள்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "பத்மநாபபுரம் நீலகண்ட சாமி திருக்கோவில் 10 வருடங்களுக்குள் எப்போது குடமுழுக்கு நடைபெற்றது என்று ஆவணங்களில் தெரியவில்லை. இந்தத் திருக்கோவில் திருப்பணிக்காக ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அதிகநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுக் குடமுழுக்குப் பணிகள் விரைவில் துவங்கப்படும்.

பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

பழைமை வாய்ந்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆறு கோடியே எண்பது லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடங்கப்பட்ட குடமுழுக்கு பணிகள் மந்தநிலையில் நடைபெற்று வந்தன. கோயில் திருப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த வருட இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தபடும். அறநிலையத்துறையை பொறுத்தவரையில் பல்வேறு கோயில்களில் போதுமான பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் இல்லாத நிலை உள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி போதிய பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் விரைவில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கொள்ளை போய் மீட்கபட்ட நகைகள் நீதிமன்றங்களில் இருந்தால் அவற்றை சட்டப்படி மீட்டுக் கோயிலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க அங்கியை மீண்டும் அணிவிப்பது சம்பந்தமாக ஏற்கெனவே சட்டப்பேரவை அறிவிப்பில் இருந்தால் அது சம்பந்தமாக ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பெருமாளுக்குத் தங்க அங்கி அணிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 491 கோயில்களில் ஐந்து கோயில்கள் மட்டுமே வருவாய் தரும் கோயில்களாக உள்ளன. இருந்தாலும் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில்கள் அனைத்தும் குடமுழுக்கு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் அமைச்சர்கள் ஆய்வு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் அமைச்சர்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற 12 சிவாலங்களை இணைத்து ஆனமிகச் சுற்றுலாத் தலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள தமிழகக் கோயில்களின் சாமி சிலைகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. கோயில் சிலைகள், நகைகள் உள்ளிட்டவை மீட்கப்படும். தமிழக ஆலயங்களின் சிலைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு