Published:Updated:

மயிலாடுதுறை: அபயாம்பிகை யானைக்குப் புத்தாடை அணிவித்து ஆராதனை - தீபாவளிக் கொண்டாட்டம்!

யானைகள்மீது அலாதிப் பிரியம் கொண்ட பக்தர்கள் சிலர், கடந்த நான்கு ஆண்டுகளாக யானை அபயாம்பிகைக்குப் புத்தாடை அணிவித்து வருகின்றனர்.

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற  ஸ்ரீ அபயாம்பிகா சமேத ஸ்ரீ மயூரநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீன அருளாட்சிக்குட்பட்ட  இத்திருக்கோயிலில் அபயாம்பிகை என்ற 52 வயது கொண்ட பெண் யானை கடந்த  ஐம்பது ஆண்டுகளாக திருக்கோயில் நிர்வாகத்தாலும் யானை பாகன்களாலும்  நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தங்களைப்போலவே தாங்கள் வளர்க்கும் யானைக்கும்  தீபாவளிப் பண்டிகைக்குப் புத்தாடை அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்று யானை பாகன்கள் செந்திலும் வினோத்தும் விரும்பினர். தங்கள் விருப்பத்தை மயூரநாதரைத் தொடர்ந்து தரிசிக்க வரும் பக்தர்களிடம் கூறினர்.

இதனை அறிந்த யானைகள்மீது அலாதிப் பிரியம் கொண்ட பக்தர்கள் சிலர், கடந்த நான்கு ஆண்டுகளாக யானை அபயாம்பிகைக்குப் புத்தாடை அணிவித்து வருகின்றனர்.

அபயாம்பிகை
அபயாம்பிகை

அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மும்பையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் யானைக்குப் புத்தாடையைக் காணிக்கையாகத் தந்தார். மதுரையைச் சேர்ந்த கந்தசாமி ஆனந்த் என்ற பக்தர்  யானைக்கென்றே பிரத்யேக ஆடையை வடிவமைத்து வழங்கினார்.

திருக்கோயிலில் அமைந்துள்ள விநாயகர் சந்நதியில் யானைக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் செய்து  புத்தாடை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். யானை பாகன்களின் வித்தியாசமான இந்த வைபவம் காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு