Published:Updated:

நான்கடி ஆழத்தில் கிடைத்த பல கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள்... தொல்லியல்துறை ஆய்வு நடத்த கோரிக்கை!

நான்கடி ஆழத்தில் அம்மன் சிலைகள் இருப்பதைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிலைகள் இருந்த இடத்தை மூடி வைத்துவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே தேவூரில் ஸ்ரீ தேன்மொழியாள் சமேத ஸ்ரீ தேவபுரீஸ்வரர் திருக்கோயில்  அமைந்துள்ளது.  

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கோட்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்று. தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரையில் உள்ள 85-வது தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார்.

ஐம்பொன்னிலான  சிலைகள்
ஐம்பொன்னிலான சிலைகள்

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுக் கடந்த ஜூலை மாதத்திலிருந்து திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோயிலின் வடக்கு புறத்தில் அமைந்துள்ள நவகிரக மண்டபத்தில், புதிய மண்டபம் அமைக்கப் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது நான்கடி ஆழத்தில் அம்மன் சிலைகள் இருப்பதைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிலைகள் இருந்த இடத்தை மூடி வைத்துவிட்டனர்.

இச்செய்தி தேவூர் பகுதியில் கசிய தொடங்கியது. இத்தகவலறிந்த கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து மற்றும் வருவாய் துறையினர், போலீசார் முன்னிலையில் சம்பவ இடத்தை ஆய்வுசெய்து, அந்த இடத்தைத் தொழிலாளர்களைக் கொண்டே மீண்டும் தோண்டி எடுத்தனர். அப்போது பல்வேறு உயரங்களில் 17 ஐம்பொன் சிலைகள் இருந்தன. இதில் பெரும்பாலானவை அம்மன் சிலைகள். மேலும் தோண்டியபோது திருவாச்சி, சூலம், தூபக்கால் உள்ளிட்ட 30 விதமான பூஜைப் பொருள்கள் கிடைத்தன.

இச்செய்தியறிந்த தேவூர் சுற்றுவட்டார கிராம மக்கள் தேவபுரீஸ்வரர் கோயிலுக்குத் திரண்டனர். சிலைகளைக்  கண்டு மெய்யுறுக வணங்கினர். பின்னர் சிலைகளையும், பூஜை பொருள்களையும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கோயிலில் உள்ள அறையில் அனைத்தையும்  வைத்து பூட்டி சீல் வைத்துப் போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

"இந்தச் சிலைகள் அனைத்தும் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐம்பொன்னிலான  சிலைகள்
ஐம்பொன்னிலான சிலைகள்

இந்நிலையில் சிவசேனா மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம், "தேவூர் கோயிலில் கிடைத்த சிலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். அந்தப் பகுதியில் வேறு ஏதேனும் சிலைகள் உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். அந்தக் கோயிலைச் சுற்றி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யவேண்டும்" என்று மனு அளித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு