நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ளூர் மக்கள் வழிபடும் சிறப்பு வாய்ந்த ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. எல்லநள்ளி ஐயப்பன் சேவா சங்கத்தினர் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக ஐயப்பன் மண்டல பூஜை திருவிழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், 30-வது ஆண்டு மண்டல உற்சவம் மற்றும் 9-வதுஆண்டு பூ குண்டம் திருவிழாவுக்கான நிகழ்வு கடந்த 16-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி பூஜை, ஐயப்பன், மஞ்ச மாதா ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நாள்தோறும் நடைபெற்று வந்தன.

சனிக்கிழமை, சிறப்பு அலங்கார பூஜைகளுடன் செண்டை மேளங்கள் முழங்க முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. வான வேடிக்கைகளுடன் நடந்த இந்த முத்துப்பல்லக்கு ஊர்வலத்தில் சிறுமிகள், பெண்கள் விளக்கு ஏந்தி வழிபட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்துள்ள ஏராளமான ஐயப்ப பக்கதர்கள் நேற்று பூ குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை ஐயப்பனுக்கு செலுத்தினர்.
ஐயப்பனுக்கு பூ குண்டம் இறங்குதல் குறித்து தெரிவித்த பக்தர்கள், " 30 ஆண்டுகளாக மண்டல பூஜை உற்சவம் இந்தக் கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக பூக்குண்டம் இறங்கும் நிகழ்வும் நடந்து வருகிறது. நம்மைப் பிடித்த பாவம், பகை, கவலை, வறுமை என அனைத்தும் நெருப்பில் சாம்பலாக மறையும் என்பது எங்களின் நம்பிக்கை. கண்கூடாகப் பலன் கிடைக்கும் இந்த ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறோம் " என்றனர்.