நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மேட்டுத்தெருவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பிரபலமான இத்திருக்கோயிலுக்குத் தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்புவாய்ந்த இந்தக் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

அந்த வகையில், சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி வரும் 2023, ஜனவரி 2-ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடக்கவுள்ளது. இதில், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதையொட்டி, ராசிபுரம் ஜனகல்யாண் அமைப்பினர், லட்டுப் பிரசாதம் வழங்க இருக்கிறார்கள். கடந்த 32 ஆண்டுகளாக அவர்கள் இந்தச் சேவையைச் செய்துவருகிறார்கள்.
அந்த வகையில், வரும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது, பத்தர்கள் பிரசாதமாக லட்டுகளை வழங்க ஏதுவாக, அவற்றைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1000 கிலோ கடலை மாவு, 1000 கிலோ சர்க்கரை, 50 கிலோ நெய், 1000 கிலோ கடலை எண்ணெய், 50 கிலோ முந்திரி, ஏலக்காய் 25 கிலோ திராட்சை ஆகியவற்றைக் கொண்டு, 50,000 லட்டுகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

50 தொழிலாளர்கள் லட்டுகளைத் தயாரிக்கும் இந்தப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.